திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் கல்யாண சுந்தரர்–சங்கிலி நாச்சியார் திருக்கல்யாணம்


திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் கல்யாண சுந்தரர்–சங்கிலி நாச்சியார் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 11 March 2017 10:15 PM GMT (Updated: 11 March 2017 8:36 PM GMT)

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமிகள் உடனுறை வடிவுடையம்மன் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 3–ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சாமி திருவீதி உலா, தேரோட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது.

திருவொற்றியூர்,

விழாவின் 9–வது நாளான நேற்று காலை உற்சவர் கல்யாண சுந்தரர்–சங்கிலி நாச்சியார் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி வசந்த மண்டபம் திறக்கப்பட்டது. பின்னர் சங்கிலி நாச்சியாருக்கு காப்பு கட்டி, சுந்தரருக்கு பூணூல் அணிவிக்கப்பட்டது.

பின்னர் சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத, பக்தர்கள் தாலியை தொட்டு வணங்கி கொடுக்க கல்யாண சுந்தரர்–சங்கிலி நாச்சியார் திருமணம் நடைபெற்றது. சங்கிலி நாச்சியாருக்கு தாலி சாத்தப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த புது தாலியை கழுத்தில் கட்டிக்கொண்டு பழைய தாலியை மாற்றிக்கொண்டனர்.

இதையடுத்து மாலையில் 63 நாயன்மார்கள் வீதி உலாவும், சுந்தரருக்கும்–சங்கிலி நாச்சியாருக்கும் மகிழ மரத்தடியில் குழந்தை ஈஸ்வரர் காட்சி தரும் மகிழடி சேவை நிகழ்ச்சியும், இரவில் தியாகராஜசுவாமி மாடவீதி உற்சவமும் நடைபெற்றது.


Next Story