துருக்கி நிலநடுக்கம்: சமூக வலைதளத்தில் தேவையற்ற அச்சமூட்டும் பதிவுகளை வெளியிட்ட 4 பேர் கைது


துருக்கி நிலநடுக்கம்: சமூக வலைதளத்தில் தேவையற்ற அச்சமூட்டும் பதிவுகளை வெளியிட்ட 4 பேர் கைது
x
Gokul Raj B 7 Feb 2023 1:41 PM GMT

மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் உருவாக்கும் நோக்கில் பதிவுகளை வெளியிட்டதாகக் கூறி துருக்கி போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.

அங்காரா,

துருக்கியில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் அந்த நாட்டை முழுவதுமாக முடக்கி போட்டுள்ளது. துருக்கியின் காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

துருக்கி நிலநடுக்கம் காரணமாக இதுவரை சுமார் 6 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. அந்த இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், உயிர் தப்பியவர்கள் தங்கள் குடும்பத்தினரை தேடி அலையும் காட்சிகள் மனதை பதைபதைக்கச் செய்கின்றன.

இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. குறிப்பாக அதிக பாதிப்பை சந்தித்துள்ள துருக்கியின் ஹடே நகிரில், மீட்பு பணிகள் சரியில்லை என புகார் தெரிவித்து பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதில் சிலர் நிலநடுக்க பாதிப்புகள் குறித்து அச்சமூட்டும் பதிவுகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு தேவையற்ற அச்சம் மற்றும் பீதியை கிளப்பும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 4 பேரை துருக்கி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் உருவாக்கும் நோக்கில் பதிவுகளை பகிர்ந்துள்ள கணக்குகளை கண்டறிந்த பின்னர், நான்கு நபர்களிடமும் விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் அந்த பதிவுகள் குறித்த எந்த தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.

அதே சமயம் உதவி கேட்டு சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிரும் மக்களின் முகவரி மற்றும் இருப்பிடத் தகவல் உடனடியாகக் கண்டறியப்பட்டு, உதவிகளை செய்வதற்காக ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் துருக்கி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story