பிரபல பாப் இசை பாடகர் முகம் முடக்கவாத நோயால் பாதிப்பு


பிரபல பாப் இசை பாடகர் முகம் முடக்கவாத நோயால் பாதிப்பு
x
தினத்தந்தி 11 Jun 2022 4:17 AM GMT (Updated: 11 Jun 2022 4:32 AM GMT)

பிரபல பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர் முகம் முடக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

நியூயார்க்,

பிரபல பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர் (வயது 28). டொரண்டோவில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு முன் ரசிகர்களுக்கு அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில் அவர், ஜஸ்டிஸ் உலக சுற்றுலாவானது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தனக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

அவருக்கு ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதனால், ஒரு காதின் பக்கத்தில் உள்ள முக நரம்பு பாதிக்கப்படும். இதனால், முகம் முடக்குவாதம் ஏற்படுவதுடன் கேட்கும் திறனையும் இழக்க கூடிய ஆபத்து உள்ளது.

அந்த வீடியோவில் அவர், மிக முக்கியம். இந்த வீடியோவை காணுங்கள். ரசிகர்களாகிய உங்களை நான் விரும்புகிறேன். உங்களுடைய பிரார்த்தனையில் எனக்கும் இடம் கொடுங்கள் என தலைப்பிட்டு உள்ளார்.

அவர் அதில் கூறும்போது, இந்த கண் துடிப்பு இல்லாமல் உள்ளது. இதனை நீங்கள் காணலாம். எனது முகத்தின் ஒரு பக்கத்தில் என்னால் புன்னகைக்க முடியவில்லை. மூக்கு துவாரம் ஒரு பக்கம் அசைக்க முடியவில்லை.

முகத்தின் ஒரு பக்கம் முழு அளவில் முடங்கி போயுள்ளது. முக முடக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அதனால், அடுத்த எனது நிகழ்ச்சிகளை நான் ரத்து செய்து விட்டதற்காக பெருத்த ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு, என்னால் உடல்ரீதியாக, செயல்பட முடியவில்லை என வெளிப்படையாக தெரிவித்து கொள்கிறேன். இது சற்று தீவிரம் வாய்ந்தது. நீங்கள் அதனை காணலாம் என்று கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, முகத்திற்கு வேண்டிய பயிற்சிகள் அளித்து வருகிறேன். ஓய்வு எடுத்து கொள்கிறேன். நான் என்ன சாதிக்க வேண்டும் என பிறந்தேனோ அதற்காக தயாராகி 100 சதவீதம் முழுமையாக திரும்பி வருவேன் என தெரிவித்து உள்ளார். எனினும், அவர் முழுமையாக குணமடைந்து எப்போது திரும்பி வருவார் என்பதற்கான காலஅளவு எதனையும் தெரிவிக்கவில்லை.

கொரோனா பெருந்தொற்று பரவலின்போது கடந்த 2 முறை அவரது சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், 3வது முறையாக இந்த சுற்றுப்பயணமும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

24 கோடி பேர் தொடரும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான இந்த வீடியோவை, 37 லட்சத்திற்கும் கூடுதலானோர் பார்த்து வேதனை அடைந்து உள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.


Next Story