சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விடுவிப்பு: ஸ்பேஸ் எக்ஸ்-டிராகன் விண்கலத்தில் புறப்பட்ட அமீரக விண்வெளி வீரர்


சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விடுவிப்பு: ஸ்பேஸ் எக்ஸ்-டிராகன் விண்கலத்தில் புறப்பட்ட அமீரக விண்வெளி வீரர்
x
தினத்தந்தி 3 Sep 2023 10:45 PM GMT (Updated: 3 Sep 2023 10:45 PM GMT)

சர்வதேச விண்வெளி மையத்தில் 6 மாத கால ஆய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நியாதி இன்று காலை பூமியை வந்தடைகிறார்.

சர்வதேச விண்வெளி மையத்தில் 6 மாத கால ஆய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நியாதி நேற்று மாலை டிராகன் விண்கலத்தில் புறப்பட்டார். அவர் இன்று (திங்கட்கிழமை) காலையில் பூமியை வந்தடைகிறார்

இது குறித்து துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

அறிவியல் ஆய்வுகள்

அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நியாதி கடந்த மார்ச் 3-ந் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு நீண்ட காலம் தங்கி ஆய்வு நடத்த சக விண்வெளி வீரர்கள் 3 பேருடன் க்ரூ-6 என்ற பெயரிடப்பட்ட குழுவாக சென்றார். இந்த பயணத்திட்டத்தில் அமீரக விண்வெளி வீரருடன் அமெரிக்காவை சேர்ந்த நாசா விண்வெளி வீரரும், குழுவின் கமாண்டருமான ஸ்டீபன் போவன், பைலட் (துணை கமாண்டர்) வாரன் ஹோபர்க் மற்றும் ரஷியாவின் ராஸ்காஸ்மோஸ் விண்வெளி ஏஜென்சியின் விண்வெளி வீரர் ஆண்ட்ரே பெடியேவ் ஆகியோர் உடன் சென்றனர்.

தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 6 மாத காலம் தங்கி அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நியாதி வெற்றிகரமாக 200-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுகள் மற்றும் விண்வெளி நடை ஆகியவற்றை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே அடுத்த கட்ட க்ரூ-7 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிராகன் விண்கலத்தில் ஏறினார்

அதன்படி கடந்த செப்டம்பர் 2-ந் தேதி பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் அமெரிக்காவில் நிலவிய நிலையற்ற காலநிலையை கவனத்தில் கொண்டு ஒரு நாள் பயணம் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலை அமீரக நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் பூமிக்கு திரும்ப டிராகன் விண்கலத்தில் ஏறினார். இதில் அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நியாதி சக விண்வெளி வீரர்களுடன் பிரத்யேக உடை அணிந்து டிராகன் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வெளியேற தயாரானார்.

நேற்று மாலை திட்டமிட்ட அமீரக நேரப்படி பிற்பகல் 3.05 மணியளவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்பட்டு சர்வதேச விண்வெளி மையத்தை விட்டு படிப்படியாக விலகிச்சென்றது. அதன்பிறகு திரஸ்டர் என்ஜின்கள் இயக்கப்பட்டு அதன் பாதை தீர்மானிக்கப்பட்டது.

இன்று தரையிறங்கும்

அதனை தொடர்ந்து அடுத்த நாளான இன்று (திங்கட்கிழமை) காலை 7.15 மணிக்கு டிஆர்பிட் பர்ன் எனப்படும் வளிமண்டலத்தில் நுழையும் நிகழ்வு நடைபெறும். இதில் பூமியின் உள்ளே விண்கலம் நுழையும். இந்த நிலை டிஆர்பிட் பர்ன் எனப்படுகிறது. இதில் பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் வளிமண்டலத்தில் நுழைவதற்காக திரஸ்டர் என்ஜின்கள் 12 நிமிடங்கள் தொடர்ந்து இயக்கப்படும். இது மிகவும் கடினமான நிலையாகும். இந்த நேரத்தில் மிக அதிக வெப்பநிலை காரணமாக தகவல் தொடர்பு சில நிமிடங்களுக்கு துண்டிக்கப்படும். பிறகு வளிமண்டலத்தில் நுழைந்ததும் படிப்படியாக விண்கலம் தரையிறங்கும் இலக்கை நோக்கி கீழே செல்லும்.

புளோரிடா மாகாணத்தின் அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் இலக்கானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பூமியில் இருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் டிராகன் விண்கலத்தின் 4 பாராசூட்கள் விரிக்கப்படும். வினாடிக்கு 25 அடி என்ற வேகத்தில் விண்கலம் தரையிறங்கும். டாம்பா கடற்கரை அருகே தண்ணீரை தொடும் முன்பாக பாராசூட்கள் விடுவிக்கப்பட்டு சரியாக ( திங்கட்கிழமை)அமீரக நேரப்படி இன்று காலை 8.17 மணிக்கு விண்கலம் கடலில் விழும். இந்த பயணம் மொத்தம் சுமார் 17 மணி நேரமாகும்.

முதல் அரபு விண்வெளி வீரர்

சுல்தான் அல் நியாதி பூமிக்கு திரும்பிய பிறகு அமெரிக்காவில் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார். அதன் பிறகு அவர் அமீரகம் திரும்ப உள்ளார். அப்போது அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. 6 குழந்தைகளுக்கு தந்தையான சுல்தான் அல் நியாதி வரலாற்று ஏடுகளில் நீண்டகாலம் தங்கி ஆய்வு நடத்திய மற்றும் விண்வெளி நடை பயின்ற முதல் அரபு விண்வெளி வீரர் என்ற பெருமைகளை பெறுகிறார்.

சுல்தான் நியாதியின் பயணத்தை நேரலையில் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தின் https://www.mbrsc.ae/live/ என்ற இணையதள முகவரியில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைதட்டி மகிழ்ச்சி

சுல்தான் அல் நியாதி பூமிக்கு திரும்பும் நிகழ்வை காண துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து அவருடன் தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அங்குள்ள நிலை குறித்து தொழில்நுட்ப வல்லுனர்கள் கண்காணித்து வந்தனர். இதில் நேரலையில் விண்கலம் பூமிக்கு திரும்பும் நிகழ்வை காண அமீரக கேபினட் விவகாரத்துறை மந்திரி முகம்மது அப்துல்லா அல் கெர்காவி முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்துக்கு சென்றார். அப்போது அவருடன் அந்த மையத்தின் துணைத்தலைவர் தலால் ஹுமைத் பெல்ஹோல் அல் பலாசி வரவேற்று விளக்கம் அளித்தார். விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதும் அனைவரும் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story