ஆன்மிகம்

புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் + "||" + Macimaka devotees converged theerthavari

புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி,

உற்சவ மூர்த்திகள்

புதுவையில் மாசிமக தீர்த்தவாரி விழா நேற்று நடந்தது. இதற்காக வைத்திக்குப்பம் கடற்கரையில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த பந்தலுக்கு காலை முதலே மேளதாள முழக்கத்துடன் பல்வேறு கோவில்களிலிருந்து வந்திருந்த உற்சவ மூர்த்திகள் வரத்தொடங்கினர். விழா பந்தலில் அந்தந்த உற்சவ மூர்த்திகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அணிவகுத்தனர்.


தீர்த்தவாரி

இந்த உற்சவ மூர்த்திகளை காண புதுவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களின் வசதிக்கான புதுவை அரசின் சாலைப்போக்குவரத்து கழகம் சார்பில் கடற்கரைக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. கடற்கரையில் அணிவகுத்த உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடந்தது.

இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரிக்காக மயிலம் முருகன், செஞ்சி ரங்கநாதர், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், புதுவை மணக்குள விநாயகர், காந்தி வீதி வரதராஜபெருமாள், பொன்னுமாரியம்மன், தென்கலை சீனிவாச பெருமாள், ராமகிருஷ்ணாநகர் லட்சுமி ஹயக்கிரீவர்,சஞ்சய்காந்திநகர் சுப்பிரமணியர்,கடப்பேரிபாக்கம் பள்ளிகொன்ட பெருமாள், உள்ளிட்ட 100–க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கூட்டம் அலைமோதியது

நேற்று விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தீர்த்தவாரிக்கு வந்த பக்தர்கள் பலர் கடலில் நீராடினார்கள். அவர்கள் கடலில் வெகுதூரம் சென்றுவிடாதபடி வலைகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மேலும் மீனவர்களும் படகுகளில் பக்தர்கள் கடலில் நீராடிய பகுதிகளில் ரோந்து சென்ற வண்ணம் இருந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்களின் பசியை தீர்க்கும் விதமாக ஆங்காங்கே அன்னதானம் நடந்தது. மேலும் பக்தர்களுக்கு நீர்மோரும் வழங்கப்பட்டது.

அன்னதானம்

மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு ஸ்ரீசப்தகிரி அறக்கட்டளை சார்பில் சுபலட்சுமி திருமண மண்டபத்தில் வடை பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தை முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், விஜயவேணி, புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.