வூடூவின் தேவதைகளும், சக்திகளும்!


வூடூவின் தேவதைகளும், சக்திகளும்!
x
தினத்தந்தி 21 March 2017 10:18 AM GMT (Updated: 21 March 2017 10:18 AM GMT)

சர்வ வல்லமையுள்ள இறைவன் ஒருவனே என்பதில் அவர்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. அந்த இறைவன் பாரபட்சமில்லாதவன், அறிய முடியாதவன், நேரடியாக அணுக முடியாதவன் என்பது அவர்கள் நம்பிக்கை.

அமானுஷ்ய ஆன்மிகம்

வூ
டூவைப் பின்பற்றிய மக்கள் இரு வகை உலகங்கள் இருப்பதாக நம்பினார்கள். காண முடிந்த உலகம், காண முடியாத சூட்சும உலகம். காண முடியாததாக சூட்சும உலகம் இருந்த போதிலும், அந்த உலகம் காண முடிந்த உலகத்தைப் போலவே நிஜமானது என்றும் நம்பினார்கள். இரண்டு உலகங்களும் எப்போதும் ஒன்றோடு ஒன்று பின்னி இணைந்தே இருக்கிறது என்பதிலும், இணைந்தே இயங்குகிறது என்பதிலும் அவர்களுக்கு ஆணித்தரமான நம்பிக்கை இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை பொதுவாக மனிதன் இறந்த பின்னர் சூட்சும உலகிற்கு பிரவேசிக்கிறான். ஆவியாக அந்த உலகில் இருக்கிறான். அதனால் இறந்து போன மூதாதையர் அந்த உலகில் இருந்து கொண்டு தமது சந்ததியினரைக் கண்காணிக்கிறார்கள் என்று நம்பினார்கள்.

சர்வ வல்லமையுள்ள இறைவன் ஒருவனே என்பதில் அவர்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. அந்த இறைவன் பாரபட்சமில்லாதவன், அறிய முடியாதவன், நேரடியாக அணுக முடியாதவன் என்பது அவர்கள் நம்பிக்கை. மேலும் இறைவனுக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்த பல தேவதைகள் இருப்பதாக நம்பினார்கள். அந்தத் தேவதைகள் இறைவனுக்கு அடிபணிந்தவை; தங்களுக்கு கொடுக்கப்படும் வேலைகளைத் திறம்பட செய்பவை. அந்தத் தேவதைகளை முறைப்படி வேண்டினால் மனிதன் எந்த உதவியும் பெற முடியும் என்பதும் அவர்களது நம்பிக்கையாக இருந்தது.

கிறிஸ்துவத்தில் பரமபிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்றுநிலை இருப்பதைப் போலவே, வூடூவிலும் சர்வ வல்லமை உடைய கடவுள், தேவதைகள், மூதாதையர் என்ற மூன்றுநிலை இருப்பதாக முன்னரே பார்த்தோம். இந்த முக்கோண நிலையில் மேலாக, உச்சநிலையில் இருப்பவனான இறைவன் பாரபட்சமில்லாதவனும், நெருங்க முடியாதவனாகவும் இருப்பதால் தங்களுக்கு உதவ அதற்கு அடுத்த படியாக கீழ் இரு கோணங்களில் இருக்கும் தேவதைகளையும், தங்கள் மூதாதையர்களையும் வூடூ மக்கள் நாடினார்கள்.

வூடூ மக்கள் கணிப்பு இப்படியாக இருந்தது. சுலபமாக அணுக முடிந்த சக்தி மூதாதையர்களின் ஆவி. தேவதைகள் அளவு சக்தி படைத்தவையாக அந்த ஆவிகள் இருக்க முடியாத போதும், மனிதர்களை விட அதிகம் அறிய முடிந்த நிலையில் அந்த ஆவிகள் இருக்கின்றன. அந்த மூதாதையர் ஆவிகளும் வாழ்ந்த காலத்தில், வாழ்ந்த விதத்தில் சம்பாதித்துக் கொண்டதற்கு ஏற்ப பலதரப்பட்ட சக்திகளுடன் சூட்சும உலகில் இருக்கின்றன. அந்த ஆவிகள் மூலமாகவும், முறைப்படியான வழிபாடுகள், சடங்குகள் மூலமாகவும் தேவதைகளை அணுகினால் ஒரு மனிதன் அந்த மேலான உலகில் இருந்து எல்லா விதமான உதவிகளும் பெற முடியும். இந்த அடிப்படைக் களத்தில் இருந்து தான் வூடூ மக்கள் உயர்சக்திகளை அணுகினார்கள்.

வீரமான மூதாதையர்கள் இருந்தால், ஆபத்துக் காலத்தில் அவர்களை வணங்கி பாதுகாப்பு கேட்டார்கள். ஞானிகளான முன்னோர் இருந்தால் குழப்ப காலத்திலும், கஷ்டகாலத்திலும் சரியாக வழிகாட்டும்படி வேண்டினார்கள். திறமையான வைத்தியரான முன்னோர் இருந்தால், நோய்வாய்ப்பட்ட காலத்தில் அவர்களை வணங்கி நோயிலிருந்து விடுதலை கேட்டார்கள். இப்படி மூதாதையர்களை மட்டும் வணங்கி அணுக பெரியதான சடங்குகள் இருக்கவில்லை. அவர்களது சிலைகளோ, சின்னங்களோ மட்டும் வணக்கம் செலுத்தப் போதுமானதாக இருந்தன. பலபகுதி மக்களுக்கும் மூதாதையர்கள் வேறு வேறாகவே இருப்பதால் இந்த வழிப்பாட்டு சின்னங்களும், சிலைகளும் அந்தந்தப் பகுதி மக்களுக்கும், குடும்பத்திற்கும் மட்டுமே சம்பந்தப்பட்டதாக, வேறு வேறாகவே இருந்தன. அந்த மூதாதையரை வணங்கும் இடங்களும் பொது இடங்களாக இல்லாமல் அந்தக் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட இடங்களாகவே இருந்தன.

ஆனால் தேவதைகள் வூடூவைப் பின்பற்றும் அனைவருக்கும் பெரும்பாலும் பொதுவாகவே இருந்தன. தேவதைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு துறை இருந்தது. மூதாதையர்களை வணங்கிக் கேட்கும் போது எந்தெந்த வேண்டு கோளுக்கு எந்தெந்த மூதாதையர் என்று இருந்ததோ அதே போல, வேண்டுகோளின் தன்மைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட தேவதையை வணங்கும் வழக்கமும் வூடூ மக்களிடம் இருந்தது. ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு தனி சின்னம் இருந்தது. அதற்கான மந்திரங்களும் இருந்தன. சில வூடூ தேவதைகளைப் பார்ப்போம்.

லெக்பா தேவதை (Legba)

இந்த தேவதை தான் சூட்சும, ஆவி உலகத்திற்கான வாயிற்காவலாளி. இந்த தேவதை அனுமதி இல்லாமல் யாரும் மேலுலகத்தில் உள்ள சக்திகளை அணுகவோ, உதவி பெறவோ முடியாது. தோற்றத்தில் சிறுவனாகவோ, தடியூன்றிய கிழவனாகவோ சித்தரிக்கப்படும் லெக்பா, மேலுலக ரகசியங்களை அங்கிருந்து எடுத்து மனிதர்களுக்குத் தர முடிந்ததாக இருக்கிறது.  

எல்லா வூடூ சடங்குகளும் லெக்பாவை வணங்கியே ஆரம்பிக்கின்றன. லெக்பாவிற்கு நன்றி தெரிவித்தே முடிகின்றன. எல்லாச் சடங்குகளின் போதும் மனிதர் களின் கோரிக்கையை மற்ற கடவுளர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்வதும், அந்தக் கடவுளர்களின் ஆணைகளையும், ஆலோசனைகளையும் மனிதர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்வதும் இந்த லெக்பா தேவதை தான். இந்த தேவதையின் தயவு இல்லாவிட்டால் இருவழிச் செய்தியும் எட்டாது என்பதால், முதல் முக்கியத்துவம் இந்த லெக்பா தேவதைக்குத் தரப்படுகிறது.

உலகம் இயங்க முக்கியமான சக்தியாய் உள்ள சூரியனாகவும் லெக்பா கருதப்படுகிறது.

ஓஷுன் அல்லது எர்சுலி தேவதை (Oshun, Erzulie)

அன்பு மற்றும் காதலின் தேவதை இது. அழகுக்கும் இதுவே தேவதை. சுபிட்சத்திற்கும், உணர்ச்சிகளுக்கும் கூட இதுவே அதிபதி. மகிழ்ச்சியை உலகில் பரப்புவதும், பசித்த வயிறுகளுக்கு தாராளமாக சோறிடுவதும் இந்த தேவதை தான்.

லெக்பா தேவதையின் மனைவியாகவும், சந்திரனாகவும் இந்த தேவதை கருதப்படுகிறது.

ஓயா தேவதை (Oya )

காற்று, நெருப்பு, நீர் போன்ற இயற்கை சக்திகளின் அதிபதி இந்த ஓயா தேவதை. தைரியத்திற்கும், சண்டைக்கும் இது தான் அதிபதி. உடனடி மாற்றங்களை ஏற்படுத்தித் தரவும், இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், நிலநடுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தவும் வல்லது. அதிவேகம் இதன் தனித்தன்மை.

அக்வீ தேவதை (Agwe)

சமுத்திரங்களுக்கும், மற்ற நீர்நிலைகளுக்கும் அதிபதி இந்த தேவதை. விலங்குகளுக்கும் தேவதை இது தான். கடற்பயணங்களில் பாதுகாப்புக்கும், மீன்பிடிப்பதற்கும் இந்த தேவதையை அதிகமாக வணங்குகிறார்கள். இந்த தேவதையை வணங்குபவர்களுக்குத் தண்ணீரில் கண்டம் வராது.

லோகோ தேவதை (Loco)

இது விவசாயத்திற்கு அதிபதியான தேவதை. தாவர உலகம் இந்த தேவதை அருளாலேயே செழிக்கிறது. இது ஆரம்பத்தில் மனிதனாக இருந்து பின் தேவதை ஸ்தானத்திற்கு உயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.  

தம்பல்லா தேவதை (Damballa)

லெக்பா தேவதைக்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்துவம் பெற்றது இந்த தம்பல்லா என்னும் நாக தேவதை. மனித மனம், அறிவு இரண்டுக்கும் இதுவே அதிபதி. ஞானத்தைப் பெற உதவுவதும் இந்த தேவதையே. சிறு குழந்தைகளுக்கும் ஆதர வற்றவர்களுக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கும் ஆதரவு அளிக்கும் தேவதை இது. இறந்து போனவர்களின் ஆத்மாக்களுக்கு அடுத்த கட்டத்தை அடைய உதவும் தேவதை இது.   

பேரன் சமேடி (Baron Samedi)

பேரன் சமேடி இறந்தவர்களின் தேவதை. தோற்றத்தில் நீண்ட தொப்பியுடனும், கருப்புக் கோட்டுடனும், கருப்புக் கண்ணாடியுடனும், மூக்கில் பஞ்சுடனும் சித்தரிக்கப்படும் இந்த தேவதை மரண விளிம்பில் உள்ளவர்களைக் காப்பாற்றவும், இறந்தவர்களை உயிர்த்தெழவும் செய்ய முடிந்த தேவதை. புகை பிடிப்பதும், மது அருந்துவதும்  இந்த தேவதையின் குணங்களாக சித்தரிக்கப் படுகிறது. பேசுவது மூக்கில் பேசுவது போல இருக்கும். எந்த கொடிய நோயாக இருப்பினும் குணப்படுத்தும் சக்தி பெற்ற இந்த தேவதையின் அனுமதியின்றி யாரும் இறக்க முடியாது. பேரன் சமேடி சம்பந்தப்பட்ட சடங்குகள் பெரும்பாலும் மயானங்களில் இரவு நேரங்களில் தான் நடக்கும்.

இது போல இன்னும் பல சிறிய தேவதைகள் உண்டு. இந்த வூடூ தேவதைகளில் வூடூ அல்லாத மக்களின் கவனத்தையும் கவர்ந்த தேவதை பேரன் சமேடி தான். ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான லிவ் அண்ட் லெட் டை (Live and Let die)யில் வில்லன் பேரன் சமேடி வேடத்தில் தான் வந்து எல்லோரையும் பயமுறுத்துவான். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் எடுக்கப்பட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் பேரன் சமேடியைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் இருக்கின்றன.  

எல்லா தேவதைகளுக்கும் வரைபடச்சின்னங்கள் இருக்கின்றன. தகுந்த இடத்தைத் தேர்வு செய்து, பின் அதை சுத்தம் செய்து, அங்கு தரையில் எந்த தேவதையை வேண்டுகிறார்களோ அந்த தேவதைக்கான சின்னத்தை வரைந்து சடங்கை ஆரம்பிப்பார்கள்.  இப்படி ஆரம்பிக்கும் வூடு சடங்கில் ஒரு கட்டத்தில் ஒரு உடலில் ஆவி குடியேறி குறிப்பிட்ட காலம் தங்கி கேள்விகளுக்குப் பதில் சொல்லும், வழிகாட்டும் என்பது தான் சுவாரசியமான செய்தி. ஒரு நேரடி அனுபவத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

Next Story