ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 29 Dec 2016 12:00 AM GMT (Updated: 28 Dec 2016 10:20 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. வைகுண்ட ஏகாதசி திருவிழா பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

வைகுண்ட ஏகாதசி திருவிழா

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவமிக்கது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று இரவு 7 மணி அளவில் தொடங்கியது.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆனது பகல்பத்து மற்றும் ராப்பத்து என 20 நாட்கள் அபிநயத்துடன் படிப்பதாகும். அதற்காக ரெங்கநாதரிடம் மூலஸ்தானத்தில அனுமதி பெற்று இந்த நாலாயிர திவ்விய பிரபந்தத்தை படிக்க தொடங்குவதே திருநெடுந்தாண்டகம் ஆகும்.
திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி மூலஸ்தானம் முன்பாக உள்ள காயத்திரி மண்டபத்தில் தொடங்கியது. தொடர்ந்து 7.45 மணி முதல் 9 மணி வரை திருநெடுந்தாண்டகம் அபிநயமும், வியாக்யானமும் நடைபெற்றது. இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை திருப்பணியாரம் அமுது செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 10 மணி முதல் 10.30 மணி வரை திருவாராதனமும், 10.30 மணி முதல் 11 மணி வரை திருக்கொட்டாரத்திலிருந்து சிறப்பு அலங்காரமும், இரவு 11 மணி முதல் 11.30 மணி வரை தீர்த்த கோஷ்டியும் நடைபெற்றது.

பகல் பத்து

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி இன்று (29-ந் தேதி) பகல் பத்து தொடங்குகிறது. பகல் பத்து முதல் நாளையொட்டி காலை 7.45 மணியளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து மகர லக்னத்தில் புறப்பட்டு 8.30 மணியளவில் அர்ச்சுன மண்டபம் சேருகிறார்.

காலை 9.15 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது ஜனசேவை நடைபெறுகிறது. பின்னர் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை திருப்பாவாடை கோஷ்டியும், 3 மணி முதல் 4 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரையிடப்படுகிறது.

மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை பொதுஜன சேவையுடன் உபயகாரர் மரியாதை நடைபெறுகிறது. பின்னர் மாலை 6.15 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

சொர்க்கவாசல் திறப்பு

இதன் பின்னர் ஜனவரி 7-ந் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளுவார். 8-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். அப்போது நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் அருள்பாலிப்பார்.
அதை தொடர்ந்து ராப்பத்து நிகழ்ச்சி தொடங்கி 18-ந் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணுசீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Next Story