10 ஆண்டுகளுக்கு பிறகு தா.பழூர் விசுவநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்


10 ஆண்டுகளுக்கு பிறகு தா.பழூர் விசுவநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 20 Feb 2017 9:53 PM GMT (Updated: 20 Feb 2017 9:53 PM GMT)

தா.பழூரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு விசுவநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தா.பழூர்,

விசுவநாதர் கோவில்

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் மிகவும் பழமை வாய்ந்த சிவாலயமாக விசாலாட்சி சமேத விசுவநாதர் கோவில் இருந்து வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2006–ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது சுவாமி மற்றும் அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

அதன்பிறகு பிற தெய்வங்களுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று இருந்தாலும், மூலவர் சுவாமியான விசுவநாதர் மற்றும் அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறவில்லை. இது பக்தர்கள் மத்தியில் பெரும் குறையாக இருந்து வந்தது.

அபிஷேகம்

இதனை தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்துவதற்கு, தா.பழூரில் வசிக்கும் முத்தையன் குடும்பத்தினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு, தா.பழூர் விசாலாட்சி சமேத விசுவநாதர் கோவிலில் பூலோக முறைப்படி திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி, சுவாமி மற்றும் அம்பாளுக்கு மஞ்சள், சந்தனம், களபம், விபூதி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திருக்கல்யாணம்

அதனை தொடர்ந்து, கல்யாண உற்சவரான சந்திரசேகர சுவாமி மற்றும் சந்திரமவுலி தாயாருக்கு பூலோக முறைப்படி திருக்கல்யாண உற்சவம் தொடங்கியது. இதையொட்டி அம்பாளுக்கு பெண் வீட்டார் முறைகளுக்காக மேள, தாளத்தோடு, வாணவேடிக்கையுடன் சுமங்கலி பெண்கள் சீர்வரிசை பொருட்களை முறைப்படி எடுத்து வந்தனர். அதில் அம்பாளுக்கு பட்டுப்புடவை, பழங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் இடம்பெற்றிருந்தன.

அதனை தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டு, மேள தாளத்துடன், சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, சுவாமி மற்றும் அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் சிவாய நம என்றும், தேவார திருமுறை பதிகங்களை பாடியும் பக்தி கோ‌ஷம் எழுப்பி சுவாமியை வழிபட்டனர். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திரளான பக்தர்கள்

அதன்பிறகு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. பூலோக முறைப்படி நடைபெற்ற இத்திருமணத்தை கோவில் குருக்கள் ராமநாதன் செய்து வைத்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த திருக்கல்யாண உற்சவத்தில் தா.பழூரை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.Next Story