2. திருப்பாவை - திருவெம்பாவை


2. திருப்பாவை - திருவெம்பாவை
x
தினத்தந்தி 16 Dec 2016 10:30 PM GMT (Updated: 16 Dec 2016 7:05 PM GMT)

திருப்பாவை வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்கு செய்யுங் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம்! மலர் இட்

திருப்பாவை

வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்கு
செய்யுங் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம்! மலர் இட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

ன்புத் தோழியர்களே! அந்த பரந்தாமனை நம் துணைவனாக அடைய வழிசெய்யும் பாவைநோன்பு மேற்கொள்ள விரத முறைகளைக் கேளுங்கள். திருப்பாற்கடலில் துயில் கொண்டிருக்கும் இறைவன் திருமாலை வணங்கி மகிழ வேண்டும். சான்றோர் களிடம் இறைவனைப் பற்றிய ஐயங்களைக் கேட்டுத் தெளியவேண்டும். வறியோருக்கு இயன்றதை ஈதல் வேண்டும். நோன்பை மேற்கொண்டுள்ள நாம் உணவில் நெய் சேர்க்கவோ, பால் அருந்தவோ கூடாது. சூரிய உதயத்திற்கு முன்பே நீராட வேண்டும். கண்ணில் மை இடக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது. தீய செயல்களை மனதால் நினைப்பதையும், தீய சொற்களைப் பேசுவதையும் தவிர்த்திடல் வேண்டும். பிறரைப் பற்றி அவதூறு கூறக்கூடாது. இவற்றையெல்லாம் பின்பற்றி நம் இறைவனின் அருளைப்பெற நீராட வாரீர் தோழியரே!.

திருவெம்பாவை

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போதுஇப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையும் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும்  மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்புஆர்யாம் ஆர்ஏலோர் எம்பாவாய். 


ழகான அணிகலன்களை அணிந்தவளே! இரவாக இருந்தாலும் பகலாக இருந்தாலும் பேசும்போதெல்லாம் என் பாசமெல்லாம் இறைவனுக்கே என்றிடுவாய். ஆனால் இப்போது மலர்ப்படுக்கை மீதே உன் மனதைப் பறிகொடுத்து விட்டாய்.

சீ, சீ விளையாட்டாகப் பேச இதுவா இடம்? தேவர்கள் வழிபடும் பூப்போன்ற திருவடியை நமக்குத் தந்து அருள்புரிய சிவலோக நாயகன் இந்நிலவுலகில் எழுந்தருளி தில்லைச் சிற்றம்பலத்தில் காத்திருக்கிறான். அவன் அன்பு எங்கே! நாம் எங்கே! ஆராய்ந்து பார்.


Next Story