நேட்டோவில் இணைவதற்காக துருக்கியுடன் சமரசம் செய்து கொண்ட சுவீடன் மற்றும் பின்லாந்து - அமெரிக்கா பாராட்டு!


நேட்டோவில் இணைவதற்காக துருக்கியுடன் சமரசம் செய்து கொண்ட சுவீடன் மற்றும் பின்லாந்து - அமெரிக்கா பாராட்டு!
x

இரு நாடுகளும் துருக்கியின் கோரிக்கைகளுக்கு இணங்கி, பாதுகாப்பு பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தன.துருக்கியுடன் முத்தரப்பு ஒப்பந்தம் செய்துகொண்டன.

நிக்கோசியா [சைப்ரஸ்],

மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவது தொடர்பான கோரிக்கையை துருக்கி ஆதரிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் நடவடிக்கையை தொடர்ந்து, ரஷியாவின் அண்டை நாடுகளான பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகள் மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து அதற்கான விண்ணப்பத்தையும் சமர்ப்பித்தனர்.

இதற்கு பெரும்பாலான நோட்டோ உறுப்பு நாடுகள், சம்மதம் தெரிவித்த நிலையில், சுவீடனில் உள்ள தீவிரவாத அமைப்புகளால் துருக்கி தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறது என குற்றம் சாட்டி, சுவீடன் மற்றும் பின்லாந்தின் விருப்பத்தை நோட்டோவின் முக்கிய உறுப்பு நாடான துருக்கி தொடர்ந்து மறுத்து வந்தது. மேலும் சுவீடன் மற்றும் பின்லாந்தின் நோட்டோ விண்ணப்பத்தை துருக்கியின் விட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்யும் என அச்சுறுத்தியும் வந்தது.

இந்த நிலையில், நோட்டோ அமைப்பின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தலைமையில் பின்லாந்து அதிபர் சவுலி நினிஸ்டோ, சுவீடன் பிரதமர் மாக்டலேனா ஆண்டர்சன் மற்றும் துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் இடையிலான சந்திப்பு ஜூன் 28 அன்று நடைபெற்றது.

துருக்கியால் "பயங்கரவாதிகள்" என்று பார்க்கப்படும் குர்திஷ் அமைப்புகளை இரு நாடுகளும் தங்கள் மண்ணில் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதை துருக்கி எதிர்க்கிறது. வடகிழக்கு சிரியாவில் அதன் எல்லை தாண்டிய நடவடிக்கைக்காக இரு நாடுகளும் துருக்கி மீது ஆயுதத் தடையைகளையும் விதித்தன. இவை துருக்கி - சுவீடன் - பின்லாந்து இடையே நீண்டகால பிரச்சினையாக இருக்கிறது.

இந்த நிலையில், இரு நாடுகளும் துருக்கியின் கோரிக்கைகளுக்கு இணங்கி, பாதுகாப்பு பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தன. இரு நாடுகளும் துருக்கியுடன் முத்தரப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது.

எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், சுவீடன் மற்றும் பின்லாந்து "நிலுவையில் உள்ள பயங்கரவாத சந்தேக நபர்களை நாடு கடத்துவதற்கான துருக்கியின் கோரிக்கைகளை விரைவாகவும் முழுமையாகவும் தீர்க்க" ஒப்புக்கொண்டன.மேலும், குர்திஷ் சிறுபான்மையினருக்கு ஆதரவை வழங்க மாட்டோம் என இரு நாடுகளும் உறுதியளித்தன.

இதனைத் தொடர்ந்து, பின்லாந்து மற்றும் சுவீடனின் நோட்டோ உறுப்பினர் விண்ணப்பதை ஆதரிக்க துருக்கி சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக துருக்கி வெளியிட்டுள்ள குறிப்பில், துருக்கி விரும்பியதை பெற்றுள்ளது மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளது. நேட்டோவில் சேரும் சுவீடன் மற்றும் பின்லாந்தின் முயற்சிகளைத் தடுத்த துருக்கிய அதிபர் எர்டோகனின் மிரட்டல் வெற்றி பெற்றது என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நேட்டோ உறுப்பினர் செயல்முறைக்கு சுமார் எட்டு மாதங்கள் வரை ஆகும் என்பதால், இரு நார்டிக் நாடுகளும் முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு இணங்குகின்றனவா என்பதை பொறுத்தே முடிவு செய்வேன் என்று துருக்கிய அதிபர் கூறினார்.

சுவீடன் நாட்டில் உள்ள குர்திஷ் சிறுபான்மையினர், சுவீடன் அரசு தங்களை இக்கட்டான சூழலில் தள்ளிவிட்டதாக நம்புகின்றனர். சுவீடன் நாடாளுமன்றத்தில் உறுப்பினரான குர்திஷ் கிளர்ச்சிப் போராளியான அமினே ககாபாவே கூறுகையில், துருக்கியுடனான ஒப்பந்தத்தை "ஒரு சோகமான மற்றும் இழிந்த கொள்கை" என்று விவரித்தார்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் துருக்கியுடன் சமரசம் செய்து கொள்ள சுவீடன் அரசாங்கத்தின் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மற்றும் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் வலுவான அழுத்தம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உச்சிமாநாட்டில் எர்டோகனுடன் அமர்ந்து, நிலைமையைக் கையாண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்.


Next Story