ஆன்மிகம்

பாக்கியம் நிறைந்த நல்வாக்கியம்... + "||" + Blessed with good ...

பாக்கியம் நிறைந்த நல்வாக்கியம்...

பாக்கியம் நிறைந்த நல்வாக்கியம்...
‘ஒருவரையொருவர் சந்திக்கும் போது சலாம் சொல்லிக்கொள்ளவேண்டும் என்பது இஸ்லாமிய மரபு.
‘ஸலாம்’ என்ற அரபுச்சொல்லிற்கு அமைதி, சமாதானம், நிம்மதி என்று பல்வேறு பொருள்கள் உண்டு. இந்த மூலச்சொல்லில் இருந்தே ‘இஸ்லாம்’ என்ற சொல் உருவானது. ஆகவே தான் இஸ்லாம் தன் பெயருக்கு ஏற்ப அமைதியையே எங்கும் கிளைவிரித்துச் செல்கிறது.

இந்த அடிப்படையில் தான் ஒருவரை வரவேற்கும் போது அவரை ‘சலாம்’ சொல்லி அதாவது ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ (உங்களின் மீது அமைதி நிலவட்டும்) என்று கூறி வரவேற்கச் சொல்கிறது இஸ்லாம்.

‘ஒருவரையொருவர் சந்திக்கும் போது சலாம் சொல்லிக்கொள்ளவேண்டும் என்பது இஸ்லாமிய மரபு. இப்பண்பு குறையும்போது அது கடைசி காலத்தின் அடையாளம் என்று புரிந்து கொள்ளுங்கள்’ என்றார்கள் நபிகள் நாயகம்.

அதனால் தான் என்னவோ ‘நீங்கள் சலாமை பரப்புங்கள். அறிந்த அல்லது அறியாத அனைவருக்கும் பாரபட்சமின்றி சலாமை பரப்புங்கள்’ என்றார்கள்.

ஒருமுறை நாயகத்தோழர் ஒருவர் நபிகள் நாயகத்திடம் வந்து ‘நாயகமே! இஸ்லாத்தில் சிறந்த காரியம் எது?’ என்று கேட்க, அதற்கு நபிகளார் ‘முதலில் உணவளிப்பது, பிறகு நீர் உமக்குத் தெரிந்தவருக்கும், உமக்குத் தெரியாதவருக்கும் (சரிசமமாக) சலாம் சொல்வது’ என்று பதிலளித்தார்கள். (நூல்: அபூதாவூது)

ஈருலகம் போற்றும் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் இப்படியும் ஒருமுறை சொன்னார்கள்: ‘தெரிந்தவர்களுக்கு மட்டும் சலாம் சொல்வது அது கடைசி (கியாமத்) நாட்களின் அடையாளம்’ என்று. எனவே நாம் சலாம் கூறுவதில் மிகுந்த அக்கறையுடனும், கவனமுடனும் இருக்க வேண்டும்.

பின்வரும் இன்னொரு வசனம் ‘சலாம் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது; அது பாக்கியம் நிறைந்தது; வீட்டிற்குள் நுழையும் முன் கூறத்தக்கது’ என்று விவரித்துச்செல்கிறது இப்படி:

‘நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் முபாரக்கான, பாக்கியம் மிக்க பரிசுத்தமான (‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்னும்) நல்வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் கூறிக்கொள்ளுங்கள். நீங்கள் அறிந்து கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்’. (திருக்குர்ஆன் 24:61)

சலாம் அதுவொரு சாதாரணமான ஒரு வார்த்தையல்ல... அது மதிப்பும், மரியாதையும் மிக்கது. அதை நாம் அவ்வப்போது மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சலாம் நமது உள்ளத்திற்கும், இல்லத்திற்கும் சாந்தியை, சமாதானத்தை அந்த விண்ணிலிருந்து இந்த மண்ணுக்கு இறக்குமதி செய்யும் ஒரு அற்புதச்சொற்றொடராகும்.

அதுமட்டுமல்ல, அவ்வப்போது நமது உள்ளத்தில் நம்மையும் அறியாமல் ஏற்படும் பெருமை, தற்பெருமை, கர்வம், முகஸ்துதி போன்றவற்றை நமது ஆழ்மனதிலிருந்து அடியோடு நீக்கும் அபார ஆற்றல் இந்த ஒற்றை சலாமுக்கு உண்டு என்பது நபிமொழி காட்டும் நல்வழி.

நபிகளார் நவின்றார்கள், ‘சலாமைக்கொண்டு ஆரம்பிப்பவர் பெருமையை விட்டும் நீங்கியவராவார்’. (நூல்: மிஷ்காத்)

‘எவருடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்குமோ அவர் சுவனம் நுழையமாட்டார்’ என நபிகளார் எச்சரிக்கை விடுத்திருப்பதில் இருந்தே பெருமையின் கோரமுகத்தை நாம் நன்கு எடைபோட்டுக் கொள்ளலாம்.

அற்புதமான ஆற்றல்மிக்க சலாமை நாம் நம்மவர்களுக்கு, குடும்பத்தார்களுக்கு, அக்கம்பக்கத்தவர்களுக்கு மனம் விட்டு, வாய்திறந்து சொல்வதற்கு ஒன்றுக்கு ஒன்பது முறை யோசிக்கிறோம்? அதுவும் தாய், தந்தை, மனைவி, மக்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. பெரும்பாலும் நாம் இவர்களுக்கு சலாம் சொல்வதேயில்லை. உண்மையில் இவர்களுக்குத்தான் நாம் முதன் முதலில் சலாம் கூற முன்வரவேண்டும்.

ஒருவருக்கு சலாம் கூறுவது விரும்பத்தகுந்தது. ஆனால், ஒருவர் நமக்கு சலாம் கூறினால், அவருக்கு நாம் கட்டாயம் பதில் சலாம் கூறியே ஆகவேண்டும் என்று இஸ்லாம் வரையறை செய்து வகுத்து வைத்திருக்கிறது. இதன் வழியாக பதில் சலாமின் அவசியத்தை நாம் நன்கறிந்து கொள்ளமுடியும்.

‘அஸ்ஸலாமு அலைக்கும்’, ‘அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்’, ‘அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு’ என்று ஓரிரு நல்வார்த்தைகளையும் அந்த சலாமுடன் சேர்த்து சொல்லலாம். பதில் சலாம் கூறுபவரும் இவ்வாறே சில வார்த்தைகளை இணைத்துக்கூறுவது கூடும். ஆக சொற்கள் கூடக்கூட நன்மைகளும் கூடிக்கொண்டேயிருக்கும்.

இந்த சலாம் ஆண்களுக்கு மட்டும் குறிப்பானதல்ல. பெண்களும் ஒருவருக்கொருவர் கூறிக்கொள்வார்கள். இதில் சிறியவர்கள் தான் பெரியவர்களுக்கு முதலில் சலாம் சொல்ல வேண்டும் என்றிருந்தாலும் கூட நன்மையை பெற்றுக்கொள்வதிலும், நன்மையை கற்றுத்தருவதிலும் பெரியவர்கள் முந்திக்கொள்வது தவறல்ல.

‘இம்மண்ணிற்குக் கீழே உள்ளவர்களுக்கும், அதாவது இறந்துபோனவர்களுக்கும் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பின் அடக்க ஸ்தலத்திற்குச் சென்றால் அவர்களுக்கும் நீங்கள் சலாம் சொல்லுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்லுரை கூறினார்கள்.

ஒரு இறை விசுவாசி, இன்னொரு விசுவாசிக்கு தார்மீக ரீதியாகச் செய்யவேண்டிய ஆறு அருங்கடமைகளில் முதற்கடமையாக இந்த சலாமைத்தான் இஸ்லாம் குறிப்பிடுகிறது. எனவே சலாம் என்பது சர்வ சாதாரணமான ஒரு சொல்லல்ல, அது சர்வ தரங்களும் நிறைந்த ஒரு சொல் என்பது மட்டும் நிச்சயம்.

வாருங்கள்... எங்கும் சலாமைப் பரப்புவோம்... என்றும் சாந்தியை நிரப்புவோம்.

மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.