பொருளாதார ஏற்றதாழ்வுகளை அகற்றும் ‘ஜகாத்’


பொருளாதார ஏற்றதாழ்வுகளை அகற்றும் ‘ஜகாத்’
x
தினத்தந்தி 2 Jun 2017 10:03 AM GMT (Updated: 2 Jun 2017 10:03 AM GMT)

இஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகளைச் சொல்லித் தரும் ஒரு மதம் அல்ல. ஒட்டுமொத்த வாழ்வியலைச் சொல்லித்தரும் ஒரு மார்க்கம்.

ஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகளைச் சொல்லித் தரும் ஒரு மதம் அல்ல. ஒட்டுமொத்த வாழ்வியலைச் சொல்லித்தரும் ஒரு மார்க்கம்.

வாழ்வியலின் பல பகுதிகளையும் எடுத்துச்சொன்ன இஸ்லாம், பொருளாதாரத்தைப் பற்றிய மிக தெளிவான பார்வையையும் முன் வைக்கிறது.

‘பொருளாதார பின்னடைவு’, ‘வறுமைக்கோட்டிற்கு கீழ்’ என்பது போன்ற வார்த்தை ஜாலங்கள் இஸ்லாமிய பொருளாதாரத்தில் இடம்பெற வாய்ப்பே இல்லை.

‘ஏழ்மையில்லாத பொருளாதாரம் ஏற்புடையது அல்ல’ என்று சொன்னவர்கள் மத்தியில், ‘அது தவறான அணுகுமுறை’ என்பதை நிரூபித்து காட்டியது இஸ்லாமிய பொருளாதாரம்.

பணத்தை மூலதனமாக்கி, ஏழை மக்களின் உழைப்பைச் சுரண்டும் வட்டியை ‘கூடாது’ என்று தடுத்தது இஸ்லாம். வட்டியைத் தடுக்கச் சொல்லும் போது, அதை எதிர்கொள்ள வேண்டிய மாற்றுமுறையைச் சொன்னால் தானே அது சாத்தியமாகும்.

திருக்குர்ஆன் தனது தெளிவான வசனத்தால் அதனையும் சொல்லித்தருகிறது:

“(மற்ற) மனிதர்களுடைய பொருட்களுடன் சேர்ந்து (உங்கள் பொருளும்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. எனினும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக ஏதும் நீங்கள் கொடுத்தாலோ, கொடுத்தவர்கள் அதனை இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர்” (30:39).

உழைப்பின்றி பெறும் எந்த பயனையும் அனுபவிக்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. உழைப்பின்றி கிடைப்பது மட்டுமல்ல, மற்றவர்களின் உழைப்பை சுரண்டி அவர்களின் வாழ்வை சீரழிப்பதும் வட்டி தான்.

உழைத்து சம்பாதித்ததில் 97½ சதவீதம் தான் பயன்படுத்தும் உரிமை மனிதனுக்கு உண்டு. மீதி 2½ சதவீதம் ‘ஜகாத்’ என்ற பெயரில் வறியவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வலி யுறுத்துகிறது இஸ்லாம்.

உழைப்பின் உண்மையான நோக்கம் என்ன?. நாம் மட்டும் இன்பமான வாழ்க்கையை அனுபவிப்பது அல்ல. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து அனைவரும் இன்புற்று வாழ பாடுபடவேண்டும். இதை ‘ஜகாத்’ மற்றும் ‘ஸதகா’ ஆகிய தர்மங்கள் மூலம் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

எல்லா மதங்களும் ‘தர்மம் செய்யுங்கள்’ என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இஸ்லாம் கூறும் தர்மங்களின் மூலம் ஒரு பொருளாதார வழிகாட்டலைச் சொல்லித்தருகின்றது.

குறிப்பிட்டவர்களுக்குத் தான் ‘ஜகாத்’ கொடுக்கப்பட வேண்டும் என்று வரையறுத்து சொல்கிறது திருக்குர்ஆன். அதை தவிர்த்தால் அது ஜகாத்தைச் சேராது. ஸதகாவைச் சார்ந்து விடும்.

‘ஸதகா’ என்பது மனம்விரும்பி நம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுப்பதாகும். இது கட்டாயம் இல்லை. இதை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ‘ஸதகா’ செய்யவில்லை என்றால் குற்றம் இல்லை. ஆனால் ஜகாத் கொடுப்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் கட்டாயம் ஆகும். ஜகாத் கொடுக்காதவர்கள் சொர்க்கத்தின் வாசனையைக் கூட உணர முடியாது.

“மேற்கிலோ கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்பி விடுவதனால் மட்டும் நன்மை செய்தவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். (உங்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (மறுமை நாளையும்), மலக்குகளையும், வேதங்களையும், நபிமார்களையும், நிச்சயமாக நம்பிக்கை கொண்டு (தனக்கு விருப்பமுள்ள) பொருளை அல்லாஹ்வுக்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், விடுதலையை விரும்பிய (அடிமைகள், கடன்காரர்கள் ஆகிய)வர்களுக்கும் கொடுத்து (உதவி செய்து,) தொழுகையையும் கடைப்பிடித்து தொழுது, ஜகாத் (மார்க்க வரியு)ம் கொடுத்து வருகின்றாரோ அவரும்; வாக்குறுதி செய்த சமயத்தில் தங்களுடைய வாக்குறுதியை(சரிவர) நிறைவேற்றுபவர்களும்; கடினமான வறுமையிலும், நோய் நொடிகளிலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமையைக் கைக்கொண்டவர்களும் ஆகிய (இவர்கள்தாம் நல்லோர்கள்.) இவர்கள்தாம் (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்) உண்மையானவர்கள். இவர்கள்தாம் இறை அச்சமுடையவர்கள்!” (2:177) என்று கூறுகிறது திருக்குர்ஆன்.

அதனால் தான் அல்லாஹ், எங்கெல்லாம் தன்னை வணங்குங்கள் என்று சொல்கிறானோ அங்கெல்லாம் ‘ஜகாத்தை கொடுத்து விடுங்கள்’ என்று சேர்த்தே சொல்கிறான். அதுமட்டுமல்ல, ‘மறுமையில் நன்மையை நாடுபவர்கள் ஜகாத்தை கொடுத்து விடுங்கள்’ என்றும் வலியுறுத்துகிறான்.

“நீங்கள் தொழுகையை கடைப்பிடித்தும், ஜகாத்தை கொடுத்தும் வாருங்கள். ஏனென்றால் மரணத்திற்கு முன்னதாக உங்களுக்காக நீங்கள் என்ன நன்மையை முன்கூட்டியே அனுப்பி வைப்பீர்களோ அதையே மறுமையில் அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள்” என்கிறது திருக்குர்ஆன் (2:110).

ஜகாத் கொடுக்காதவர்களைப் பற்றி குறிப்பிடும் போது, “அவர்கள் ஜகாத் கொடுப்பதில்லை, அவர்கள் தான் மறுமையை நிராகரிப்பவர்கள்” (திருக்குர்ஆன் 41:7) என்கின்றான் இறைவன்.

“இவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு, அதை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றனரோ, அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு என்று நபியே கூறுவீராக” என்று திருக்குர்ஆன் (9:34) மூலம் எச்சரிக்கிறான் ஏக இறைவன்.

ஜகாத் என்ற இஸ்லாமிய பொருளாதாரம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டால், இந்த உலகில் ஏழைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கலாம். அதோடு ஜகாத் கொடுத்தவர்கள் இம்மையிலும், மறுமையிலும் இரட்டிப்பு நன்மையை பெற்றுக்கொள்ளலாம்.

ஆண்டுக்கு ஒரு முறை ஜகாத் கொடுக்கப்பட வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாகும். அந்த கால இடைவெளி ரமலான் மாதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் ரமலானில் செய்யப்படும் தர்மம் ஒன்றிக்கு எழுபது மடங்கு நன்மை கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே இந்த ரமலான் மாதத்தை நாம் முழுமையாக பயன்படுத்தி ஜகாத்தை வழங்குவோம், இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக்கொள்வோம்.

-எம். முஹம்மது யூசுப், உடன்குடி.

Next Story