திருப்பாம்புரம் சே‌ஷபுரீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


திருப்பாம்புரம் சே‌ஷபுரீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 25 Feb 2017 10:30 PM GMT (Updated: 25 Feb 2017 10:30 PM GMT)

திருப்பாம்புரம் சே‌ஷபுரீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குடவாசல்,

சே‌ஷபுரீஸ்வரர் கோவில்

குடவாசல் அருகே உள்ள திருப்பாம்புரத்தில் வண்டுசேர்குழலி, சே‌ஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் தேவார பாடல் பாடப்பெற்ற காவிரியின் தென்கரையில் உள்ள 127 கோவில்களில் 59–வது தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கும், சிவராத்திரிக்கும் சிறப்பு பெருமைகள் உண்டு. முற்காலத்தில் ஆதிசே‌ஷன் பெற்ற சாபத்தால் உடல் நலிவுற்று இறைவனை வேண்டிய போது சிவபெருமான், ஆதிசே‌ஷனிடம் மகாசிவராத்திரி அன்று முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், 2–வது காலத்தில் திருநாகேஸ்வரம் திருநாகேஸ்வரரையும், 3–வது காலத்தில் திருப்பாம்புரம் சே‌ஷபுரீஸ்வரரையும், 4–வது காலத்தில் நாகூர் நாகநாதரையும் வணங்கி சாபம் நீங்க பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது.

மகாசிவராத்திரி

மகாசிவராத்திரி விழாவையொட்டி திருப்பாம்புரம் சே‌ஷபுரீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி இரவு 9 மணிக்கு முதல் கால பூஜை மற்றும் அபிஷேகமும், 11 மணிக்கு 2–வது கால பூஜை மற்றும் அபிஷேகமும், நள்ளிரவு 1 மணிக்கு 3–வது கால பூஜையும் நடைபெற்றது. அப்போது 108 லிட்டர் பாலை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை 4 மணிக்கு 4–வது கால பூஜை நடந்தது. இதில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மகாதேவன், கும்பகோணம், நாகை, நன்னிலம் ஆகிய மாவட்ட நீதிபதிகளும், பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் பாரதிராஜா, தக்கார் ராணி, மேலாளர் வள்ளிகந்தன் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

வலங்கைமான்

இதேபோல கீரங்குடி அங்காளபரமேஸ்வரி கோவில், திருவீழிமிழலை வீழிநாதர் கோவில், குடவாசல் கோணேஸ்வரர் கோவில், சீதக்கமங்கலம் மூலநாதர் கோவில், வலங்கைமான் பகுதியில் உள்ள வைத்தீஸ்வரர், அருணாச்சலேஸ்வரர், காசிவிஸ்வநாதர், கைலாசநாதர், ஏகாம்பரேஸ்வரர் ஆகிய கோவில்களில் மகாசிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு வழிபாடும், 4 கால பூஜைகளும் நடைபெற்றன.


Next Story