ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் செயல்களால் அதிருப்தி; அவரை கொல்ல முடிவெடுத்தேன் - கைதான நபர் பரபரப்பு தகவல்!


ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் செயல்களால் அதிருப்தி; அவரை கொல்ல முடிவெடுத்தேன் - கைதான நபர் பரபரப்பு தகவல்!
x

41 வயதான அந்த நபர், வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால், அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

67 வயதான ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக பணியாற்றினார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், இன்று காலை நாரா என்ற பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் ஷின்சோ அபே பேசிக்கொண்டு இருக்கும் போது, யமகாமி என்பவரால் சுடப்பட்டார்.

ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் முன்னாள் உறுப்பினரான 41 வயதான அந்த நபர், வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

பொதுவாக ஜப்பானிய அரசியல்வாதிகள் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு முகவர்களுடன் தான் வெளியே வருகிறார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலும் பொதுமக்களுடன் நெருக்கமாக இருப்பார்கள், குறிப்பாக அரசியல் பிரச்சாரங்களின் போது. அதே போல தான், ஷின்சோ அபேவும் பொதுவெளியில் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார். அவருடைய பாதுகாவலர்கள் சற்று தள்ளியே நிற்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கூட்டத்தில் சாம்பல் நிற உடை அணிந்து கொண்டு நின்ற யமகாகி என்ற அந்த நபர், ஷின்சோ அபேவை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததும் அவரின் பாதுகாவலர்கள் ஓடி வந்து ஷின்சோ அபேவை தூக்கினார்கள். வேறு சில பாதுகாவலர்கள் ஷின்சோ அபேவை சுட்டவரை ஓடி சென்று பிடித்துள்ளனர். இந்த காட்சிகளும் வீடியோவாக பதிவாகி உள்ளது.

அபேவைத் தாக்கிய நபரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஷின்சோ அபேவின் செயல்களால் அவன் அதிருப்தி அடைந்ததால், அவரை கொல்ல முடிவெடுத்து சுட்டுகொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளான்.


Next Story