பாவமன்னிப்பு தேடப்படும் மாதம் ரமலான்


பாவமன்னிப்பு தேடப்படும் மாதம் ரமலான்
x
தினத்தந்தி 16 Jun 2017 10:21 AM GMT (Updated: 16 Jun 2017 10:21 AM GMT)

புனித ரமலான் மாதம் முழுவதும் பாவமன்னிப்பு தேடுவதற்குரிய நாட்களாக உள்ளது.

கத்துவம் நிறைந்த புனித ரமலானுக்கு ‘பாவமன்னிப்பு தேடப்படும் மாதம்’ என்ற சிறப்பும் உண்டு. 

ஒரு நோன்பாளி தான் அறிந்தோ–அறியாமலோ, தெரிந்தோ–தெரியாமலோ, வெளிப்படையாகவோ– மறைமுகமாகவோ, மனம் விரும்பியோ–விரும்பாமலோ செய்த சிறிய, பெரிய தவறுகளுக்கும், பாவங்களுக்கும் கண்டிப்பாக பாவமன்னிப்பு கோர வேண்டும். 

மேலும் முஸ்லிம்களாக இறந்து போன பெற்றோர், உற்றார், உறவினர், அண்டை அயலார், சகோதர – சகோதரியர், தற்காலத்தில் வாழும் உலக முஸ்லிம்கள், காலம் கடந்து சென்ற முஸ்லிம்கள் என அனைவருக்கும் இறைவனிடம் பாவ மன்னிப்புத் தேட வேண்டும்.

பாவமன்னிப்புத் தேடுவதற்கு நேரமோ, காலமோ, கிழமையோ, மாதமோ குறிக்கப்படவில்லை. பாவமன்னிப்பு எப்பொழுதும் தேடலாம். எனினும் புனித ரமலான் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், பாவமன்னிப்பு வேண்டுவதற்கும் ஒரு விசே‌ஷமான மாதமாகும். எனவே இந்த புனித ரமலானில் கூடுதலாக கவனம் செலுத்தி அதிகமாக பாவமன்னிப்பு கேட்க வேண்டும். 

‘‘எவர் ரமலான் மாதம் (அல்லாஹ்வின் நற்கூலி கிடைக்கும் என்ற அவனின் வாக்குறுதியை) நம்பியும், நன்மையை நாடியும் நோன்பிருக்கிறாரோ, அவருக்காக அவர் முன்செய்த (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும்’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஹசரத் அபூஹுரைரா (ரலி) (புகாரி)

ரமலானின் நடுப்பகுதியாக அமைந்துள்ள ‘இரண்டாவது பத்து’ பாவமன்னிப்பு கேட்கும் பகுதியாகவும், பாவங்கள் மன்னிக்கப்படும் பகுதியாகவும் அமைந்துள்ளது. எனவே ரமலான் காலத்தில் முடிந்தளவு நோன்பாளிகள் பாவங்களிலிருந்து விடுதலை பெற்று புண்ணியங்கள் தேடி புறப்பட்டு, புது மனிதர்களாகவும், புனிதர்களாகவும் மாற்றம் பெற வேண்டும்.

‘லைலத்துல் கத்ர் இரவிலும் பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்பது நபிமொழியாகும்.

‘‘யார் லைலத்துல் கத்ர் இரவில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ, அவர் (அதற்கு) முன் செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’. (அறிவிப்பாளர்: ஹசரத் அபூஹுரைரா (ரலி) (நூல்: புகாரி)

ஒருமுறை ஹசரத் ஆயிஷா (ரலி) அவர்கள் ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘லைலத்துல் கத்ர்’ எது? என்று நான் அறிந்து கொண்டால், அதிலே நான் என்ன கூற வேண்டும் என தாங்கள் நினைக்கிறீர்கள்?’’ என கேட்டபோது, ‘‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பை நேசிப்பவன், எனவே எனது பாவத்தை நீ மன்னித்து விடு!’’ என்பதை நீ ஓதி வா என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி)

‘‘எனது சமுதாயத்திற்கு ரமலான் மாதத்தில் ஐந்து அருட்பாக்கியங்கள் பிரத்தியேகமான முறையில் வழங்கப்பட்டிருக் கிறது.  அவற்றில் ஒன்று ரமலானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்படுகிறது’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஹசரத் அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மது)

புனித ரமலான் மாதம் முழுவதும் பாவமன்னிப்பு தேடுவதற்குரிய நாட்களாக உள்ளது. இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

‘‘பயபக்தியாளர்கள் விடியற்காலங்களில் (ஸஹர் நேரம்) மன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பார்கள்’’ (51:18),

‘‘அவர்கள் (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பார்கள்’’ (3:17)

இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது கீழ்க்கண்ட வாசகங்களை கூறி தனது பாவங்களை மன்னிக்கும்படி இறைவனிடம் கேட்கவேண்டும்:

‘‘மன்னிப்பாளனே! என்னை நீ மன்னிப்பாயாக! கருணையாளனே! எனக்கு நீ கருணைகாட்டு!’’

‘‘நான் இறைவனிடம் பாவமன்னிப்பு வேண்டுகிறேன்’’

‘‘எனது இறைவா! என்னை நீ மன்னித்தருள் புரிவாயாக!’’

‘‘வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் நித்திய ஜீவன். அத்தகையை இறைவனிடம் நான் பாவ மன்னிப்புக் கோரி, அவன் பக்கமே நான் பாவமீட்சி பெறுகிறேன்’’

‘‘இறைவா! எனக்கு நானே அநீதம் செய்து கொண்டேன். எனவே நீ என்னை மன்னித்து விடு! உன்னைத்தவிர மன்னிப்பவன் யாரும் இல்லை.’’

‘‘எனது இறைவா! என்னை நீ மன்னித்துவிடு! என்னை நீ பாவத்திலிருந்து மீட்சிபெற செய்வாயாக! நீ கருணையாளன், மன்னிப்பாளன்’’.

‘‘இறைவா! எனக்கு நானே அதிகம் அநீதம் செய்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பாளன் யாரும் இல்லை. உன்னிடம் மன்னிப்பு கிடைக்கிறது. எனவே என்னை நீ மன்னித்துவிடு! நீ எனக்கு கருணை காட்டு, நீயே மன்னிப்பவனாகவும், கருணையாளனாகவும் இருக்கின்றாய்’’.

பாவமன்னிப்பு வேண்டுவது பாவம் செய்யும் பாமரர்களின் செயல் மட்டும் அல்ல. பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட நபிமார்களும், ஆதி நபி ஹசரத் ஆதம் (அலை) அவர்களிலிருந்து, இறுதி நபி ஹசரத் முஹம்மது (ஸல்) அவர்கள் வரைக்கும் பாவமன்னிப்பு வேண்டியுள்ளார்கள்.

அனைத்து நபிமார்களும் பாவம் செய்தார்களா? என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் பாவமன்னிப்பு வேண்டியது அவர்கள் செய்த பாவத்திற்காக அல்ல. பாவம் செய்யும் மனிதன் இறைவனிடம் எப்படி பாவமன்னிப்பு கோர வேண்டும் என்பதை கற்றுத் தருவதற்காகவே அன்றி வேறு இல்லை.

‘‘என் மனதிலே ஒரு விதமான நெருடல் உள்ளது. நான் ஒரு நாளைக்கு நூறு தடவை அல்லாஹ்விடம் பாவ மீட்சி தேடு கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’. (அறிவிப்பாளர்: ஹசரத் அஃகர் அல்முஃஇனீ (ரலி), முஸ்லிம்)

பாவமன்னிப்புத் தேடுவதை நாம் உதாசீனப்படுத்தக் கூடாது. புனித ரமலானில் அதிகமான பலன்களை அறுவடை செய்து, மகசூலை பெறுவதற்கு பாவமன்னிப்பை ஒரு கேடயமாக உலக முஸ்லிம்கள் பயன்படுத்தி முழுப்பயன்களையும் ஒன்றுவிடாமல் பெற்றிட வல்ல இறைவன் கிருபை செய்வானாக, ஆமீன்.

மவுலவி அ. சைய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, 
திருநெல்வேலி டவுன்.

Next Story