எலான் மஸ்க்கை ஆலோசகராக வைத்துக்கொள்ள விரும்புகிறார் விவேக் ராமசாமி


எலான் மஸ்க்கை ஆலோசகராக வைத்துக்கொள்ள விரும்புகிறார் விவேக் ராமசாமி
x
தினத்தந்தி 28 Aug 2023 10:49 AM GMT (Updated: 28 Aug 2023 11:17 AM GMT)

அமெரிக்காவில் 2024-ல் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

வாஷிங்டன்,

ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அக்கட்சி வேட்பாளராக முன்னணியில் உள்ளார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னணியில் இருந்தாலும், அவர் பல கிரிமினல் வழக்குகளில் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், அவர் அதிபர் போட்டியில் தொடர முடியுமா? என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது. இதனால் குடியரசு கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய பெற்றொர்களுக்கு பிறந்தவர் விவேக் ராமசாமி (37). அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தை சேர்ந்தவரான இவர், போட்டியிடும் வேட்பாளர்களிலேயே வயதில் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா எதிர்நோக்கும் சவால்களுக்கு விடை காணும் வகையில் பல இடங்களில் விவேக் கூறும் கருத்துக்களுக்கு பொது மக்கள் மட்டுமின்றி, பல தொழிலதிபர்களும் வரவேற்பு தெரிவிக்கின்றனர். உலகின் நம்பர் 1 கோடீசுவரரும், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா, மற்றும் சமூக வலைதளமான எக்ஸ் (முன்னாள் டுவிட்டர்) ஆகியவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க், களத்தில் உள்ள வேட்பாளர்களிலேயே நம்பிக்கைக்குரிய வேட்பாளர் என கூறி விவேக் ராமசாமியை குறித்து பாராட்டும் விதமாக சமீபத்தில் தனது எக்ஸ் வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அடுத்தாண்டு தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் எலான் மஸ்க்கை ஆலோசகராக நியமிக்க விரும்புவதாக விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார். அயவா மாகாணத்தில் இதுகுறித்து பேசிய அவர்,

"ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் போன்ற புதிய நபர்களை அரசு நிர்வாகத்திற்கு வழிகாட்ட கொண்டு வர விரும்புகிறேன்.

சமீபகாலமாக, எலான் மஸ்க்கை பற்றி நன்கு தெரிந்து வைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். டுவிட்டரில் உள்ள 75 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ததால், அவர் என்னுடைய சுவாரஸ்யமான ஆலோசகராக இருப்பார் என்று எதிர்பார்க்கிறேன். டுவிட்டரில் அவர் செய்த செயல், நிர்வாக ரீதியாக அரசில் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்" என்றார்.


Next Story