பொது மைதானத்தில் மரண தண்டனை நிறைவேற்றம்: மீண்டும் அதிர வைத்த தலிபான்கள்


பொது மைதானத்தில் மரண தண்டனை நிறைவேற்றம்: மீண்டும் அதிர வைத்த தலிபான்கள்
x

Photo Credit: AFP

ஆப்கானிஸ்தான் நாட்டில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. கடந்த 5 தினங்களில் இதேபோன்று நடைபெறும் மூன்றாவது சம்பவம் இதுவாகும்.

இஸ்லமபாத்,

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் அங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது என்று ஆட்சியை பிடித்த போது உறுதி அளித்தனர். இருந்தும் அறிவிப்புக்கு மாறாக தலிபான்கள் செயல்பாடு இருந்து வருகிறது.

இதை மெய்பிக்கும் விதமாக அண்மையில் ஒரு சம்பவம் நடைபெற்றது. அதாவது, கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கொலை செய்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்து ஆப்கானிஸ்தான் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, குடும்பத்தினர் முன்னிலையில் இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.துப்பாக்கியால் சுட்டு இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது. தலிபானின் இந்த செயலுக்கு ஐ.நா கண்டனம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், மேலும் ஒருவருக்கு பொது வெளியில் மரண தண்டனை விதித்து தலிபான்கள் அரசு அதிரவைத்து இருக்கிறது. மைதானம் ஒன்றில் ஆயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையானது நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஜவ்ஸ்ஜான் மாகாணத்தில்தான் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கொலை செய்யப்பட்டவரின் சகோதரரிடம் துப்பாக்கியை கொடுத்த தலிபான்கள், குற்றவாளி மீது துப்பாக்கி சூடு நடத்த வைத்துள்ளனர். துப்பாக்கியால் ஐந்து முறை சுட்டதில், குண்டு பாய்ந்த நபர் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். கடந்த 5 நாட்களில் நிறைவேற்றப்படும் 3-வது மரண தண்டனை இதுவாகும். ஐக்கிய நாடுகள் அவையின் கண்டனத்தையும் மீறி ஆப்கானிஸ்தானில் தொடரும் இந்த சம்பவம் சர்வதேச சமூகங்களை கவலை அடைய வைத்துள்ளது.

1 More update

Next Story