1. இயேசு சொன்ன உவமை


1. இயேசு சொன்ன உவமை
x
தினத்தந்தி 28 Feb 2017 12:15 AM GMT (Updated: 27 Feb 2017 12:30 PM GMT)

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பிரான் இவ்வுலகில் தோன்றினார் என்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

நற்செய்தி சிந்தனை

- செம்பை சேவியர்

ராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பிரான் இவ்வுலகில் தோன்றினார் என்பது ஒரு வரலாற்று நிகழ்வாகும். அவரின் தோற்றமும் செயல்பாடுகளும், நற்செய்திகளாக எடுத்துரைக்கப்படுகின்றன. ‘மாற்கு’, ‘மத்தேயு’, ‘யோவான்’, ‘லூக்கா’ ஆகிய நற்செய்தியாளர்கள், இதை தெரிவித்துள்ளனர்.

இயேசு பிரான் இவ்வுலகில் வாழ்ந்தபோது, பல அற்புதங்களைச் செய்தார் என்பதை, நற்செய்தி வாயிலாக அறிகிறோம்.

ஏழை, எளிய மக்களோடு இயேசு பிரான் வாழ்ந்தார் என்பதுதான் அவரின் தனித்தன்மையாகும். அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு அவர் உவமைகளை எடுத்துக் கூறி போதித்தார். உவமைகள் வழியாக, உண்மைகளை உணர்த்தினார். மக்களின் பாவங்களைப் போக்கி, அவர்களை மீட்டு, விண்ணுலகு செல்ல வழிகாட்டினார்.

‘இவர் யார்? இவர்தான் இறை மகன்’– இதுதான் கிறிஸ்தவத்தின் தத்துவம்.

இயேசு பிரான் இவ்வுலகில் போதிக்கும்போது உவமைகளை எப்படிக் கையாண்டார் என்பதை நோக்குவோம்.

இயேசு வழக்கம்போல, கடற்கரை ஓரம் சென்றார். மக்கள் கூட்டம் திரண்டிருப்பதைக் கண்டார். கடலில் நின்று கொண்டிருந்த ஒரு படகில் ஏறினார். அவருடைய பேச்சைக் கேட்க மக்கள் ஆர்வமுடன் இருந்தனர்.

‘இதோ! கேளுங்கள்...’ என்று பேச்சைத் தொடங்கினார்.

‘‘விதை விதைக்கும் ஒருவர் விதைக்கப் புறப்பட்டார். விதைகளை விதைத்தார். விதைக்கும்போது சில விதைகள் வழியோரத்தில் விழுந்தன. விழுந்த விதைகளைப் பறவைகள் பறந்து வந்து உண்டு சென்றன. சில விதைகள் பாறைகளில் விழுந்தன. அவை முளைத்தன. மண்ணும் ஈரமும் இல்லாததால் வெயிலில் காய்ந்து கருகி விட்டன.

வேறு சில முட்செடிகளின் நடுவே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து, முளைத்தவைகளை அமுக்கி விட்டன. ஆகவே அவையும் சரிவர வளரவில்லை.

ஆனால் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்தன. சில முப்பது மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில நூறு மடங்காகவும் விளைந்து விளைச்சலைக் கொடுத்தன. ஆகவே கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்’’ என்றார்.

அங்கிருந்தவர்களுக்கு விதை பற்றிய செய்திகள் விளங்கின. ஆனால் அதன் உட்பொருள் என்ன என்பதை அவர்களால் அறிய முடியவில்லை. அதை அறிந்த இயேசு பிரான், அதன் உட்பொருளை விளக்கினார்.

‘இறைவனின் வார்த்தையை சொல்பவர், ‘விதைப்பவர்’ ஆவார். வழியோரத்தில் விழுந்த விதைகளைப் போல, சிலர் அந்த வார்த்தைகளைக் கேட்கின்றனர். சிறிது நேரத்தில் சாத்தான்கள் உள்ளே புகுந்து, பறவைகளைப் போல, அந்த வார்த்தைகளை, எடுத்துச் சென்று விடுகின்றன. பாறையில்  விதைக்கப்பட்ட விதைகளைப் போல, சிலர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்கள். விதைகள், வேர் பிடிக்க இயலாததால், இவ்வார்த்தைகள் சிறிது காலத்தில் உள்ளத்தில் இருந்து வெளியேறி விடுகிறது. முட்செடிகளுக்கு இடையிலே விளைந்த விதைகளைப் போல, வார்த்தைகளைக் கேட்டவர்கள், உலகக்  கவலையில் மூழ்கி, அவற்றில் இருந்து விடுபட முடியாமல், விட்டு விடுகின்றனர். நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப் போல, சிலர் இறை வார்த்தையை ஏற்றுக் கொண்டு, பயனளிக்கின்றனர்’ என்று கூறினார்.

மக்கள் அவரின் உவமைப் பேச்சைப் புரிந்து கொண்டனர். எவ்வளவு ஆழமான கருத்தையும், எளிய உவமைகளால் விளக்க முடியும் என்பதற்கு ‘விதைக் கதை’ ஒரு சான்றாகிறது.

புனித மாற்கு என்ற நற்செய்தியாளர் இச்செய்தியை எடுத்  துரைக்கிறார்.

இனி ‘வழியோரம்’, ‘கற்பாறை’, முட்புதர்’, ‘நல்ல நிலம்’ என்ற நான்கு இடங்களையும் ஆராய்வோம்.

வழியோரம்: வழியோரம் விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள் யார்? இவர்கள் இறை வார்த்தையைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்கள். இன்னும் சொல்லப் போனால், இவ்வார்த்தை நமக்குத் தேவையில்லை என்றும் கருதுபவர்கள். ஆகவே  ‘சாத்தான்’ இவர்களை எளிதாக அடிமைப்படுத்தி விடுகிறது.

கற்பாறை: அடுத்து கற்பாறையுள்ள இடத்தை எடுத்துக் கொள்வோம். இவ்விதைகளுக்கு ஒப்பானவர்கள் யார்? இவர்கள் கடின மனம் கொண்டவர்கள். முழு நம்பிக்கை இல்லாதவர்கள். இறை வார்த்தையை ஆர்வத்துடன் கேட்பார்கள். துன்பங்கள், சவால்கள் போன்றவற்றை எதிர் கொள்ள மாட்டார்கள். ஆணவத்தாலும் அகங்காரத்தாலும் கருகி விடுவார்கள்.

முட்புதர்: முட்புதர்களின் நடுவே விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள் யார்? இவர்கள், இறை வார்த்தையை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் ஆர்வம் இல்லாதவர்கள். அதிகமான ஆசைகளை வளர்த்துக் கொள்பவர்கள். ஆடம்பர வாழ்க்கையை விரும்புபவர்கள். இறை வார்த்தை இவ்வித எண்ணங்களால் அமுக்கப்படுகின்றன.

நல்ல நிலம்: நம்பிக்கையும், மன உறுதியும் கொண்டவர்கள், நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப் போன்றவர்கள். இவர்கள் கைக்கொண்ட உறுதிப்பாட்டால், நல்ல பலனைத் தருகிறார்கள்.

இவ்விதமான உவமைகளால், இயேசு பிரான் மக்களுக்குப் போதித்து அவர்களை நல்வழிபடுத்தினார். புரிந்து கொள்ள இயலாத மக்களை புரிந்து கொள்ள வைக்க, அவரின் எளிய, நடைமுறை உவமைகள் கை கொடுத்தன.

சிந்தனை: இந்த நான்கு வகை நிலங்களில் நாம் எந்த வகை நிலமாக இருக்கப்போகிறோம். இவ்வுலக வாழ்வில், உலகத்தோடு ஒத்துப்போக, நம் மனம் விரும்புகிறது. உலகத்தோடு ஒத்துப் போவது எளிமையானது என்று தோன்றுகிறது.

இயேசுவின் சிந்தனை இவ்வுலகத்தோடு முடிந்து விடுவதில்லை. விண்ணக வாழ்வை எடுத்துரைக்கின்றது. விண்ணக வாழ்வைத்தான், பேரின்ப வாழ்வு என்று நாம் கூறுகின்றோம். அப்பேரின்ப வாழ்வை வாழ்வதற்கு இவ்வுலக வாழ்க்கையில் கறை படிய விடாமல் காத்துக் கொள்ள வேண்டும். நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப் போல நூறு மடங்காகப் பயன் தருதல் வேண்டும் இப்புரிதலை உணர்ந்து கொண்டால் எது நல்லது என்பது புலனாகும்.

(தொடரும்)

Next Story