பக்தர்களை அரவணைக்கும் அனுகூல விநாயகர்


பக்தர்களை அரவணைக்கும் அனுகூல விநாயகர்
x
தினத்தந்தி 22 Aug 2017 12:48 PM IST (Updated: 22 Aug 2017 12:48 PM IST)
t-max-icont-min-icon

அனுகூல விநாயகர் ஆலயம் ஒன்று திருச்சி அய்யப்ப நகரில் உள்ளது. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டியதைத் தந்து அனுகூலம் செய்பவர் இந்த நான்முகன் விநாயகர்.

னுகூல விநாயகர் ஆலயம் ஒன்று திருச்சி அய்யப்ப நகரில் உள்ளது. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டியதைத் தந்து அனுகூலம் செய்பவர் இந்த நான்முகன் விநாயகர். அவர் அனுகூல விநாயகர் என்ற பெயரில் அழைக்கப்படுவது இயல்புதானே.

ஆலய அமைப்பு

ஆலயம் வடதிசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம். அடுத்துள்ள கருவறையில் அனுகூல விநாயகர் வடதிசை நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக் கிறார்.

மகா மண்டபத்தின் கீழ் திசையில் நடுநாயகமாய் சிவபெருமான் ஜம்புகேஸ்வரர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். எதிரே அன்னை அகிலம் காக்கும் அகிலாண்டேஸ்வரி நின்ற கோலத்தில் இன்முகத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள். திருச்சுற்றில் வடக்கில் சண்டிகேஸ்வரர் அருள்பாலிக்கிறார். தென் கிழக்கில் ஆலய தல விருட்சமான அரசும் வேம்பும் நெடிதுயர்ந்து படர்ந்து நிற்க அதனடியில் ஏராளமான நாகர் சிலைகள் உள்ளன. கிழக்கு திருச்சுற்றில் பிரம்மாவும், பாலமுருகனும் அருள்பாலிக்க, தென் திசையில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் லிங்கோத்பவரும் அருள்புரிகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழா இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விதம் விதமாய் கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து அதை பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். அன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன் சிறப்பு அலங்காரத்தில் விநாயகரை தரிசிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அன்று பக்தர்கள் கூட்டத்தால் ஆலயம் நிரம்பி வழியும்.

மார்கழி மாதம் 30 நாட்களும் காலை 5½ மணிக்கே ஆலயம் திறக்கப்பட்டு ஆராதனைகள் நடைபெறத் தொடங்கிவிடும். மார்கழி மாத சஷ்டியின் போது விநாயகருக்கு லட்சார்ச்சனையும், 108 சங்காபிஷேகமும் நடைபெறும்.

12.2.2014-ல் ஆலயத்திற்கு குடமுழுக்குத் திருவிழா நடந்துள்ளது. தை மாத புனர்பூசத் திருநாளான அந்த நாளை ஆண்டு தோறும் ஆண்டு விழாவாக கொண்டாடுகின்றனர். அன்று விநாயகரின் முன், கணபதி ஹோமமும், நவக்கிரக ஹோமமும் நடை பெறும். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவதுடன் அன்று அன்ன தானமும் நடைபெறும். சேக்கிழார் மன்றத்தினரால் சிறப்பாக நிர்வாகம் செய்யப்படும் இந்த ஆலயத்தின் மேல்புறம் பெரிய விசாலமான மண்டபம் உள்ளது. இங்கு திருமுறை பாராயணங்கள் நடைபெறுவதுடன் அன்னதானமும் வழங்கப் படுகின்றன. ஆலய சிறப்பு விழாக்கள் இங்குதான் நடை பெறுகின்றன.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விநாயகரின் சன்னிதி முன் 25 பேர் அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது மிகவும் சிறப்பாக இருக்கும். அன்று கேழ்வரகு கூழ், சிவப்பு அரிசி கூழ் ஆகியவை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.

பிரதோஷம் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்று பக்தர்கள் நேராக சிவபெருமானுக்கு தாங்கள் கொண்டு வரும் பாலை தாங்களே அபிஷேகம் செய்து மன மகிழ்ச்சி பெறும் காட்சி எங்கும் காணக்கிடைக்காதது. அன்று சிவபெருமான் பிரகாரத்தில் மட்டும் உலா வருவதுண்டு.

கார்த்திகை சோமவாரங்களில் ஜம்புகேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும். அன்றும் பக்தர்களே பாலபிஷேகம் செய்வதும் நடைமுறையில் உள்ள வழக்கம்.

பங்குனி உத்ரம் இங்கு வெகு சிறப்பாக நடைபெறும். அன்று நடைபெறும் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி திருமணம் ஒரு திருமண விழாபோலவே கோலாகலமாக நடைபெறுகிறது. நவராத்திரி 10 நாட்களும் ஆலயம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.

பங்குனி உத்திரம் அன்று இறைவன் இறைவிக்கு திருக்கல்யாணம் நடைபெறுவதுடன் வயதில் மூத்த ஒரு தம்பதியை மேடையில் அமரச் செய்கின்றனர். அவர்களுக்கு புத்தாடை தந்து மாலையிட்டு அமர அவர்களுக்கு பக்தர்கள் பாத பூஜை செய்து ஆசீர்வாதம் பெறும் காட்சியும் சிறப்பு அம்சமாக உள்ளது.

அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவதுடன், வரும் பக்தர் களுக்கு திருமண விருந்து போல் அன்னதானமும் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொருவருக்கும் திருமண வீட்டில் தருவது போல் தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் தாம்பூல பை தருகின்றனர். பக்தர்கள் ஒரு திருமண வீட்டிற்கு சென்று வந்த நிறைவோடு இல்லம் திரும்புகின்றனர்.

நாகதோஷம்

தல விருட்சங்களுக்கு கீழே இருக்கும் நாகர்களுக்கு நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. நாகதோஷம் உள்ளவர்கள் நாகர் சிலையை கொண்டு வந்து வைத்து பிரார்த்தனை செய்கின்றனர். தல விருட்சங்களையும் நாகர்களையும் பிரதட்சணம் செய்வதால் கன்னிப் பெண்களுக்கு விரைந்து திருமணம் நடப்பதாகவும் குழந்தை பேறு வேண்டுபவர்களுக்கு அந்தப் பேறு கிட்டுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். திங்கள் கிழமையில் வரும் அமாவாசை அன்று தல விருட்சங்களை 108 முறை சுற்றுவதால் பெண்கள் நினைத்த காரியம் நடந்தேறுவது நிஜம் என்பது நம்பிக்கை.

இந்த ஆலயத்தில் உண்டியல் கிடையாது. காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மாலை 5½ மணி முதல் இரவு 8½ மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

தன்னை நாடும் பக்தர்களின் வேண்டுதல்களை அரவணைத்து அனுகூலமாய் நிறைவேற்றுவதில் இந்த அனுகூல விநாயகர் வல்லவர் என்பது நிஜமே.

திருச்சி அய்யப்ப நகரில் உள்ளது இந்த அனுகூல விநாயகர் ஆலயம். திருச்சி மத்திய/சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கே.கே.நகர் பஸ்ஸில் பயணித்து சபரிமில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அருகே உள்ள ராஜாஜி தெருவில் உள்ளது ஆலயம்.

-ஜெயவண்ணன்

Next Story