தன்னிறைவை அருளும் தட்சிண அகோபிலம்


தன்னிறைவை அருளும் தட்சிண அகோபிலம்
x
தினத்தந்தி 21 Feb 2017 1:46 PM IST (Updated: 21 Feb 2017 1:46 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு சிறப்புகள் கொண்ட கோவிலாகத் திகழ்கிறது, திருவண்ணாமலை மாவட்டம் ஆவணியாபுரத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலாகும்.

ட்சிண அகோபிலம், தேவர்கள் மரங்களாக தவமிருக்கும் மலை, பஞ்ச திருப்பதி தலம், திருமணப்பேறு, குழந்தைப்பேறு அருளும் தலம்,  எம பயம் நீக்கும் நரசிம்மர் வாழும் ஆலயம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட கோவிலாகத் திகழ்கிறது, திருவண்ணாமலை மாவட்டம் ஆவணியாபுரத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலாகும்.

இவ்வுலகையும், உலகில் வாழும் உயிர்களைக் காக்கவும் மகாவிஷ்ணு ஏற்றுக்கொண்ட திரு அவதாரங்கள் பத்து ஆகும். இந்த அவதாரங்களில் குறிப்பிடத்தக்கது நரசிம்ம அவதாரம். இந்த அவதாரம் தோன்றிய தலம், ஆந்திர பிரதேசத்தில் உள்ள அகோபிலம். இதே போன்று தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் தலமாக ஆவணியாபுரம் நரசிம்மர் ஆலயம் விளங்குகிறது.

ஆவணி என்பது  மாதம் மட்டுமல்ல; இதற்கு சிங்கம் என்ற பொருளும் உள்ளது. இத்தலத்தில் உற்சவர் திருமால், லட்சுமி, கருடன், மலையின் பாறை கூட சிங்கமுகத்தில் தான் காட்சி தருகின்றன. இதன் காரணமாகவே இத்தலம் ஆவணியாபுரம் என்ற பெயரால் வழங்கப்பட்டு வருகின்றது. மலைக் குன்றை, ஒரு நிலையில்  நின்று பார்த்தால் சிங்கமுகம் தெரிவது இயற்கையின் அதிசயமா? இறைவனின் அதிசயமா? தெரியவில்லை. இங்குள்ள உற்சவ நரசிம்மர், மூன்று கண்களுடன் காட்சி தருகின்றார்.

தல வரலாறு


புராண காலத்தில் இரண்யகசிபு என்ற மன்னன் கடுந்தவம் புரிந்தான். தேவர்களாலும், மனிதர் களாலும், மிருகங்களாலும், இரவிலோ, பகலிலோ, உள்ளேயோ, வெளியேயோ மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தை பிரம்மனிடம் இருந்து பெற்றான். வரத்தின் பலன் காரணமாக, தேவர்கள் உள்ளிட்ட உலக மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். அனைவரும், தன்னையே தெய்வமாக வழிபடவேண்டும் என்று அகந்தையோடு வலியுறுத்தி வந்தான்.

இந்தநிலையில் இரண்யகசிபுவுக்கு நாரத முனிவரிடம் மந்திர உபதேசம் பெற்ற ஆண் குழந்தை பிறந்தது. பிரகலாதன் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை, நாராயணன் மீது அளவற்ற பக்தி கொண்டு விளங்கினான். இதனால் தன் மகன் என்றும் பாராமல்   பிரகலாதனைக் கொல்லும் முயற்சியில் பலவிதங்களில் முயன்றான் இரண்யகசிபு. ஒருநிலையில் தூணிலிருந்து மனிதனும், மிருகமும் உருவம் கொண்ட நரசிம்மராக வெளிப்பட்ட நாராயணன், இரண்யகசிபுவை, அந்திசாயும் வேளையில், வாயிற்படியில் வைத்து வதம் செய்து அழித்தார். இந்த இடம் ஆந்திராவில் உள்ள அகோபிலமடம் ஆகும்.

இந்த நரசிம்மர் கோலத்தை, பிருகு முனிவருக்காக மீண்டும் காட்டியருளிய தலமே ஆவணியாபுரம் என்னும் தட்சிண அகோபிலம் என்று தல வரலாறு தெரிவிக்கிறது.

பிரகலாதனுக்கு அருள்செய்த நரசிம்மனை, தேவர்களும், முனிவர் களும் போற்றி வணங்கினர். இந்தத் திருக்கோலத்தை ஈரேழு உலகத்திற்கும் காட்டி காத்தருள வேண்டும் என வேண்டி நின்றனர்.

அதற்கு  செவிமடுத்த நரசிம்மர், ‘தேவர்களே! நீங்கள் ஒரு உத்தமமான இடத்தில், குளிர்ச்சிதரும் வெப்பாலை மரங்களாய் நின்று தவம் செய்து வாருங்கள். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்’ என்றார்.

அதன்படியே பூலோகம் வந்த அனைவரும், எழிலான சிறுகுன்றில் வெப்பாலை மரங்களாக தோன்றி தவமிருந்தனர். அங்குவந்த பிருகு முனிவர் அம்மரத்தின் அடியில் தவமிருந்தார்.

சுவாதித் திருநாளன்று, பிருகு முனிவருக்கு ஓராயிரம் சூரியன் சுடரொளியாய் லட்சுமி நரசிம்மர் காட்சி தந்தார். இதனால் மனம் மகிழ்ந்த  பிருகு முனிவர், ‘இத்தலத்தில் நின்ற, கிடந்த கோலத்தையும் காட்டியருள வேண்டும்’ என்று நரசிம்மரை வேண்டினார். அதன் பொருட்டு மலையுச்சியில் திருப்பதி வெங்கடேசப் பெருமாளாக, காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாளாக, திருவரங்கம் ரங்கநாதராக, சோளிங்கர் யோகநரசிம்மராக திருக்காட்சி நல்கினார். இதன்மூலம் பஞ்ச திருத்தலம் ஒரு சேர உருவானது.

மேலும், பிருகு முனிவரின் விருப்பத்திற்கு இணங்க, லட்சுமி நரசிம்மர் தமது வலக்கரத்தால் ஒரு தீர்த்தத்தினை உருவாக்கினார். அதன்பெயர் ‘பாகூ நதி’ என்பதாகும். இது சேயாற்றோடு கலக்கின்றது. இத்திருக்கோவில் தட்சிணா சிம்மாசலம், தட்சண சிம்மகிரி, பஞ்சதிருப்பதி, ஆவணி நாராயணபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

பவுர்ணமி சிறப்பு

வெப்பாலை மரங்களாக தவமிருந்த தேவர்கள், பவுர்ணமி தோறும் சுயவடிவம் பெற்று, லட்சுமி நரசிம்மரைப் பூசித்து வந்தனர். இதனால், பவுர்ணமி அன்றும், சுவாதி நட்சத்திரத்தன்றும், சனிக்கிழமைகளிலும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறு கின்றன. அந்த நாட்களில் இங்கு வரும் பக்தர்களின் கூட்டம் ஏராளம்.

எந்தத் திருக்கோவிலிலும் இல்லாத சிறப்பாக, இத்தலத்தில் உள்ள லட்சுமியின் முகம், வழக்கத்திற்கு மாறாக, சிங்க முகத்தில் அமைந்துள்ளது. நரசிம்மருக்கு சிம்ம முகம் இல்லாததால், பிரம்மனின் தவத்தின் போது, நரசிம்மன் முகத்தை லட்சுமியே பெற்று, இக்கோலம்  ஏற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், கருடன் நரசிம்மரின் முகத்தை பிரதி பலிக்கும் விதமான கண்ணாடியாக சிங்க முகம் கொண்டு காட்சி தருகின்றார்.

இத்தலத்தில் கீழே மூலவர், உற்சவர், சிறிய உற்சவர், தெற்கு நோக்கிய ஐந்து நரசிம்மர் மற்றும் மலைமீது ஒரு நரசிம்மர் என ஒன்பது நரசிம்மர் வடிவங்கள் அமைந்துள்ளன. இது அகோபில ஐதீகத்தைக் கொண்டு விளங்குவதால், அகோபிலத்து தரிசன பலன் இங்கும் கிடைக்கும்  என்பது ஐதீகம். ஐந்து நரசிம்மர்கள் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ளதால், இத்தலம் எம பயம் நீக்கும் தலமாக விளங்குகின்றது. இக்கோலம் வேறெங்கும் காணப்படாத அரிய கோலமாகும்.

இதே போல, ஸ்ரீரங்கம், திருப்பதி, சோளிங்கர், காஞ்சீபுரம் இவற்றுடன் ஆவணியாபுரமும் சேர்ந்து பஞ்சஷேத்திர தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகின்றது. இதனால், சனிக்கிழமையும் உகந்த நாளாகப் போற்றப்படுகின்றது.

ஆலய அமைப்பு


இவ்வாலயம் ஊரின் நடுவே உள்ள சிறிய குன்றின் மத்தியில் லட்சுமி நரசிம்மர், உச்சியில் வெங்கடேசப்பெருமாள் மற்றும் நான்கு திவ்ய தேச ஆலயங்களின் வடிவங்கள் கொண்ட சன்னிதிகள் அமைந்துள்ளன. தற்பொழுது 190 படிக்கட்டுகள் கொண்டு எளிதாக ஏறும் வகையில் இக்கோவில் அமைந்துள்ளது.

முதல்நிலை 60 படிகள் ஏறியதும், பலி பீடம், கொடிமரம் நம்மை வரவேற்கிறது. உள்ளே சென்றதும், இரண்டு கருடாழ்வார்கள், லட்சுமி  நரசிம்மரை வணங்கி நிற்க, அவர்களில் ஒருவரின் முகம் சிங்க முகம் கொண்டு அபூர்வ கோலத்தில் காட்சி தருகின்றது. கருவறையின் வெளியே வலதுபுறம் ஐந்து நரசிம்ம வடிவங்கள், அதன் மேல்புறம் இரு நாக வடிவில் சிலைகளும், அலர்மேல்மங்கைத் தாயார் சன்னிதி, கீழ்ப்புறம் உற்சவ மூர்த்திகள் காட்சிதருகின்றனர்.

வெங்கடேசப் பெருமாள்

மலை உச்சி செல்ல 130 படிகள் வசதியாக அமைந்துள்ளன. உச்சியில் வெங்கடேசப் பெருமாள் நின்ற கோலத்தில் எளிய வடிவில் கிழக்கு முகமாய் அருள் வழங்குகின்றார். இந்தச் சன்னிதியின் வலதுபுறம் முறையே சோளிங்கர் யோக நரசிம்மர், அமிர்தவல்லித் தாயார், திருவரங்கம் ரங்கநாதர், ரங்கநாயகி தாயார், காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், பெருந்தேவித் தாயார் என மூன்று   சன்னிதிகள் கிழக்கு முகமாய் ஒருங்கே அமைந்துள்ளன. வெப்பத்தைத் தணிக்கும் குணம் கொண்ட வெப்பாலை மரம் தல மரமாகும். நரசிம்மரால்  உருவாக்கப்பட்ட பாகூ நதி தலத் தீர்த்தமாகும்.

பிரார்த்தனைத் தலம்

நல்ல விளைச்சலுக்காக வேண்டிக் கொண்ட விவசாயிகள், தங்களின் நில விளைச்சலின் ஒரு பகுதியை நேர்த்திக் கடனாகச் செலுத்துகின்றனர். குழந்தைப் பேறு வேண்டுவோர், சனிக்கிழமைகளில் உபவாசம் இருந்தும், தலத்தில் தங்கியிருந்தும் வரம் பெறுகின்றனர். குழந்தை வரம் கிடைத்தபின் துலாபாரம் மூலம் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். கடன் தொல்லைக்கு மலையுச்சியில் உள்ள வெங்கடேசப் பெருமாளை சரணடைகின்றனர். பகை, பில்லி, சூன்யம் போன்றவை நீங்க   லட்சுமிநரசிம்மரை சரணடைகிறார்கள்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். சனிக் கிழமை தோறும் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையும் கோவில் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்


திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு  வட்டத்தில், ஆவணியாபுரம் அமைந்துள்ளது. ஆரணி – வந்தவாசி சாலையில், ஆரணியில் இருந்து கிழக்கே 15 கி.மீ., வந்தவாசியில் இருந்து மேற்கே 26 கி.மீ., செய்யாறுக்கு தென்மேற்கே 18 கி.மீ., சென்னைக்குத் தென்மேற்கே 130 கி.மீ. தொலைவில் இருக்கிறது ஆவணியாபுரம்.          

– பனையபுரம் அதியமான்.

விழாக்கள்

வைகானச ஆகமத்தில் அமைந்துள்ள வடகலை கோவில் இது. சித்திரைப் பவுர்ணமியில் கொடியேற்றம். தொடர்ந்து பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. சித்திரை சுவாதியில் நரசிம்மர் ஜெயந்தி, ஆவணியில் கிருஷ்ணஜெயந்தி, புரட்டாசி மூன்றாம் சனியன்று பெருமாள் கருடசேவை, ஐப்பசியில் தீபாவளி திருமஞ்சனம், கார்த்திகை தீபம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, தையில் காணும் பொங்கல், மாசி மகம், பங்குனி உத்திரம் என விழாக்களுக்குக் குறையில்லை. மாத சுவாதி நரசிம்மருக்கும், திருவோணம் ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கும் உகந்த நாளாகும்.

Next Story