பாவங்கள் போக்கும் தீர்த்த நீராடல்


பாவங்கள் போக்கும் தீர்த்த நீராடல்
x
தினத்தந்தி 7 March 2017 9:53 AM GMT (Updated: 2017-03-07T15:22:51+05:30)

மனிதர்கள் இறைவனை வேண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டவையே விரதங்கள். பல்வேறு விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

11–3–2017 அன்று மாசி மகம்

னிதர்கள் இறைவனை வேண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டவையே விரதங்கள். பல்வேறு விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே பெருமை பெற்றதாக திகழ்கிறது. ஏனெனில் அந்த நாளில்தான் பார்வதிதேவி, தக்கனின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆம்! அந்த நாள் அன்னையின் பிறந்த நாள். சக்தியாகிய உமாதேவியே தன்னுடைய மகளாக பிறக்க வேண்டும் என்று தக்கன் நினைத்தான். இதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். அந்த தவத்தின் பயனாக உமாதேவி, தக்கனின் மகளாக அவதரித்தாள். அந்த தெய்வக் குழந்தைக்கு ‘தாட்சாயிணி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தான் தக்கன். இறுதியில் தன் மகளை, சிவபெருமானுக்கே திருமணமும் செய்து வைத்தான். அன்னை உமாதேவி அவதரித்த நாள் மாசி மகம் என்பதால் அந்த நாள் புனிதமான நாளாக கொண்டாடப்படுகிறது.

மக நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் கேது பகவான். இவர் ஞானத்தையும், முக்தியையும் அருள்பவர். செல்வ வளம் சேரும் யோகத்தை வழங்கக் கூடியவர். மாசி மக நாளை, ‘கடலாடும் நாள்’ என்றும், ‘தீர்த்தமாடும் நாள்’ என்றும் அழைப்பார்கள். இந்நாளில் விரதம் இருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது சிறப்பான பலனைத் தரும். இவ்வாறு செய்வதால் சகல தோ‌ஷங்களும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். மாசி மகத்தில் விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். பின்னர் உலர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு சிவ சிந்தனையுடன், சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். மதியம் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு விட்டு, இரவு பால், பழம் சாப்பிடலாம். அன்றைய தினம் முழுவதும் வேறு எந்த பணிகளிலும் ஈடுபடாமல், இறைவனை நினைக்கும் ஒரே சிந்தனையோடு இருக்க வேண்டும். தேவார, திருவாசக பாடல்களை பாராயணம் செய்யலாம்.

இந்த விரதத்தை கடைப்பிடித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

தீர்த்தமாடும் நிகழ்வின் சிறப்பினை எடுத்துரைக்க, ஒரு புராண வரலாற்றுக் கதையும் கூறப்படுகிறது.

ஒரு முறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோ‌ஷம் ஏற்பட்டது. இதில் அவர் உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டார். அதில் இருந்து விடுபட வருணன், சிவபெருமானை நினைத்து பிரார்த்தித்தான். இந்த நிலையில் வருணன் கட்டுண்டு கிடந்ததால், உலகில் மழையில்லாமல் வறட்சியும், பஞ்சமும் நிலவியது. அனைத்து உயிர்களும் துன்பம் அடைந்தன. இதனால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சந்தித்து முறையிட்டனர். வருண பகவானை விடுவிக்கும்படி ஈசனிடம் வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசி மக திருநாளாகும்.

விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து சிவபெருமானை வணங்கினார். பின்னர் ஈசனிடம், ‘இறைவா! நான் பிரம்மஹத்தி தோ‌ஷத்தால் பீடிக்கப்பட்டு கடலில் கிடந்தபோது, நீருக்குள் இருந்தபடியே உங்களை வணங்கினேன். அதன் பயனாக எனக்கு விடுதலைக் கிடைத்தது. அதே போல் மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி, இறைவனை வழிபடும் அனைவருக்கும் அவர்களின் பாவங்களையும், பிறவி துன்பங்களையும் நீக்கி அரு செய்ய வேண்டும்’ என்று கேட்டார்.

சிவபெருமானும் வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். அன்று முதல் தீர்த்த மாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது. மாசிமகத்தன்று பிரசித்திப் பெற்ற புண்ணிய தலங் களில் ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேசுவரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் பிதுர்க்கடன் செய்வது நலன் தரும்.

தீர்த்தத்தில் நீராடுவது எப்படி?

கடல், புண்ணிய நதிகளில் புனித நீராடும் போது ஒரே ஆடையை மட்டும் உடுத்தி நீராடக் கூடாது. உடுத்திய ஆடையின் மீது இடுப்பில் மற்றொரு ஆடையை சுற்றிக் கொள்ள வேண்டும். தீர்த்தமாடுவதற்கு முன் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி மூன்று முறை சிறிதளவு தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து சிறிதளவு தெளிக்க வேண்டும். ஈர ஆடையுடன் மூழ்கக்கூடாது. இரவில் தீர்த்தத்தில் மூழ்கக்கூடாது.

புனித நீராடுபவர்களுக்கு சிவபெருமானும், மகா விஷ்ணுவும் உரிய பலனை வழங்குவார். ஒரு முறை மூழ்கி எழுந்தால் பாவங்கள் விலகும். இரண்டாம் முறை மூழ்கினால் சொர்க்கப்பேறு கிடைக்கும். மூன்றாம் முறை மூழ்கி எழுந்தால் அவர் புண்ணியத்திற்கு ஈடே கிடையாது. நீராட முடியாதவர்கள் சிவ சிந்தனையுடன் மாசி மக புராணம் படிக்க வேண்டும்.

மாசிமகத்தன்று அதிகாலையில் நீராடி விட்டு துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வாழ்வில் இன்பமும், வெற்றியும் வந்தடையும். மாசி மகத்தில் சரஸ்வதி தேவியை மணம் வீசும் மலர்களால் வழிபட கல்வியில் சிறப்புற்று விளங்கலாம்.

Next Story