ஆபத்தான ஷாமனிஸ சடங்கு அனுபவங்கள்


ஆபத்தான ஷாமனிஸ சடங்கு அனுபவங்கள்
x
தினத்தந்தி 5 Sep 2017 8:55 AM GMT (Updated: 5 Sep 2017 8:55 AM GMT)

கை ரைன்ஹால்டு டானர் (Kai Reinhold Donner) என்ற பின்லாந்தைச் சேர்ந்த அறிஞர் தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவருமாவார்.

கை ரைன்ஹால்டு டானர் (Kai Reinhold Donner) என்ற பின்லாந்தைச் சேர்ந்த அறிஞர் தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவருமாவார். அவர் 1911-ம் ஆண்டு முதல் 1914-ம் ஆண்டு வரை ரஷியாவில் உள்ள சைபீரியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள பழங்குடி மக்களின் சடங்குகளையும், பழக்க வழக்கங்களையும் ஆராய்ந்த போது, அவர் அங்கு நடந்த ஒரு சுவாரசிய ஷாமனிஸ சடங்கை இவ்வாறு விவரிக்கிறார்.

‘சடங்கு ஆரம்பிக்கும் முன் ஒரு சிறு கூடாரத்தில் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்த ஷாமன், அந்தக் கூடாரத்தில் பற்ற வைத்திருந்த விளக்கு தானாய் அணையும் வரை வெளியே வரவில்லை. வெளியே எல்லோரும் அந்த ஷாமனுக்காகக் காத்திருந்தார்கள். கடைசியில் வெளியே வந்த ஷாமன், வெளியே முன்பே பற்ற வைக்கப்பட்டிருந்த நெருப்புக்கு முன் விரித்து வைக்கப்பட்டிருந்த ஒரு கலைமானின் தோலின் மீது அமர்ந்து கொண்டான். வெளியே காத்திருந்த கூட்டத்தில் ஒரு பகுதியினர், அந்தச் சடங்கு நடக்கும் இடத்தைச் சுற்றி நின்று கொண்டார்கள். சிறிது நேரத்தில் அவர்களது சலசலப்பு நின்று பேரமைதி அங்கே நிலவ ஆரம்பித்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த மத்தளத்தை எடுத்து நெஞ்சோடு இறுக்கமாக அணைத்துக் கொண்ட ஷாமன், நெருப்பின் முன் எழுந்து நின்று.. மறுபடி அங்கு அமர்ந்து கொண்டு, தன் தலைக்கு மிருகத் தோலால் ஆன தொப்பியையும் வைத்துக் கொள்கிறான். பின் கொட்டாவி விட ஆரம்பிக்கிறான். சத்தமாக பல முறை கொட்டாவி விட்ட பின் அப்படியே படுத்துக் கொள்கிறான். ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து விடும் ஷாமன், பின் விழித்து எழுந்த போது புதிய பிறவியாய் தோன்றுகிறான்’.

‘விழித்திருந்தாலும் கூட அவன் இந்த உலகம் குறித்த பிரக்ஞையோடு இல்லை என்பதும், கிட்டத்தட்ட அரை மயக்க நிலையில் இருப்பதும் பார்த்தாலே தெரிகிறது. மெல்ல எழுந்து நின்று மத்தளத்தை அடித்தபடி, நெருப்பைச் சுற்றி வந்து ஆட ஆரம்பித்த அவன், பாடவும் செய்கிறான். அவன் குரல் இப்போது அவனுடைய பழைய குரலாக இல்லாமல், முற்றிலும் மாறி இருக்கிறது. அவன் பாடிய பாடல் அங்கு யாவரும் அறிந்த மொழியில் இல்லை. மெல்ல ஆரம்பித்த பாட்டும், மத்தளச் சத்தமும் போகப் போக அதிகமாகிக் கொண்டேப் போகிறது. அவன் சுற்றி ஆடும் வேகமும் அதிகரித்தபடியே இருக்கிறது. பாடலுக்கு இடையே அவன் பலவிதக் குரல்களில் கூக்குரலிடுகிறான். அவை எல்லாம் மனிதக் குரல்களாக இல்லை. விலங்கு, பறவையினங்களின் குரல்களாக இருக்கின்றன. அவன் அழைக்கின்ற அழைப்புக்கு ஆவிகளும், சக்திகளும் கீழிறங்கி வந்தது போலத் தோன்றுகிறது. கூர்ந்து கவனிக்கையில் மத்தளச் சத்தத்தோடும், அவனது வித்தியாசக் குரலோடும் சேர்ந்து விலங்குகளின் ஓட்டங்களும், சத்தங்களும் எதிரொலித்தது போலவே தோன்றியது. ஆனால் எல்லாமே ஒரு தாள லயத்தில் இருந்தது’.

பழங்கால மொழிகள் உட்பட பலமொழிகள் அறிந்தவர் கை ரைன்ஹால்டு டானர். என்றாலும் அவர் கூட அறியாத ஏதோ ஒரு மொழியில் பாடினான் அந்த ஷாமன். அவன் தொடங்கிய சடங்கின் பிற்பகுதியில் மனிதர்களின் பங்கெடுப்பை விட, விலங்குகளின் பங்கெடுப்பு அதிகமானது போல் கை ரைன்ஹால்டு உணர்ந்தது, அவரது அதீத கற்பனை அல்ல.

அந்த உணர்வு நிலையில் இருந்து உண்மைகளை அறியும் ஷாமன், சற்று ஆளுமை குறைந்தாலும் திரும்ப பழைய நிலைமைக்கு வர முடியாத நிலைமைகளும் உருவாவது உண்டு என்பதற்கு கை ரைன்ஹால்டு டானரின் சம காலத்தவரான சாமுலி பவுலாஹர்ஜு (Samuli Paulaharju ) என்ற பேராசிரியர் சேகரித்த சில தகவல்களில் ஒரு சுவாரசியமான சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம்.

அக்மீலி (Akmeeli) என்ற ஷாமன், பல சடங்குகளில் பாடியபடியே ஓநாயாகவோ, கரடியாகவோ, பறவையாகவோ கூட மாறி தேவையானதைக் கேட்டறிந்து சொல்லி, சடங்கு முடிந்த பின்னரும் சில காலம் அந்த விலங்கின உணர்வுகளிலேயே சஞ்சரித்து விடுவதுண்டு என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த சமயங்களில் அவனது உடல் மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்படும். இது ஷாமனிஸ சக்திகளின் உச்சக்கட்ட ஆளுமையாகக் கருதப்படுகிறது. அவன் எந்த நாளில், எந்த சமயத்தில் எந்த வாக்கியம் சொல்ல வேண்டும் என்று சொல்வானோ அப்படியே அந்த நாளில், அந்த நேரத்தில், அந்த வாக்கியத்தை அவன் உடல் அருகே வந்து சொன்னால், அவன் தன் பழைய உடலுக்கும், உணர்வுநிலைக்கும் திரும்பி வருவான். இந்த அற்புதங்களைப் பலரும் கண்டிருக்கிறார் கள்.

ஒரு முறை அப்படியே வேறொரு விலங்கின உணர்வுக்குப் போகும் முன், அக்மீலி தன் மனைவியிடம் ‘என்னை இந்த வாக்கியம் சொல்லி எழுப்பு’ என்று சொல்லி, வாக்கியத்தைச் சொல்ல வேண்டிய நாளையும், நேரத்தையும் சொல்லி விட்டு மத்தளத்தை அடித்து ஆடிப்பாடி மயங்கி விழுந்தான். ஆனால் அந்த நாள், நேரம் வந்த போது அவன் மனைவிக்கு அந்த வாக்கியம் மறந்து போய் விட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் அவளுக்கு அந்த வாக்கியம் நினைவுக்கு வரவில்லை. அக்மீலியும் தன் பழைய உணர்வு நிலைக்குத் திரும்பவில்லை. பின் பிணத்தில் இருந்து துர்நாற்றம் வர ஆரம்பித்த போது, ஊர்க்காரர்கள் வேறு வழியில்லாமல் பிணத்தைப் புதைத்து விட்டார்கள்.

முப்பதாண்டு காலம் கழிந்த பின்னர் ஒரு நாள், சுள்ளி பொறுக்கக் காட்டுக்குப் போன போது அக் மீலியின் மனைவிக்கு தன் கணவன் சொல்லி விட்டுப் போன அந்த வாக்கியம் நினைவுக்கு வந்தது. கண்களில் நீர் வெள்ளமாகப் பெருக.. அக்மீலியின் மனைவி தன் கணவனின் கல்லறைக்கு ஓடிப் போய் அழுத படியே.. அந்த வாக்கியத்தைச் சொல்லி ‘எழுந்திரு என் கணவனே’ என்று சொல்லியிருக்கிறாள்.

ஆச்சரியப்படும் விதமாய் அந்தக் கல்லறையில் இருந்து அக்மீலியின் உருவம் பலவீனமாய் எழுந்ததாகவும், அதன் முகவாய்க்கட்டை லேசாய் அசைந்ததாகவும், ஏதோ முணுமுணுத்ததாகவும், சில வினாடிகளில் சடலம் திரும்பவும் அந்தக் கல்லறையிலேயே நொறுங்கி விழுந்ததாகவும் சொல்கிறார்கள். இது கேட்க கர்ண பரம்பரைக் கதை போலவே தோன்றினாலும், ஷாமனிஸ மக்கள் இதை நம்புகிறார்கள். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சடங்குகளில் மட்டுமே நடத்த வேண்டிய அற்புதங்களை மேலும் நீட்டிச் செல்வது, எத்தனையோ கட்டுப்பாட்டுக்குள் இருப்பது போல் தோன்றினாலும் ஒரு நாள் ஆபத்திலேயே முடியும் என்பதற்கு இது ஆணித்தரமான உதாரணம் என்று அவர்கள் நினைப்பதாக சாமுலி பவுலாஹர்ஜு எழுதியிருக்கிறார்.

ஷாமனிஸ சடங்குகளில் ஷாமன் அடையும் மாற்றத்தை இருவிதமாகச் சொல்கிறார்கள். பொதுவாக நடப்பது.. ஷாமன் உணர்வு நிலை கூர்மை பெற்று வேறு உலகங்களிலிருந்தும், பல்வேறு சக்திகளிடம் இருந்தும் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கேட்டுத் தெரிந்து கொள்வது தான். ஷாமன் தன் உடல் மீதுள்ள கட்டுப்பாட்டைத் தளர்த்தினாலும், அந்த சக்திகளின் பாதிப்பை தன்னிடம் சிறிது பெற்றாலும் கூட முழுவதுமாக கட்டுப்பாட்டைக் கைவிட்டு விடுவதில்லை. ஆனால் அபூர்வமாக இன்னொரு மாற்றமும் நிகழ்வதுண்டு. அந்த மாற்றத்தில் ஷாமன் தான் தேடும் சக்தியாகவே முழுவதுமாக மாறிவிடுகிறான். கேட்டுத் தெரிந்து கொண்டு சொல்வதற்குப் பதிலாக அந்த சக்தியே அவன் உடலை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அந்த உயர்சக்திகளின் பிரதிநிதியாக அறிய வேண்டியவற்றை அறிந்து சொல்வதற்குப் பதிலாக அந்த சக்தியாகவே மாறுவது ஆபத்தானது. நோக்கம் நிறைவேறிய பிறகு அந்த சக்தி விலகுவதையும், அதை விலக்க வைக்கும் திறமையை ஷாமன் பெற்றிருத்தலையும் பொறுத்தே, அவன் திரும்ப பழைய நிலைமைக்குத் திரும்பி வருதல் சாத்தியமாகிறது. இதற்கு ஆன்ம பலம் அப்பழுக்கில்லாமல் இருக்க வேண்டும். தேவையில்லாமல் சக்திகளுடன் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். தவறினால் திரும்பி வருதல் தடைப்பட்டு விடும். இதுவே அக்மீலி விஷயத்திலும் நடந்திருக்கிறது.

இந்த இரண்டாம் வகை மாற்றங்கள் பெரும்பாலும் ஷாமனிஸத்தில் 19-ம் நூற்றாண்டு வரையே அபூர்வமாகவாவது காணப்பட்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் இது போன்ற ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடுவது வெகுவாகவே குறைந்து, பின் இல்லாமல் போயிற்று. முதல் வகை ஷாமனிஸ சடங்குகளில் கூட, ஒரு ஷாமன் தக்க சமயங்களில் உதவ ஓரளவு தேர்ச்சி பெற்ற ஒரு உதவியாளரையாவது சடங்குகளின் போது வைத்துக் கொள்ளும் வழக்கம், பின்னர் பல பகுதிகளிலும் ஆரம்பமாகி விட்டது.

-தொடரும்.

Next Story