திருமணத் தடை நீக்கும் சுப்பிரமணியர்


திருமணத் தடை நீக்கும் சுப்பிரமணியர்
x
தினத்தந்தி 20 Jan 2017 1:30 AM GMT (Updated: 19 Jan 2017 12:30 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூருக்கு அருகில் உள்ளது உலைவாய் மலை என்னும் ‘அலவாய்மலை’.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூருக்கு அருகில் உள்ளது உலைவாய் மலை என்னும் ‘அலவாய்மலை’. இந்த மலையின் மையப்பகுதியில் பழமையான சுப்புராயர் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது. கற்றளியால் கட்டப்பட்ட இந்த ஆலயம், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த ஆலயத்தின் மூலவரான சுப்பிரமணிய சுவாமி, ஒரு கையில் வேலும், மற்றொரு கையில் சேவலும் கொண்டு நின்ற கோலத்தில் மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.

வெண்ணந்தூரில் இருந்து அலவாய்மலைக்கு நடந்து தான் செல்ல வேண்டும். வழிநெடுகிலும் விவசாய தோட்டங்கள் நிறைந்து காணப்படுகின்றன. செழித்து வளர்ந்திருக்கும் அந்த பசுமையான தோட்டங்களை ரசித்தபடி அலவாய்மலை அடிவாரம் சென்றால், அங்கு விநாயகரின் சன்னிதி காணப்படுகிறது. மலைப் படியை ஏறும் முன்பாக இவரை வணங்கி வழிபட்டுச் செல்ல வேண்டும். மலைக்குச் செல்லும் படிகள் அனைத்தும் கற்களால் அமைக்கப்பட்டவை. கோவிலின் அருகில் சுனை ஒன்று உள்ளது. அதனை ‘அனுமன் பாலி’ என்றும், ‘கங்கா தீர்த்தம்’ என்றும் அழைக்கிறார்கள். கோவிலுக்கு செல்லும் முன் அந்த தீர்த்தத்தில் இறங்கி, கால் நனைத்துச் செல்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

கோவிலில் மூலவராக அருள்பாலிக்கும் சுப்பிரமணியரை வணங்கியபின், கோவிலின் வடக்குப் பகுதியில் சிறிது தூரம் நடந்து சென்றால், ‘கன்னிமார்கள்’ ஓடை ஒன்று உள்ளது. அதன் அருகில் கன்னி தெய்வங்களின் உருவம் பாறை ஒன்றில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கன்னிமார் தெய்வங்களை வணங்கி வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் விரைவில் நடைபெறும் என்பது ஐதீகம். இந்த ஆலயத்தில் கார்த்திகை மாதம் வரும் அனைத்து திங்கட்கிழமைகளிலும் அன்னதானம் வழங்கப்படும். இந்த அன்னதானத்திற்கு, மலையடிவாரத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பொருட்களை வழங்குவதும் உண்டு.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூரில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்திற்கு, சேலம் நகரில் இருந்து டவுன் பஸ் இயக்கப்படுகிறது. மேலும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்தும் டவுன் பஸ் இருக்கிறது.

–கே.சிங்காரம், நாமக்கல்.

Next Story