மன்னனுக்காக போரிட்ட வீரராகவ பெருமாள்


மன்னனுக்காக போரிட்ட வீரராகவ பெருமாள்
x
தினத்தந்தி 31 Jan 2017 7:30 AM IST (Updated: 30 Jan 2017 6:09 PM IST)
t-max-icont-min-icon

பொன் திணிந்த புனல் பெருகும் பொருநையாற்றங்கரையில் திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி திருநகரம் அமைந்துள்ளது.

பொன் திணிந்த புனல் பெருகும் பொருநையாற்றங்கரையில் திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி திருநகரம் அமைந்துள்ளது. பண்டைக்காலத்தில் இந்தப் பகுதியை தலைநகராக கொண்டு, சந்திரவம்ச அரசரான கிருஷ்ண வர்மா என்ற மன்னன் செங்கோலோச்சி வந்தான். அவன் சமய பொதுவுடைமை கொண்ட பண்பாளன். ஆகையால் அந்த மன்னன், செந்நிற மேனியனான சிவபெருமானுக்கும், அருமறை முதல்வனாம் திருமாலுக்கும் பாரபட்சம் இன்றி திருக்கோவில்களை எழுப்பினான். ‘சிறப்பொடு பூசனை’ என்ற வான்புகழ் கொண்ட வள்ளுவ பெருந்தகையின் வாக்கிற் கிணங்க, தின வழிபாடு, சிறப்பு வழிபாடு (நித்ய, நைமித்ய வழிபாடு) முதலியவற்றை, ஏழிசை பாடல் ஆடலோடு சிறப்புற நடத்தி வந்தான்.

அல்லும், பகலும் மன்னன் ஆலயத் திருப்பணியில் ஈடுபட்டு இருப்பதை கண்ட அண்டை நாட்டு மன்னன், இந்தத் தருணத்தை பயன்படுத்தி கிருஷ்ணவர்மா ஆண்ட நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அண்டை நாட்டு மன்னனின் யானைப் படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை அனைத்தும் தன் நாட்டை சூழ்ந்திருப்பதை அறிந்த மன்னன் அதிர்ச்சியுற்றான். ஆற்றல் மிக்க அந்தப் படையோடு போரிடுவதில் அர்த்தம் இல்லை என்று உணர்ந்தான். எனவே தனது அரண்மனையில் கோவில் கொண்டிருக்கும், தான் நித்தமும் வழிபடும் வரதராஜப் பெருமாளை வழிபட முன்வந்தான். ஆலயத்தின் உள்ளே இருந்தபடி இறைவனின் நாமத்தை இடைவிடாது ஜெபித்தபடி தியானத்தில் ஆழ்ந்தான்.

தனதுபக்தனின் வேண்டுதலுக்கு மனமிறங்கிய வரதராஜ பெருமாள், கிருஷ்ணவர்மாவுக்கு திருவருள் புரிய சித்தம் கொண்டார். பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமனே, கிருஷ்ணவர்மாவின் தோற்றத்திற்கு மாறினார். பின்னர் அமைச்சர்களையும், படைத் தளபதிகளையும் ஒன்று திரட்டி, பகையரனை எதிர்த்து போர் புரிந்தார். இறைவனின் படையை எதிர்த்து போரிட்டு வெற்றி கொள்வார் உண்டோ?.. அண்டை நாட்டு மன்னன் பெரும் படையுடன் வந்தும் தோல்வியைத் தழுவினான்.

வாகை சூடிய வள்ளலான வரதராஜப்பெருமாள், கிருஷ்ணவர்மாவுக்கு அருளைப் பொழியும் ‘‘வீரராகவப் பெருமாளாகக்’ காட்சி கொடுத்தார். தனக்காக இறைவனே வந்து போரிட்டதை எண்ணி மன்னன் அகமகிழ்ந்தான். பின்னர் மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, திருமால் அர்ச்சாவதார மூர்த்தியாக இத்தலத்தில் எழுந்தருளினார் என்பது வரலாறு.

மன்னன் கிருஷ்ணவர்மா தாமிரபரணி ஆற்றங்கரையில் கோபால தீர்த்த கட்டத்துக்கண்மையில் வீரராகவபுரம் என்ற தீர்த்த கட்டத்தையும், வீரராகவ புரம் என்ற சிற்றூரையும் உருவாக்கினான். அந்த ஊரின் நடுவே அருள்மிகு வீரராகவப்பெருமாளை பிரதிஷ்டை செய்தான். தனது அரண்மனையில் எழுந்தருளிய வரதராஜப் பெருமாளை உற்சவ மூர்த்தியாக எழுந்தருள செய்து, வழிபாடு நடத்தி வந்தான். அதன் பின் அவன் நாடு எல்லா பேறுகளையும் பெற்று சீரோடும், சிறப்போடும் விளங்கியது.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்தும், பழைய பஸ் நிலையத்தில் இருந்தும் நடந்து செல்லும் தொலைவில் வீரராகவபுரம் என்ற இடத்தில் மிகவும் கம்பீரமாக அமைந்து உள்ளது இந்தக் கோவில். இத்தலத்து இறைவனின் பெயர் வீரராகவப்பெருமாள். இறைவியின் திருநாமம் வேதவள்ளி தாயார் என்பதாகும். பெருந்தேவி தாயார் என்ற பெயரில் மற்றொரு தாயாரும் உள்ளார். இருவருக்கும் தனித்தனியாக சன்னிதிகள் உள்ளன. இது தவிர சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர், இத்தலத்து இறைவன் மீது சாரங்கா ராகத்தில் அமைந்த ‘‘வரதராஜம் உபாஸ்மஹே’ என்கிற பாடலை இயற்றியுள்ளார்.

இந்தக் கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் நடை பெறுகிறது. சித்திரை மாதம் பத்து நாட்கள் நடைபெறும் பிரமோற்சவம் இங்கு வெகுசிறப்பாக நடைபெறும். நெல்லை சந்திப்பில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளன.

–நெல்லை வேலவன்.

சக்கரத்தாழ்வாருக்கு தங்க கவசம்

இந்தக் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருநாள் அன்று தங்க கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தினத்தன்று சுதர்சன ஜெயந்தி வருகிறது. அதாவது அன்றுதான் சக்கரத்தாழ்வாரின் பிறந்த நாள் ஆகும். எனவே அன்று ஒரு நாள் மட்டும் இங்குள்ள சக்கரத்தாழ்வாருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. அன்றைய தினம் சுதர்சன பெருமாளை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும். தமிழகத்திலேயே மூலவரான சக்கரத்தாழ்வாருக்கு தங்க கவசம் இருப்பது, இந்த கோவிலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story