மாவட்டம் முழுவதும் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா


மாவட்டம் முழுவதும் ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 28 Dec 2016 10:30 PM GMT (Updated: 28 Dec 2016 8:49 PM GMT)

மாவட்டம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி திண்டுக்கல்–மதுரை நான்குவழி சாலையில் சின்னாளபட்டி அருகே அம்பாத்துரை பிரிவில் வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி நேற்று கால

சின்னாளபட்டி,

மாவட்டம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.

அனுமன் ஜெயந்தி

திண்டுக்கல்–மதுரை நான்குவழி சாலையில் சின்னாளபட்டி அருகே அம்பாத்துரை பிரிவில் வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி நேற்று காலை முதலே ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல் சின்னாளபட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி அங்குள்ள 17 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 1,000 லிட்டர் பால் மற்றும் இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதையடுத்து 16 வகை திரவிய அபிஷேகமும், 7 வகையான வர்ணாபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதன் பின்னர் தங்க கவசம் அணிந்து ராஜ அலங்காரத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கொடைக்கானல்

கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள வீர ஆஞ்சநேர்யர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. கொடைக்கானல் சின்மயா மிஷன்தபோவனம் சார்பில் இந்த பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து காயத்ரி அனுமன், பூர்ணாகுதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கொடைக்கானலில் நேற்று சாரல் மழை பெய்தது. இதனை பொருட்படுத்தாமல் ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நெய்க்காரப்பட்டி

பழனியை அடுத்த கரடிக்கூட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. கரடிக்கூட்டம் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள 9½ அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

நத்தம்

நத்தம் கோவில்பட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி மூலவருக்கு துளசி மாலை மற்றும் மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் ஆன மாலைகள் அணிவிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் காணிக்கையாக வடை மாலைகளும் மூலவருக்கு அணிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.


Next Story