பிரபல பாப் பாடகி லேடி காகாவின் நாய்களை திருட துப்பாக்கியால் சுட்டவருக்கு 21 ஆண்டு சிறை


பிரபல பாப் பாடகி லேடி காகாவின் நாய்களை திருட துப்பாக்கியால் சுட்டவருக்கு 21 ஆண்டு சிறை
x

லேடி காகாவின் 3 நாய்களையும் நடைபயிற்சிக்கு அழைத்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் அந்த நாய்களை திருட முயன்றனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி லேடி காகா. செல்லப்பிராணிகள் மீது அதிக பிரியம் கொண்ட இவர், 'பிரெஞ்சு புல்டாக்' இனத்தை சேர்ந்த 3 நாய்களை வளர்த்து வருகிறார். இந்த நாய்களை பராமரிக்கும் பணியை ரியான் பிஷர் என்பவர் செய்து வந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரியான் பிஷர், லேடி காகாவின் 3 நாய்களையும் நடைபயிற்சிக்கு அழைத்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் அந்த நாய்களை திருட முயன்றனர்.

இதை ரியான் பிஷர் தடுக்க முயன்றார். அப்போது அந்த 4 பேரில் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சுருண்டு விழுந்ததும் அந்த மர்ம நபர்கள் 2 நாய்களை திருடி சென்றனர். மற்றொரு நாய் அவர்களிடம் சிக்காமல் தப்பி ஓடிவிட்டது.

பின்னர் அந்த நாயை போலீசார் மீட்டு லேடி காகாவிடம் ஒப்படைத்தனர். அதே போல் திருடப்பட்ட 2 நாய்களை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.4.12 கோடி) சன்மானம் வழங்கப்படும் என லேடி காகா அறிவித்த நிலையில் திருடுபோன 2 நாட்களுக்கு பிறகு அந்த 2 நாய்களும் அவரிடம் வந்து சேர்ந்தன.

இதனிடையே நாய்களை திருட அதன் பராமரிப்பாளரை துப்பாக்கியால் சுட்டதாக ஜேம்ஸ் ஹோவர்ட் ஜாக்சன் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், கலிபோர்னியா கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் ஜேம்சுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.


Next Story