இன்பத்தை அருளும் ஹோமங்கள்


இன்பத்தை அருளும் ஹோமங்கள்
x
தினத்தந்தி 20 Sep 2017 7:14 AM GMT (Updated: 20 Sep 2017 7:13 AM GMT)

அன்றாட வாழ்க்கையில் நமக்கு வரக்கூடிய துன்பங்களுக்கான காரணங்களை பலரும் அறிந் திருந்தாலும் அதிலிருந்து விடுபட முடிவதில்லை.

துன்பங்களுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஜாதக ரீதியாக அமைந்த நவக்கிரகங்களின் பாதகமான சஞ்சார நிலைகள்தான் பிரதானமாக நமது பண்பாட்டில் கருதப்படுகிறது. துன்பங்களை நீக்கும் வழிகளில் ‘ஹோமம்’ எனப்படும் ‘அக்னி வழிபாடு’ முதன்மையாக இருக்கிறது. ‘ஹோமத்தின்’ மூலம் சம்பந்தப்பட்ட தெய்வ சக்திகளை, சில வழிமுறைகளை கையாள்வதன் மூலம் அக்னியில் எழுந்தருளச் செய்து, மந்திரப்பூர்வமாக பூஜை செய்து அருளைப்பெறும் வழிதான் ‘ஹோமம்’ என்று சொல்லலாம்.

ஹோமங்களின் வகைகள்

அதர்வண வேதமானது... யாகங்களை அமைதி தரும் ‘சாந்திகம்’, விருப்பங்களை நிறைவேற்றும் ‘பெளஷ்திகம்’, எதிரிகளை ஒழிக்கும் ‘ஆபிசாரிகம்’ என்று மூன்று வகையாக பிரித்துள்ளது. பண்டைய காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், மக்களது நன்மைக்காகவும் ஹோமங்களை செய்தார்கள். பிறகு, மன்னர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும், மக்களின் நன்மைக்காகவும் ஹோமங்களை நடத்தினார்கள். இதிகாசங்களான மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகியவற்றில் ஹோமங்கள் பற்றிய முக்கியமான செய்திகள் உள்ளன. மகாபாரதத்தில் பாஞ்சாலியும், அவளது சகோதரனும் ஹோமத்திலிருந்து வெளிவந்தார்கள் எனவும், ராமாயணத்தில் ராமனை வெல்ல இந்திரஜித் ஆபிசார வகை ஹோமமான ‘நிகும்பலா’ யாகம் செய்ததாகவும் நாம் அறிகிறோம். ஹோமம் செய்யப்படும் விதத்தைப் பற்றி பார்க்கலாம்.

கணபதி பூஜை

எந்தவொரு ஹோமமும் தொடங்குவதற்கு முன்னர் கணபதி பூஜை செய்யப்படும். துர்தேவதைகள் அல்லது துஷ்ட சக்திகள் ஆகியவற்றால் எவ்விதமான இடையூறும் இல்லாமல் ஹோமம் நடப்பதற்கு வினைகளை விலக்கும் விநாயகர் பூஜை நடத்தப்படும்.

சங்கல்பம்

உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பெயரும், முகவரியும் உண்டு. முகவரி கச்சி தமாக எழுதப்பட்ட தபால் சரியான நபரை சென்றடைகிறது. அதேபோல ஹோமங்களுக்கும் சரியான, கச்சிதமான இலக்கு அவசியம். ஹோமத்தின் பலன்கள் தலைவருக்கு முழுவதுமாக சென்று சேர வேண்டும் என்பதற்காக சங்கல்பம் செய்யப்படுகிறது.

குல தெய்வ பூஜை

உலகத்தில் நமது விருப்பத்திற்கேற்ப கடவுள் வழிபாடுகளை கடைப்பிடித்து வந்தாலும், குல தெய்வ வழிபாடு முக்கியமானது என்று நமது முன்னோர்கள் நம்பினார்கள். அதனால் குலதெய்வ பூஜையை அவர்கள் குறையில்லாமல் செய்ததோடு, சகல காரியத்துக்கும் முதலில் குல தெய்வத்தையே பிரார்த்தனை செய்தார்கள். வீட்டில் நடக்கும் சகல சுப காரியங்களுக்கான முதல் பத்திரிகையை குல தெய்வத்துக்கு வைக்கப்பட்டது.

பித்ரு பூஜை

பித்ரு லோகம் எனப்படும் நீத்தார் உலகத்தில் நமது மூன்று தலைமுறை முன்னோர்கள் இருப்பதாகவும், அவர்கள் சில நேரங்களில் மட்டும் வெளியே வருவார்கள் என்றும் நம்பப்படுகிறது. அவர்களது ஆசிகளை பெறுவதற்காக செய்யப்படுவது பித்ரு பூஜையாகும். ஒரு ஹோமம் செய்யப்படும்போது சம்பந்தப்பட்டவரது முன்னோர்களுக்கான பூஜை செய்யப்பட வேண்டும்.

கும்ப ஸ்தாபனம்

கும்பத்தை உடலாகவும், அதன் மேல் உள்ள தேங்காயை தலையாகவும், அதில் சுற்றப்படும் நூலானது நாடி நரம்புகளையும், கும்பத்திற்குள் இருக்கும் தண்ணீரானது ரத்தத்தையும் குறிப்பிடுவதாகும். கும்பத்தின் மீது வைக்கப்படும் தர்ப்பையின் மூலமாக குறிப்பிட்ட தேவதையின் ஆற்றலை கும்பத்துக்குள் வரவழைத்து நிலைப்படுத்துவது ஆவாகனம் எனப்படும்.

முக்கிய ஹோமம்

ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனிப்பட்ட முறையில் மூல மந்திரம், வேத மந்திரம், காயத்ரி மந்திரம், பிரார்த்தனை மந்திரம் என்ற நான்கு வகை மந்திரங்கள் உண்டு. அவற்றை சரியான சப்த அதிர்வுகளில் உச்சாரணம் செய்து குறிப்பிட்ட தேவதா அம்சத்தின் தெய்வீக அலைகளை ஆகர்ஷணம் செய்து, கும்பத்தில் இருக்கும் புனித நீருக்குள் நிலைப்படுத்தப்படும்.

பூர்ணாகுதி

ஹோம அக்னியில் பட்டுத் துணியில், வாசானாதி திரவியங்கள் சேர்க்கப்பட்டு அக்னி தேவனுக்கு சமர்ப்பணம் செய்வதுதான் பூர்ணாகுதி எனப்படும் ‘அவிர் பாகம்’ ஆகும். அதைப்பெற தேவேந்திரன் வருவதாகவும், ஹோமத்துக்கான காரணத்தை அவர் பூர்த்தி செய்து வைப்பதாகவும் ஐதீகம். நமது சாஸ்திரங்களின்படி இறைவனுக்கு எதையேனும் அளிக்க விரும்பினால், அக்னியின் மூலமாக அளிப்பதுதான் சிறந்த வழியாக உள்ளது. 

Next Story