ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை தொடங்கியது


ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை தொடங்கியது
x
தினத்தந்தி 17 April 2017 10:30 PM GMT (Updated: 17 April 2017 8:50 PM GMT)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது.

ஸ்ரீவைகுண்டம்,

கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழா

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களில் முதலாவது தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு துவாஜாரோகணம் நடந்தது. பின்னர் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

மாலையில் தங்க தோளுக்கினியானில் சுவாமி திருவீதி புறப்பாடு நடந்தது. விழாவில் கோவில் செயல் அலுவலர் கார்த்திக், தக்கார் விசுவநாத், ஆய்வாளர் ரவீந்திரன், தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கருடசேவை

விழா நாட்களில் தினமும் காலையில் தோளுக்கினியானில் சுவாமி வீதி புறப்பாடு, தங்க மசகிரியில் வைத்து திருமஞ்சனம், தீர்த்த வினியோக கோஷ்டி நடக்கிறது. மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

5–ம் திருநாளான வருகிற 21–ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு கள்ளபிரான் சுவாமி, காசினிவேந்த பெருமாள், விஜயாசன பெருமாள் ஆகியோருக்கு நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

இரவு 9 மணிக்கு குடவரை பெருவாயிலில் ஹம்ச வாகனத்தில் நம்மாழ்வாருக்கு எதிர்சேவையாக 4 கருட வாகனங்களில் கள்ளபிரான், பொலிந்து நின்ற பிரான், காசினிவேந்த பெருமாள், விஜயாசன பெருமாள் எழுந்தருளி, கருடசேவை நடக்கிறது.

தேரோட்டம்

9–ம் திருநாளான வருகிற 25–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு பல்லக்கில் தவிழ்ந்த கிருஷ்ணன் கோலத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடக்கிறது.

10–ம் திருநாளான 26–ந் தேதி காலை 9 மணிக்கு சோரநாதர் எழுந்தருளி தீர்த்தவாரி, 11 மணிக்கு தீர்த்த வினியோக கோஷ்டி நடக்கிறது. இரவு 9 மணிக்கு வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி திருவீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


Next Story