சுக்ர காயத்ரி மந்திரம்


சுக்ர காயத்ரி மந்திரம்
x
தினத்தந்தி 21 Feb 2017 9:54 AM GMT (Updated: 21 Feb 2017 9:53 AM GMT)

அசுரர்களின் குருவாக விளங்குபவர் சுக்ரன். சிவபெருமானை தியானித்து அழியாத உடலையும், வற்றாத செல்வத்தையும் பெற்றவர்.

அசுரர்களின் குருவாக விளங்குபவர் சுக்ரன். சிவபெருமானை தியானித்து அழியாத உடலையும், வற்றாத செல்வத்தையும் பெற்றவர். இவர் வெண்ணிற திருமேனியைக் கொண்டவர். சிவனது அருளைப் பெற்று, நவக்கிரகங்களில் ஒருவரானார். ஒரு முறை சிவபெருமானின் கோபத்திற்கு ஆளானார் சுக்ரன். அப்போது ஈசனின் கோபத்தை தணித்து சுக்ரனைக் காப்பாற்றினாள் அம்பிகை. இதனால் வெள்ளிக்கிழமையில் அம்பாளை வழிபாடு செய்தால், சுக்ரனின் அருளையும் பெறலாம். வெண் சந்தனம், வெண் மலர், வெண்மணி மாலை, வெள்ளாடை, வெண்குடை, வெண்ணிறக் கொடி ஆகியவற்றைக் கொண்டவர். இவர் கிழக்கு முகமாக அமர்ந்து அருள்பாலிப்பார். சுக்ரனுக்கு, காவியன், ஹிமாபன், குற்றமற்றவன், பார்க்கவன், சுக்லாம்பரதரன், சுக்லபூ‌ஷணன், சூரி, ஆத்மசித், வேதவதோங்க பாரகன், மகாமதி, நீதிமார்க்க காமி, கிராகாதீபன், பிரபு, கருணாசிந்து, தைத்ய குரு உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு.

மிருத சஞ்சீவினி மந்திரத்தால், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி படைத்தவர் சுக்ரன். அவர் அறிவில் சிறந்த பண்டிதராகவும், சகல சாஸ்திரங்களிலும் கரைகண்டவராகவும் திகழ்பவர். மொச்சைப் பயிறு தானம் கொடுத்து இவரது அருளைப் பெறலாம்.

வாமன அவதாரம் எடுத்த திருமால், மூன்றடி மண் கேட்டு மகாபலியிடம் வந்தார். வந்திருப்பது திருமால் என்பதை அறிந்த சுக்ரன், மகாபலியை தானம் கொடுக்க விடாமல் தடுத்தார். மன்னனோ கேட்கவில்லை. உடனே சுக்ரன் வண்டு உருவம் கொண்டு தண்ணீர் வரும் கெண்டியின் துவாரத்தை அடைத்தார். வாமனரோ ஒரு தர்ப்பைப் புல் கொண்டு துவாரத்தைக் குத்தினார். அதில் சுக்ரனின் ஒரு கண் பார்வை இழந்துவிட்டது. இதையடுத்து சுக்ரன், திருமயிலையில் உள்ள சிவலிங்கத்தைப் பூஜித்து கண் பார்வையை திரும்பப் பெற்றார். சுக்ரன்  வழிபட்டதால் இத்தல இறைவன் ‘வெள்ளீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

ஆலயங்களில் நவக்கிரக சன்னிதியில் இருக்கும் சுக்ரனை வழிபடும் போது சுக்ர காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது நற்பலனை வழங்கும்.

சுக்ர காயத்ரி மந்திரம்

‘ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தநு ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ரஹ் ப்ரசோதயாத்’


குதிரைக் கொடியைக் கொண்ட சுக்ர தேவனை அறிந்து கொள்வோம். வில்லைக் கையில் ஏந்தி நிற்கும் அவர் மீது தியானம் செய்வோம். சுக்ர பகவானான அவர் நம்மை காத்து அருள்செய்வார் என்பது இதன் பொருள்.

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால் கலைகளில் சிறந்து விளங்கலாம். விருப்பங்கள் நிறைவேறும். அதிர்ஷ்டம் உண்டாகும். வெற்றி தேடி வரும். நீண்ட ஆயுள் கிடைக்கும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும். இல்லறம் இனிமையாக மாறும். வியாபாரம் செழித்து வளரும். வித்தைகள் மூலம் உலகப் புகழ் பெறலாம். வசதிகள் பெருகும்.

Next Story