கிறிஸ்துவும் நானும்...


கிறிஸ்துவும் நானும்...
x
தினத்தந்தி 9 March 2017 10:30 PM GMT (Updated: 9 March 2017 9:57 AM GMT)

நாம் யாரோடு இணைந்திருக்கிறோம் என்பதை வைத்து, நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை உலகம் அறிந்து கொள்ளும்.

நாம் யாரோடு இணைந்திருக்கிறோம் என்பதை வைத்து, நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை உலகம் அறிந்து கொள்ளும்.

இறைமகன் இயேசுவோடு இணைந்திருந்தால் நமது வாழ்க்கையே அதை பறைசாற்றிவிடும். இயேசுவின் மரணம் உயிர்ப்புக்குப் பின்பு, சோர்ந்து கிடந்த சீடர்கள் துணிச்சலுடன் போதிக்க ஆரம்பித்தனர். அதைக் கன்டு தலைமைச் சங்கத்தினர் அதிர்ந்தனர்.

‘‘பேதுருவும் யோவானும் கல்வியறிவற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப்படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டனர்’’ (திருத்தூதர் பணிகள் 4:13) என்கிறது பைபிள்.

இயேசு நமது வாழ்வின் துடிப்பாக, நமது வாழ்வின் பாடலாக இருக்கிறார். நமக்கு வாழ்வை வழங்குபவர் அவரே.

‘ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்’ என தொடக்கநூல் (2:7) கூறுகிறது.

வாழ்வு என்பது கடவுள் தருகின்ற கொடை, இறைவனைத் தவிர யாரும் அதைத் தர முடியாது.

நமது வாழ்க்கை இறைவனை நோக்கி அமைய வேண்டும் என்பதற்காக தரப்பட்டவை தான் விவிலியத்திலுள்ள இறைவார்த்தைகள். இந்த இறைவார்த்தைகள் நம்மை இறைவன் விரும்பும் வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்கின்றன.

பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர்கள், நீதித்தலைவர்கள், அரசர்கள் போன்றோர் மக்களை ஒன்றிணைத்து இறைவனை நோக்கி மக்களை திருப்பினார்கள். இறைவாக்கினர்களின் முதன்மையான பணி அதுவாகத்தான் இருந்தது.

தவறான வாழ்க்கையை விட்டு இறைவனுக்கு நேராக மக்களை வழி நடத்துவதும், நம்மை மீட்க மேசியா ஒருவர் வருவார் எனும் உறுதியை வழங்குவதுமே அவர்களின் போதனைகளின் மையம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், இறைவனுக்கு நேராய் மனுக்குலம் திரும்ப வேண்டும் என்பதே அவர்களுடைய இறைவாக்குகளின் மையம்.

இறைவன் அதை விடப் பெரிய திட்டம் ஒன்றை வைத்திருந்தார். அதன் விளைவாக இறை மகன் இயேசுவை மனிதனாக உலகிற்கு அனுப்பினார். மனுக்குலம் தன்னை நோக்கி வருவதில் அல்ல, தானே மனுக்குலத்தை நோக்கிப் போவதில் அவருடைய உயரிய அன்பு வெளிப்பட்டது.

மக்கள் கடவுளிடத்தில் வருவதில் அல்ல, கடவுள் மக்களிடத்தில் வருவதில் இறைவன் தரும் வாழ்வு அமைந்திருக்கிறது. கிறிஸ்துவில் இது முழுமையடைகிறது. ‘மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்’ என விவிலியம் அதை விளக்குகிறது.

கிறிஸ்துவுக்கு உள்ளே இருக்கும் போது தான் நமக்கு புதிய வாழ்வு கிடைக்கிறது. ‘ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார்’ (2 கொரி 7) என்கிறது விவிலியம்.

கிறிஸ்துவுக்குள் இருப்பது நமது வாழ்க்கையை கனி தரும் வாழ்வாக மாற்றுகிறது. ‘ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது’ என்கிறார் இயேசு.

கிறிஸ்தவர்கள் இறக்கும் போது, ‘அவர் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து, கிறிஸ்துவுக்குள் இறந்திருக்கிறார்’ என்போம். ஒருவர் கிறிஸ்துவுக்குள் தான் இறந்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த அவர் வாழும் போது கிறிஸ்துவுக்குள் வாழ்ந்தாரா என்பதே அளவுகோலாகிறது.

கிறிஸ்துவுக்குள் வாழ்வது என்பது புதியவாழ்வாகவும், கனி தரும் வாழ்வாகவும் அமைகிறது. கிறிஸ்துவில் வாழும்போது அந்த வாழ்க்கை நிலை வாழ்வாக மாறிவிடுகிறது.

செடியில் நிலைத்திருக்கும் போது மட்டுமே திராட்சைச் செடி மிகுந்த கனி தருகிறது. கடவுள் கிளைகளைச் செப்பனிடுகிறார். தேவையற்றவற்றை நறுக்கி விடுகிறார். இது ஒரு வலி மிகுந்த செயல், ஆனால் இதுவே வலிமை மிகுந்ததாகவும், கனி மிகுந்ததாகவும் மாறிவிடுகிறது.

நாம் செடியில் நிலைத்திருப்பதும், இறைவனால் செப்பனிடப்படுவதும், மிகுந்த கனி தருவதும் ஒரு நோக்கத்திற்காக. அதுவரை எனது வாழ்வை இறைவன் செப்பனிட்டுக் கொண்டே இருக்கிறார், சுத்திகரித்துக் கொண்டே இருந்தார்கள். இறைவனின் சித்தத்தை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்பதற்காக.

சமாரியப் பெண் ஒருவரை இயேசு சந்திக்கிறார். பிற இனத்தவரான அவரை மீட்புக்குள் அழைத்து வருகிறார். ‘நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்’ என்கிறார். நிலைவாழ்வுக்குள் அந்த பெண் இறைவனால் அழைத்து வரப்படுகிறார்.

ஒரு தனி மனிதரை அங்கே இயேசு சந்திக்கிறார். அவரை மீட்புக்குள் கொண்டு வருகிறார். அவர் படிப்படியாக மீட்புக்குள் வருகிறார். முதலில் இயேசுவைப் பார்த்து ‘நீர் யூதர்; நானோ சமாரியப் பெண்’ என்கிறார். பின்பு ‘ஐயா’ என்று மரியாதைக்கு தாவுகிறார். அதன் பின் ‘நீர் ஓர் இறைவாக்கினர்’ என்கிறார். கடைசியில் ‘அவர் மெசியாவாய் இருப்பாரோ?’ எனும் கேள்வியை எழுப்பி, அவரை மெசியாவாய் ஏற்றுக் கொண்டு மீட்படைகிறார்.

நாம் இறைவனோடு பயணிக்கும் பயணத்தில் இத்தகைய படிப்படியான மாற்றங்களை உணர்ந்து கொள்ள முடியும்.

இலேகியோன் எனும் பேய் பிடித்தவனை சுகமாக்கச் செல்லும் போது பேய் அவரை நோக்கி, ‘இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை?’ என கேள்வி எழுப்புகிறது.

அவனுக்குள் இருந்த அத்தனை பேய்களின் விருப்பத்தையும் நிறைவேற்றும் கொடுமையான, அலைக்கழிக்கப்பட்ட வாழ்க்கை அந்த மனிதனுக்கு இருந்தது.

இயேசு அவனை சந்தித்து அவனது வாழ்க்கையை மாற்றினார். பின் அவனை நோக்கி, ‘உம்முடைய வீட்டிற்குத் திரும்பிப்போம்; கடவுள் உமக்குச் செய்ததையெல்லாம் எடுத்துக் கூறும்’ என அவனை கனி கொடுப்பவனாகவும், ஒரு நோக்கத்தைச் செயல்படுத்தக் கூடியவனாகவும் மாற்றினார்.

‘‘இனி ‘நான்’ அல்ல, ‘கிறிஸ்துவே’ என்னில் செயலாற்றுகிறார்’’ எனும் பவுலின் வாசகம் போல உறுதியான பந்தமாய் மாற வேண்டும்.

இத்தகைய மாற்றங்களை நமது வாழ்க்கையில் ஏற்றுக் கொள்வோம். புதுப்பிறப்பெடுப்போம், கனி கொடுப்போம், இறை நோக்கத்தை நிறைவேற்றுவோம். இறை ஆசீர் உங்களை நிரப்பட்டும்.

ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ்,
நல்மேய்ப்பர் ஆலயம், வேளச்சேரி, சென்னை.

Next Story