கேட்ட வரம் அருளும் கோட்டை மாரியம்மன்


கேட்ட வரம் அருளும் கோட்டை மாரியம்மன்
x
தினத்தந்தி 23 Feb 2017 9:30 PM GMT (Updated: 23 Feb 2017 7:47 AM GMT)

சர்வசக்தி படைத்த தேவியின் அம்சங்களில், ரேணுகாதேவி என்ற சக்தியே ‘மாரியம்மன்’ என்று கூறப்படுகிறது.

ர்வசக்தி படைத்த தேவியின் அம்சங்களில், ரேணுகாதேவி என்ற சக்தியே ‘மாரியம்மன்’ என்று கூறப்படுகிறது. ஜமதக்னி மாபெரும் தெய்வசக்தி படைத்த மகாமுனிவர். இவருடைய பத்தினியே ரேணுகாதேவி. கார்த்திவீரியன் என்னும் பேரரசன், ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் இருந்த காமதேனுவை அடைய விரும்பினான். அதற்கு ஜமதக்னி முனிவர் மறுக்கவே, கார்த்திவீரியன் மூர்க்கத்தனமாக போர் செய்தான். ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர், கார்த்திவீரியனிடம் போரிட்டு அவனது தலையை வெட்டிக் கொன்றார். இந்த பாவம் தீர பரசுராமர் மகேந்திர மலையில் தவம் செய்யும் போது, கார்த்திவீரியனின் புத்திரர்கள் ஜமதக்னி முனிவரை கொன்றனர். கணவன் இருந்ததால், ஜமதக்னி முனிவரின் சிதையில் ரேணுகாதேவியும் உடன் கட்டை ஏறினாள்.

உடனே இந்திரன், சக்தியின் அம்சமான ரேணுகாதேவியை காக்க மழை பொழியச் செய்து அவளது உடலை தீயில் வேகாமல் செய்தான். இருப்பினும் ஆடைகள் முழுவதும் தீயில் எரிந்தன. தீ பட்டதால் உடலில் கொப்பளங்கள் தோன்றின. உடனே ரேணுகாதேவி அருகில் இருந்த வேப்ப மரத்தின் இலைகளை பறித்து கயிறு போல் திரித்து ஆடையாக அணிந்து கொண்டாள். 

அப்போது வானில் தோன்றிய சிவபெருமான், ‘மானிட பெண்களில் நீயும் ஒருத்தி என்று நினைத்து துயர் கொள்ளாதே. நீ என் தேவியாகிய பராசக்தியின் சகல அம்சங்களில் ஓர் அம்சம் ஆவாய். உன் மகிமையை இந்த உலகத்தினர் அறியும் பொருட்டு நடந்த சக்தி தேவியின் விளையாட்டே இது. எனவே, நீ இந்த மண்ணுலகில் தங்கியிருந்து கிராம தேவதையாக ‘மாரியம்மன்’ எனும் பெயர் கொண்டு மக்களுக்கு அருள்வாய் செய்து வா’ என்று அருளினார். இதுவே ‘மாரியம்மன்’ தோன்றிய வரலாறு என்கிறார்கள்.

கோவில் புராணம்

அந்த வகையில் உலகெங்கும் மாரியம்மனாக இருந்து அருள்பாலித்து வரும் இந்த கிராம தேவதை, திண்டுக்கல்லில் ‘கோட்டை மாரியம்மனாக’ வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் தல புராணத்திற்கும், திண்டுக்கல் மலைக்கோட்டைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. 

கி.பி.1788–1790–ம் ஆண்டுகளில் இந்த மலைக்கோட்டையில் இருந்து மன்னர் திப்புசுல்தான் ஆண்டு வந்தார். அப்போது திப்புசுல்தானின் படை வீரர்கள் மலைக்கோட்டையின் கிழக்கு பக்கத்தில் இருந்த கவாத்து (போர் பயிற்சி) செய்யும் மைதானத்தில் மாரியம்மனுக்கு ஒரு சிறு பலிபீடமும், மூலஸ்தான விக்கிரகமும் அமைத்து வழிபட்டனர். அதுவே அவர்களுக்கு காவல் தெய்வமாக இருந்துள்ளது. அவ்வாறு காவல் தெய்வமாக இருந்து அருள்பாலிக்க தொடங்கிய மாரியம்மன், இன்று வரை பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அருளி வருவதாலும், மலைக்கோட்டைக்கு அருகில் கோவில் அமையப்பெற்றதாலும் இந்த அம்மன் ‘கோட்டை மாரியம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள்.

மூலஸ்தான சிலையின் சிறப்பு

இந்தக் கோவிலின் கருவறை ஆரம்பத்தில் மண்ணால் கட்டப்பட்டிருந்தது. பீடம் மட்டுமே இருந்த இடத்தில் பிற்காலத்தில் அம்மனின் மூலவர் சிலை அமைக்கப்பட்டது. அந்த மூல உருவ சிலையை தனியாக எடுக்க இயலாது. அந்த சிலை தரையோடு தரையாக வெகு ஆழத்தில் புதைந்துள்ளது. இந்த சிலை சுமார் 300 ஆண்டுகள் தொன்மையானது என்கிறார்கள். ஆவுடையார் பீடத்தில் வலது காலை தொங்க விட்டபடியும், இடது காலை மடக்கி அமர்ந்த நிலையிலும் அம்மன் வீற்றிருக்கிறாள். காளி அம்மன் போல் கோரைப்பற்கள், இந்த அம்மனுக்கும் உண்டு. அதனால் இந்த அம்மன் காளி அம்சம் பொருந்திய மாரியம்மன் என்பது சிறப்பு.

அம்மனுக்கு எட்டு கைகள் உள்ளன. வலது பக்கம் பாம்புடன் உடுக்கை, கத்தி, வேல், சூலாயுதமும், இடது பக்கம் அரிவாள், வில், மணி, கிண்ணம் போன்றவைகளும் காணப்படுகின்றன. இந்த சிலையின் பின் பக்கத்தில் ஒரு துவாரம் உள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளிலும் காலை 6.20 மணி முதல் 6.40 மணி வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் அம்மன் சிரசில் இருந்து முகத்தில் படிவது சிறப்பு அம்சமாகும்.

இந்த கோவிலின் கொடி மரம், மூலஸ்தான அம்மன், கோபுர கலசம் போன்றவை, முன்புறம் அலங்கார மண்டபத்தில் இருந்து பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யும் படி அமையப்பெற்றது கூடுதல் சிறப்பு. பெண் தெய்வமான மாரியம்மனுக்கு தசாவதாரம் எடுப்பதும், அம்மன் தெப்ப உற்சவத்தின் போது சயன கோலத்தில் காட்சியளிப்பதும் இந்தக் கோவிலில் மட்டும் தான்.

தங்கத் தேர்

கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு தங்கரதம் அமைக்க ராமநாதபுரம் தேவஸ்தானத்தில் இருந்தும், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்தும் வரி இல்லாமல் தங்கம் கொள்முதல் செய்யப்பட்டது. தமிழக அரசின் பூம்புகார் நிறுவனத்தினர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பரம்பரை அறங்காவலர்கள், திண்டுக்கல் விஸ்வகர்ம சங்க நிர்வாகிகள்  முன்னிலையில்  தங்கத்தகடுகள் ஒட்டி தங்கத் தேருக்கான பணிகள் நிறைவு செய்யப்பட்டன.

தங்க ரதத்தில் பிரம்முகி சிலை, இரண்டு குதிரைகள், நான்கு சேடி பெண்கள், ஆறு கந்தர்வர்கள், கோடி பூதம் ஆறு, சூரிய காந்தி பூக்கள் ஆறு, உத்திரையாழி, ஆறு போதியால், கலசத்துடன் கூடிய அலங்கார குடை மற்றும் விநாயகர், முருகன், மாரியம்மன், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, பிரம்மா ஆகிய சாமி விக்கிரகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 12½ அடி உயரத்தில் மிக அழகாக தங்கரதம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தங்க ரதம் 12.3.2011 அன்று கோவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 

இந்த ஆலய கருவறையில் கோட்டை மாரியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். கருவறையை ஒட்டி முன்புறத்தின் தெற்கு பக்கம் விநாயகர் சன்னிதியும், வடக்கு பக்கம் மதுரை வீரன் சுவாமி சன்னிதியும் உள்ளன. வடகிழக்கில் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. பின்பக்கத்தின் தென்புறம் முனீஸ்வரசாமி சன்னிதியும், வடபுறம் கருப்பணசாமி சன்னிதியும் இருக்கிறது. இதுதவிர கோவிலின் நுழைவு வாசல், முன் மற்றும் அலங்கார மண்டபம், அர்த்த மண்டபம், கோவில் வளாகத்தில் உள்ள சிங்க வாகனம், கொலு மண்டபம், கலையரங்கம், திருமண மண்டபம், உணவு கூடம், தங்கத்தேர் ஓடு பாதைகள் அமையப்பெற்றுள்ளன.

குழந்தைகளுக்கு அம்மை கண்டுவிட்டால், பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து அம்மனை மனமுருக வேண்டி தீர்த்தம் வாங்கி சென்று குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். அம்மை விலகியதும் மாவிளக்கு எடுத்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். இந்தக் கோவிலுக்கு இந்து மதத்தினர் மட்டுமல்லாது, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பாகுபாடின்றி வருகை தருவதை மாசித்திருவிழாவில் கண்கூடாக காணலாம். அதன்படி மும்மதத்தின் ஒற்றுமைக்கு இந்தக் கோவில் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது.

மனமுருக வழிபட்டால் கோட்டை மாரியம்மன் கேட்ட வரங்களை அள்ளித்தருவாள் என்பது பக்தகோடிகளின் உறுதியான நம்பிக்கை.

ஜி.கிருஷ்ணன், திண்டுக்கல்.

மாசித்  திருவிழா

சுமார் 100 வருடங்களுக்கு முன்பு கோவிலின் மாசித்திருவிழா 10 நாட்களும், 1956–ம் ஆண்டிலிருந்து 17 நாட்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாசித்திருவிழாவில் சாமி சாட்டுதலுக்கு 3 நாட்கள் முன்பு, அம்மனுக்கு பூத்தமலர் பூ அலங்காரமும், அடுத்தநாள் பூச்சொரிதல் விழாவும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. பூச்சொரிதல் விழாவில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் மலர்களை கொண்டு அம்மனுக்கு புஷ்ப அபிஷேகமும் நடத்தப்படுவது சிறப்பு. இதுதவிர சாட்டுதல், கொடியேற்றம், நாகல்நகர் புறப்பாடு என இன்னும் பிற உற்சவ நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு மாசித்திருவிழா நேற்று (வியாழக்கிழமை) பூ அலங்காரத்துடன் தொடங்கியது. இந்த விழா அடுத்த மாதம் 14–3–2017 வரை நடக்கிறது. அம்மனிடம் வேண்டி வரங்கள் கிடைக்கப்பெற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருவிழா காலங்களில் அங்கப்பிரதட்சனம், தீச்சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், பால்குடம், முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல் உள்பட எண்ணற்ற நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள்.

Next Story