திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா


திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா
x
தினத்தந்தி 20 Oct 2017 11:26 PM GMT (Updated: 20 Oct 2017 11:26 PM GMT)

திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் கோவில்களில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

திருப்பரங்குன்றம்,

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிவில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து வருகிற 26-ந்தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று காலை 9 மணிக்கு மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசாமிக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது.

இதையடுத்து சண்முகர் சன்னதியில், வள்ளி மற்றும் தெய்வானை சமேத சண்முகப்பெருமானுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து முருகப்பெருமானின் பிரதிநிதியான கோவில்பட்டருக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் கோவில் சிவாச்சாரியார்கள் சுவாமிநாதன், ராஜா என்ற சந்திரசேகர், சொக்கு, சுப்பிரமணியம், சண்முகம் சிவானந்தம், ரமேஷ், செல்லப்பா ஆகியோர் பக்தர்களுக்கு காப்பு கட்டினர்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது கையில் காப்பு கட்டிக் கொண்டு, தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப பால், மிளகு, துளசி ஆகியவற்றை ஒருவேளை மட்டும் சாப்பிட்டு கடும் விரதம் தொடங்கினர். மேலும் அவர்கள் கோவிலிலே தங்கினர். திருவிழாவையொட்டி விரதமிருக்கும் பக்தர்கள் சரவண பொய்கையில் காலை, மாலை நீராடி கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

கந்தசஷ்டி திருவிழாவின் விசேஷமாக சண்முகர் சன்னதியில் தினமும் காலை 11 மணிக்கும், மாலை 5 மணிக்குமாக இருவேளையும் சண்முகார்ச்சனன நடந்து வருகிறது. மேலும் விசாக கொறடு மண்டபத்தில் தினமும் யாகசாலை பூஜை நடக்கிறது. மேலும் பூஜையை தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கும், உற்சவர் சன்னதியில் தெய்வானை சுப்பிரமணியசாமிக்கும் தினமும் ஒரு அலங்காரம் செய்யப்படுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 24-ந்தேதி இரவு 7 மணிக்கு கோவிலுக்குள் ஆலய பணியாளர் திருக்கண்ணில் சத்திய கீரிஸ்வரர் முன்னிலையில் முருகப் பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் சக்திவேல் வாங்குகிறார். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 26-ந்தேதி காலை 8 மணிக்கு கிரிவலத்தில் சட்ட தேரோட்டம் நடக்கிறது.

இதில் விரதமிருக்கும் பக்தர்கள் சட்டத் தேரின் வடம் பிடித்து தரிசனம் செய்கிறார்கள். திருவிழாவின் முத்தாய்ப்பாக அன்று மாலை கோவிலின் கருவறையில் சுவாமிக்கு பாவாடை தரிசனம் மற்றும் தங்க கவச அலங்காரம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி செய்து வருகிறார்.

இதேபோல அழகர்மலை உச்சியில் உள்ள முருகப்பெருமானின் ஆறாவதுபடை வீடான சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி பெருந்திருவிழா நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதில் சஷ்டி மண்டபம் முன்பாக யாகசாலையில் சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அன்னவாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி எழுந்தருளி புறப்பாடு நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சண்முகார்ச்சனை நடந்தது. முன்னதாக ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். இவர்கள் தங்குவதற்கு வசதியும், உணவும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story