கரிகாலச் சோழன் அமைத்த காசிவிஸ்வநாதர் ஆலயம்


கரிகாலச் சோழன் அமைத்த காசிவிஸ்வநாதர் ஆலயம்
x
தினத்தந்தி 25 Aug 2017 6:54 AM GMT (Updated: 25 Aug 2017 6:54 AM GMT)

கரிகாலச் சோழனின் பெருமையை இன்றும் தமிழ்நாட்டில் பறை சாற்றிக் கொண்டிருக்கும் அற்புதமான வரலாற்றுச் சான்று கல்லனை.

ரிகாலச் சோழனின் பெருமையை இன்றும் தமிழ்நாட்டில் பறை சாற்றிக் கொண்டிருக்கும் அற்புதமான வரலாற்றுச் சான்று கல்லனை.

கல்லணையை மட்டும் கரிகாலன் கட்டவில்லை. அழகான சிவாலயம் ஒன்றையும் அவன் கட்டியுள்ளான். திருச்சிக்கு அருகே உள்ள கிராமம் சர்க்கார் பாளையம். இங்குதான் கரிகாலன் கட்டிய காசிவிசுவநாதர் ஆலயம் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் காசி விசுவநாதர், இறைவி அருள்மிகு விசாலாட்சி அம்மன்.

இந்த ஆலயத்தின் வரலாறு என்ன?

ஆலய வரலாறு


கரிகாலன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்ட நேரமது. காவிரி அன்னை தன் விருப்பம் போல் பரந்து விரிந்து ஊரெங்கும் பாய்ந்து கொண்டிருந்தாள். காவிரியைக் கட்டுப்படுத்த துணை வாய்க்கால்களோ, அணைகளோ கிடையாது. வெள்ளம் வரும் போதெல்லாம் ஊருக்குள் தண்ணீர் புகுந்து குடியிருப்புகளுக்கும், பயிர்களுக்கும் பெரும் சேதம் ஏற்படுத்தி வந்தது. மக்கள் பரிதவித்தனர். இதற்கு என்னதான் முடிவு?

மக்கள் மன்னனிடம் சென்றனர். தாங்கள் படும் இன்னல் களையும் துயரங்களையும் அவனிடம் எடுத்துக் கூறினர். உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறி அவர்களை அனுப்பிய மன்னன் யோசிக்கத் தொடங்கினான். என்ன செய்வது?

காவிரியில் ஒரு அணையைக் கட்டுவதுதான் இதற்கு உரிய நிவாரணம் என்று உணர்ந்த மன்னன் தனது பரிவாரங்களுடனும், படைவீரர்களுடனும் அணை கட்ட உரிய இடத்தை தேர்வு செய்யப் புறப்பட்டான். அவன் சென்ற வழியில் உள்ளது சர்க்கார் பாளையம் என்ற கிராமம்.

மன்னனும் படைவீரர்களும் அந்த கிராமத்தின் அருகே வந்தபோது காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் உடைப்பு ஏற்பட்டு கிராமத்திற்குள் தண்ணீர் பாய்ந்தது. இதனால் மன்னனும் படைவீரர்களும் மேலே செல்ல இயலவில்லை. அவர்கள் பயணம் தடைபட்டது.

காவிரியின் உடைப்பை அடைக்க படை வீரர்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. செய்வதறியாது தவித்து நின்றான் கரிகாலன். அவன் மனம் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்தது.

‘இறைவா? இந்தத் துயரிலிருந்து நான் மீள முடியாதா? என் மக்களை நான் காப்பாற்ற முடியாதா?’ என்று மனமுருக பிரார்த்தனை செய்தான் கரிகாலன். அவன் பிரார்த்தனை பலித்தது. ஒரு அசரீரி குரல் திடீரென்று ஒலித்தது.

‘மன்னா! இந்த இடத்தில் நீ ஒரு கோவில் கட்டு. உடைப்பு நிற்கும்’ என்றது அந்த அசரீரி குரல்.

மனம் சிலிர்த்தான். கண்கள் கலங்கினான். கரங்கூப்பி விண்ணைப் பார்த்தான். ‘அப்படியே செய்கிறேன்’ என்றான் நெகிழ்ந்த மனதோடு. வெள்ளம் வடியத் தொடங்கியது. மன்னன் தன் படைவீரர்களைக் கொண்டு அந்த இடத்தில் ஒரு கோவிலைக் கட்டத் தொடங்கினான்.

அந்தக் கோவில்தான் சர்க்கார் பாளையத்தில் உள்ள காசி விசுவநாதர் ஆலயம். இந்த ஆலயம் பற்றிய செவிவழி வரலாறு இதுதான்.

பின் அங்கிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் காவிரியில் ஓர் அணையையும் கட்டத் தொடங்கினான் மன்னன் கரிகாலன். அதுதான் கல்லணை.

காசி லிங்கம்

கோவிலைக் கட்ட முடிவு செய்த மன்னன், சிலரை காசிக்கு அனுப்பி ஒரு சிவலிங்கம் கொண்டு வரும்படி கூறினான். அவர்களும் புறப்பட்டுச் சென்றனர். கோவில் திருப்பணிகள் விறுவிறுவென நடந்தேறின. கும்பாபிஷேக நாளும் குறிக்கப்பட்டது. ஆனால், காசிக்குச் சென்றவர்கள் திரும்பி வரவில்லை.

குருமார்களை கலந்து ஆலோசித்தான் மன்னன். குறிப்பிட்ட நாளில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடிப்பதே நல்லது என அவர்கள் ஆலோசனை கூறினர். வேறு ஒரு சிவலிங்கத்தை நிர்மானம் செய்து பிரதிஷ்டை செய்து விடலாம் என்றும் அவர்கள் கூறினர். சிறந்த சிற்பிகளைக் கொண்டு ஒரு சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தையும் நல்ல முறையில் நடத்தினான் கரிகாலன்.

சில நாட்கள் கடந்த பின், காசிக்குச் சென்றவர்கள், ஒரு சிவலிங்கத்துடன் திரும்பி வந்தனர். புதிய சிவலிங்கத்தை என்ன செய்வது? யோசித்தான் மன்னன். அந்த சிவலிங்கத்தை அலட்சியபடுத்தாத மன்னன், அந்த காசி லிங்கத்தை அருகே இருந்த தல விருட்சமான வில்வ மரத்தடியில் பிரதிஷ்டை செய்தான். அந்த காசி லிங்கத்திற்கும் மூலவருக்கு நடைபெறும் ஆராதனைகளும், அபிஷேகங்களும் நடைபெறவும் ஏற்பாடு செய்தான்.

ஆலய அமைப்பு

இந்த காசி விஸ்வநாதர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் எதிரே சற்றே உயர்ந்த மகாமண்டபம் உள்ளது. வலது புறம் அன்னை காசி விசாலாட்சி நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். எதிரே பலிபீடமும், நந்தியும் இருக்க அர்த்த மண்டப வாசலில் துவார பாலகர்களின் திருமேனிகள் கருங்கற்களில் வடிவமைக்கப்பட்டு சுவற்றின் இருபுறமும் பதிக்கப்பட்டுள்ளன. மேலே கஜலட்சுமியின் சிற்பம் உள்ளது. அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து உள்ள கருவறையில் இறைவன் காசி விசுவநாதர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

ஆலயத்தின் தெற்குப் பிரகாரத்தில் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட காசி லிங்கம் தனி மண்டபத்தில் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. எதிரே நந்தி பகவான் அருள்பாலிக்க, இறைவனின் பின்புறம் தல விருட்சமான வில்வ மரம் உள்ளது.

மேற்குப் பிரகாரத்தில் பிள்ளையார், நாகர், வீர ஜெய் ஆஞ்ச நேயர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேசுவரரின் சன்னிதி உள்ளது.

தேவக் கோட்டத்தில் தென் திசையில் தட்சிணாமூர்த்தியும், வடபுறம் துர்க்கையும், ஆலயத்தின் தென் மேற்கு திசையில் நாராயண பெருமாள் மற்றும் லட்சுமி தேவி ஆகியோரும் தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களுக்கு தனி மண்டபம் உள்ளது.

இந்த ஆலயம் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது. தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

இறைவனின் சன்னிதியின் முன் மகாமண்டபத்தின் உச்சியில் 12 ராசிகளின் உருவங்களும் கருங்கற்களில் செதுக்கப்பட்டு பொறிக்கப்பட்டிருப்பது, இந்த ஆலயத்தில் உள்ள சிறப்பு களில் ஒன்றாகும். அன்னார்ந்து பார்த்து இந்த நவக்கிரக நாயகர்களை நாம் கண்குளிர தரிசனம் செய்யலாம்.

திருவிழாக்கள்

கார்த்திகை தீபத்தன்று சொக்கப்பனை தீபம் ஏற்றும் திருவிழா மிகவும் சிறப்பாக நடக் கிறது. பங்குனி உத்திரத்தன்று பால் குடம், அலகு காவடி, தீமிதி என்று இந்த ஆலயம் பக்தர் களால் சூழப்பட்டு திருவிழா கோலம் பூண்டிருக்கும். ஆடி, தை வெள்ளிகளில் இங்கு திருவிளக்குப் பூஜை நடக்கிறது. ஏராளமான பெண்கள் கலந்து கொள்கின்றனர். சிவராத்திரி அன்று ஐந்து கால பூஜை நடத்தப்படுகிறது.

பிரதோஷம், சோமவாரம், தை, சித்திரை மாதப்பிறப்புகள், நவராத்திரி, சிவராத்திரி போன்ற நாட்களில் காசி விசுவநாதருக்கும், காசி லிங்கத்திற்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ஆலயத்தின் அருகே காவிரி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதுவே இந்த ஆலயத்தின் தீர்த்தமும் கூட.

இந்த ஆலயம் செல்ல நிறைய நகரப் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் உள்ளன. கல்லணை செல்லும் நகரப் பேருந்துகள் சில இந்த ஆலயம் வழியே செல்கின்றன. ஆட்டோ, கால் டாக்ஸி வசதியும் உள்ளன.

காசிக்கு போய் காசி விசுவநாதரை தரிசிப்பதால் பெறும் பலனை, இங்கு அருள்பாலிக்கும் இறைவனையும், இறைவியையும் வழிபட்டாலே பெறலாம் என பக்தர்கள் நம்புகின்றனர்.

- ஜெயவண்ணன்

Next Story