திருமண வரம் அருளும் கல்யாண விரதம்


திருமண வரம் அருளும் கல்யாண விரதம்
x
தினத்தந்தி 5 April 2017 10:29 AM GMT (Updated: 5 April 2017 10:29 AM GMT)

பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க, சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நிற்கும் வேளையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

9–4–2017 அன்று பங்குனி உத்திரம்

ங்குனி மாதம் உத்தர நட்சத்திரத்தன்று கடைப்பிடிக்கப்படும் விரதம் ‘பங்குனி உத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் நிற்க, சந்திரன் உத்திர நட்சத்திரத்தோடு கன்னியில் நிற்கும் வேளையில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. முருகப்பெருமானையும், சிவபெருமானையும் வேண்டி வழிபடும் விரதம் இது.

சபரிமலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஐயப்பன் அவதரித்த நாள் மட்டுமின்றி, மதுரை மீனாட்சி– சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஆண்டாள்– அரங்கநாதர் திருமணம், ராமர்– சீதை திருமணம் என பல தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற தினம் இதுவாகும். எனவேதான் இந்த விரத நாளை, ‘கல்யாண விரதம்’ என்றும் அழைக்கிறார்கள்.

திருமணமாகாதவர்கள், இந்த நன்னாளில் ஆலயங்களுக்குச் சென்று சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும். வேண்டுவோருக்கு வேண்டுபவனவற்றை வழங்கி அருளும் தெய்வங்களை இத்தினத்தில் தேவர்களும் வழிபட்டு வரங்களை பெற்று உள்ளனர்.

விஷ்ணுவின் திருமார்பில் திருமகள் இடம் பிடித்தது, இந்த விரதத்தை கடைப்பிடித்து தான். இந்திரனும் இந்த விரதத்தை மேற்கொண்டுதான் இந்திராணியை கரம் பிடித்தான். பிரம்மன் சரஸ்வதியை தன் நாவில் குடிகொள்ளச் செய்ததும், சந்திரன் இருபத்து ஏழு அழகு வாய்ந்த பெண்களை மணம் முடித்ததும் கூட இந்த விரதத்தை மேற்கொண்டுதான். இந்த விரதத்தை கடைப்பிடித்தவர்களும், அதனால் பலன் அடைந்தவர்களும் எண்ணிலடங்காதவர்கள். இந்த விரதத்தின் மகிமையை அளவிட முடியாது. திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் இன்பம் தரும் இனிய விரதம் இது.

பங்குனிஉத்திர விரதத்துக்கு பல கதைகள் உண்டு. அவற்றில் பார்வதி விரதம் இருந்து சிவபெருமானை மணாளனாக அடையப்பெற்றது முக்கியமானது.

ஒருமுறை உமாதேவி தக்கனுக்கு மகளாக பிறந்து வளர்ந்தார். ஆணவத்தினால் தக்கன் சிவபெருமானை இகழ்ந்தான். இதனால் வெகுண்டெழுந்த  தாட்சாயிணி யாக குண்டத்தில் வீழ்ந்தார்.  தக்கனுக்கு மகளாக பிறந்த காரணத்தினால் ஏற்பட்ட களங்கத்தை போக்கி கொள்வதற்காக பார்வதி என்ற பெயருடன் மலையரசன் இமவான் மகளாக தோன்றினார். அவர் காஞ்சீபுரத்தில் கம்பை ஆற்றில் மணலால் சிவலிங்கம் பிடித்து வைத்து வழிபட்டார். திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.

ஆற்று நீரில் மணலால் செய்த சிவலிங்கம் சிதைந்து விடுமே என்று அன்பால் பதறிய உமையம்மை சிவலிங்கத்தை மார்போடு அணைத்து தழுவினாள். அவரது அன்பை பார்த்து வியந்த பரமேஸ்வரன்  வெளிப்பட்டு உமையம்மையை திருமணம் செய்து கொண்டார். அந்நாளே பங்குனி உத்திர திருநாள் ஆகும்.

பங்குனி உத்திரத்தன்று சிவாலயங்களில் திருக்கல்யாண விழா விமரிசையாக நடத்தப்படுகிறது. பங்குனி உத்திரத்தையொட்டி ஆண்டு தோறும் மகோற்சவம், நடைபெறும். மதுரையில் ஸ்ரீ மீனாட்சி–சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பங்குனி உத்திரத்தில் நிகழ்த்தப்படுகிறது.

சிவனையும் சக்தியையும் ஆடை, அணிகலன்களால் அழகு செய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க வேத பார£ யணங்கள் ஒலிக்க ஹோமம் வளர்த்து மந்திரம் கூறி மாலை அணிவித்து பல பேர் சாட்சியாக தாலிகட்டி வாழ்த்து கூறி அவர்களை திருமணக்கோலத்தில் கண்குளிரக்கண்டு களித்து அருள் பெற்று பக்தர்கள் அகமகிழ்கின்றனர்.

ஊஞ்சலில் இறைவனையும், இறைவியையும் அமர்த்தி பாட்டுப்பாடி ஆட்டுகின்றனர். பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர்.

காஞ்சீபுரம், ஏகாம்பரநாதர் கோவில், திருவாரூர் தியாகராஜர் கோவில்களில் இவ்விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

விரதம் இருப்பது எப்படி?

பங்குனி உத்திர விரதத்தை 8 வயதில் இருந்து 80 வயது உள்ளவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். விரதம் இருப்பதற்கு முன்தினம் இயல்பாக உண்பதைவிட குறைவாக உண்ண வேண்டும். அன்று மூன்று வேளை பழச்சாறு அருந்தலாம். எளிதில் செரிக்கக்கூடிய உணவை சிறிதளவில் ஒரு வேளை உண்ணலாம். பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பவர்கள் காலைக்கடனை முடித்து விட்டு பூஜை பாராயணங்களை செய்து முடிக்க வேண்டும்.

அன்று சிவபெருமானுக்கும் உமையன்னைக்கும் அபிஷேக ஆராதனை செய்து தூப தீப நைவேத்தியங்களை செய்து முடிக்க வேண்டும். ஒரு தம்பதியினரை அழைத்து வந்து அவர்களுக்கு பூஜை செய்து தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து கொடுக்க வேண்டும். வயிறு நிரம்ப அன்னம் படைக்க வேண்டும். சிவபெருமானையும் பார்வதி தேவியையும் திருமணக்கோலத்தில் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும். விரதத்தின் போது மவுனமாக இருப்பது சிறப்பு.

அன்று முழுவதும் இறைவனைப்பற்றிய சிந்தனையில் மூழ்கி சிவபுராணம், கந்தசஷ்டி கவசம் போன்றவற்றைப் படிக்கலாம். இறைவனின் நாமாவளிகளைக் கூறலாம். பட்டினி கிடந்து பசித்திருக்க வேண்டும். துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். கோவிலுக்கு சென்று வணங்கி இரவில் பால், பழம் உண்டு படுக்கையில் படுக்காமல் தரையில் துணி விரித்துப்படுக்கவேண்டும்.

தொடர்ச்சியாக 48 ஆண்டுகள் இந்த விரதத்தை அனுஷ்டித்து வந்தால் அடுத்த ஜென்மத்தில் தெய்வீகப் பிறவியை பெறுவார்கள் என்கின்றன புராணங்கள்.

Next Story