சுக்ரீவன் வழிபட்ட ஈசன்


சுக்ரீவன் வழிபட்ட ஈசன்
x
தினத்தந்தி 27 Jun 2017 9:38 AM GMT (Updated: 27 Jun 2017 9:38 AM GMT)

சுக்ரீவன் வழிபட்டதன் காரணமாக, இங்குள்ள இறைவன் சுக்ரீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார்.

திருப்பூர் மாநகரில் மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்று இருக்கிறது. திருப்பூர் கூலிப்பாளையம் என்ற இடத்தில் உள்ள இந்த ஆலயம் தற்போது இந்திய அகழ்வாராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தக் கோவிலின் அடியில் மிகப்பெரிய கோவில் புதையுண்டுள்ளது என்பதை அகழ்வாராய்ச்சி துறை ஆணையம் உறுதி செய்திருக்கிறது. இங்கு சுரங்கப்பாதை ஒன்று உள்ளதாகவும் அதன் வழியாக கோவை பேரூரை சென்றடையலாம் என்றும் கூறப்படுகிறது.

ராவணனை அழிப்பதற்காக, சுக்ரீவனின் உதவியை நாடினார் ராமபிரான். இதையடுத்து சுக்ரீவன், ராமருடன் செல்வதற்கும், ராவணனை அழிப்பதற்கும் செல்லும் முன்பாக, இந்தப் பகுதியில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, ஈசனின் அருளைப் பெற்றதாக தல வரலாறு தெரிவிக்கிறது. சுக்ரீவன் வழிபட்டதன் காரணமாக, இங்குள்ள இறைவன் சுக்ரீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார்.

இந்த ஆலயத்தில் இரண்டு நந்தி சிலைகள் உள்ளன. இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக அமைந்திருப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்தத் தலத்தில் ஐந்து லிங்கங்கள் வெவ்வேறு திசைகளில் அமைந்திருக்கின்றன. ஆனால் தினமும் அந்த லிங்கங்களின் மீது சூரிய ஒளி படுவது வியப்புக்குரியதாகும். அதுவும் சரியாக ஒன்றன்பின் ஒன்றாக சூரியக் கதிர்கள் லிங்கங்களின் மீது விழுகின்றன. 

Next Story