73. தாவரத்திலும் ஜோடி உண்டு


73. தாவரத்திலும் ஜோடி உண்டு
x
தினத்தந்தி 11 April 2017 12:00 AM GMT (Updated: 10 April 2017 12:44 PM GMT)

இந்த உலகில் மனிதர்களையும், விலங்குகளையும், பறவைகளையும் இறைவன் ஜோடியாகவே படைத்தான்.

அறிவோம் இஸ்லாம்

- பாத்திமா மைந்தன்

ந்த உலகில் மனிதர்களையும், விலங்குகளையும், பறவைகளையும் இறைவன் ஜோடியாகவே படைத்தான். இனங்கள் பெருக வேண்டும்; உலகம் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே இணைகளை ஏற்படுத்தினான்.

‘‘இன்னும், உங்களை (ஆண், பெண்) ஜோடியாக நாம் படைத்தோம்’’ (திருக்குர்ஆன்–78:8) என்றும்,

‘‘நீங்கள் சிந்திப்பதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாகப் படைத்தோம்’’ (51:49) என்றும்,

‘‘அவன்தான் ஜோடிகள் யாவற்றையும் படைத்தான். உங்களுக்காக கப்பல்களையும், நீங்கள் சவாரி செய்யும் கால்நடைகளையும் உண்டாக்கினான்’’ (43:12) என்றும்,

‘‘வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும், கால்நடைகளில் இருந்து ஜோடிகளையும் அமைத்து, அதில் உங்களை(ப் பல இடங்களிலும் பல்கி) பரவச் செய்கிறான். அவனைப் போன்று எப்பொருளும் இல்லை’’ (42:11) என்றும் இறைவன் திருமறையில் கூறுகிறான்.

ஆனால் தாவரங்களிலும் ஆண்–பெண் என ஜோடிகள் உண்டு என்பதைப் பண்டை நாட்களில் மனிதர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை.

தாவரம் என்பது மரம், செடி, கொடி, புற்கள் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவாகும். இந்தப் பூமியில் உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஏன் நீரிலும்கூட வாழ்ந்து இந்த உலகத்தில் மற்ற உயிரினங்கள் வாழ வழிவகை செய்பவை தாவரங்கள்.

மண் சரிவு, மண் அரிப்பில் இருந்து பாதுகாக்கவும், மண் வளம், மழை வளம், சுகமான தட்ப வெப்ப நிலை ஆகியவற்றை நிலைப்படுத்தவும் தாவரங்களால் முடியும் என்பதைப் பார்க்கும்போது, மனித வாழ்க்கைக்கு தாவரங்களின் ஆதாரமான பங்கை அறியலாம்.

இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படையாகத் தாவரங்கள் இருக்கின்றன. மிகச் சிறிய நீரில் நேரடியாக வாழும் பாசி வகைகளில் இருந்து 100 மீட்டர் (330 அடி) உயரத்திற்கு மேல் வளரும் ‘சிகொயா’ மரங்கள் வரை, பல்வேறு வகைகள் உள்ளன. சுமார் 3,50,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில் சிலவற்றை மட்டுமே நாம் உணவு, உடை, மருந்து, உறைவிடம் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்துகிறோம். பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசுகள் இதைப் பொறுத்தே நிலைபெறுகிறது. இதைவிட முக்கியமாக 100 கோடி (பில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாவரங்களின் பச்சையத்தால் தான் (குளோரபில்) இப்போது நாம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவை கிடைக்கின்றன என்பதை அறியும்போது தொழில் உலகின் அடித்தளமே தாவரங்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தாவரங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் நிலையாக இருப்பதால் அவற்றை ‘நிலைத்திணை’ என்கிறார்கள். மனிதர்களும், விலங்குகளும் நகர்வதால் ‘நகர் திணை’ எனலாம்.

ஆறறிவுடைய மக்கள் உயர்திணை. திணையாவது ஒழுக்கம். உயர்ந்த ஒழுக்கம் உடையவர் என்பதை இந்த குறியீடு உணர்த்து கிறது. இதில் ஆளும் தன்மை உடையவர்கள் ஆண்கள்; பேணும் தன்மை உடையவர்கள் பெண்கள்.

உயர்ந்த ஒழுக்கம் இல்லாதது, அஃறிணை. அல்+திணை= அஃறிணை. இது உயிருள்ளது; உயிரற்றது என இருவகைப் படும்.

‘‘இதை (மழைநீரை)க் கொண்டு நாம் பலவிதமான தாவரங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்’’ (திருக்குர்ஆன்–20:53) என்று திருமறையில் இறைவன் கூறுவதன் மூலம் தாவரங்களிலும் ஜோடி உண்டு என்பதை அறிய முடிகிறது.

இனப் பெருக்கத்திற்காகவும், விதைகள் தோன்றுவதற்கும் மகரந்தத் தூள்கள் ஒரு தாவரத்தில் இருந்து இன்னொன்றுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதுவே ‘மகரந்தச் சேர்க்கை’ எனப்படும். தாவரத்தில் உள்ள மகரந்தத் தூள், ஆண்பால் அணுக்களைக் கொண்டுள்ளது. சூல் வித்திலைகள், பெண்பால் அணுக்களைக் கொண்டுள்ளன.  இவை இரண்டும் இணையும் நிகழ்வுதான் மகரந்தச் சேர்க்கை. இது ‘தன் மகரந்தச் சேர்க்கை’, ‘அயல் மகரந்தச் சேர்க்கை’ என்று இருவகைப்படும்.

ஒரு பூவில் உள்ள மகரந்தம் அதே பூவில் உள்ள அல்லது அதே தாவரத்தில் உள்ள வேறொரு பூவில் இருக்கும் சூல் வித்துடன் மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாயின் அது ‘தன் மகரந்தச் சேர்க்கை’ எனப்படும். ஒரு தாவரத்தில் இருக்கும் சூல் வித்தானது, வேறொரு தாவரத்தில் இருந்து பெறப்படும் மகரந்தத்தால் கருக்கட்டப்படுமாயின் அது ‘அயல் மகரந்தச் சேர்க்கை’ எனப்படும்.

ஆண்பால் அணுக்களான மகரந்த மணிகளை, பெண்பால் அணுக்களான சூல் வித்திலைகளுக்கு கொண்டு செல்வதில் வேறொரு உயிரினம் பயன்படுகிறது. இதில் வண்டு, தேனீ, எறும்பு, குளவி, பட்டாம்பூச்சி போன்ற பூச்சிகளுக்கு பெரும் பங்குண்டு. பறவைகளும், வவ்வால்களும்கூட அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவி புரிகின்றன. எந்த உயிரினத்தின் உதவியும் இல்லாமலும் மகரந்தச் சேர்க்கை நடைபெறலாம். பொதுவாக இந்த வகையான மகரந்தச் சேர்க்கை காற்றின் துணையுடன் நிகழும்.

‘‘அவன் எத்தகையவன் என்றால், அவனே பூமியை விரித்து அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான். இன்னும் கனிகள் ஒவ்வொன்றில் இருந்தும் இரண்டிரண்டாக ஜோடிகளை அதில் உண்டாக்கினான்’’ (திருக்குர்ஆன் 13:3).

இந்த வசனத்தின் மூலம் அனைத்துப் பழங்களிலும் ஆண், பெண் பாலினப் பகுதிகள் அமைந்துள்ளன என்கிற தாவரவியல் உண்மையை திருக்குர்ஆன் எடுத்துக் கூறுகின்றது.

‘‘பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்’’ (திருக்குர்ஆன் 36:36)

மனிதர்கள், மிருகங்கள், செடிகொடிகள், பழவகைகள் என்ற இனங்களையும் கடந்து, மனிதர்கள் அறியாதவற்றிலும் ஜோடி ஜோடியாகப் படைத்திருப்பதாக மேற்கண்ட வசனத்தில் இறைவன் கூறுகின்றான்.

நாம் பயன்படுத்தும் மின்சாரத்தில் கூட உடன்பாடு (பாஸிட்டிவ்) எதிர்மறை (நெகட்டிவ்) என்ற ஜோடிகள் இருப்பதை இப்போது விஞ்ஞான உலகம் கண்டறிந்துள்ளது.

(தொடரும்)

Next Story