நலன்கள் பல தரும் பவுர்ணமி பூஜை


நலன்கள் பல தரும் பவுர்ணமி பூஜை
x
தினத்தந்தி 13 Dec 2017 7:15 AM GMT (Updated: 13 Dec 2017 7:15 AM GMT)

பவுர்ணமி என்பது விஸ்வரூப வடிவத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்களின் தரிசனம் பெற வேண்டிய நாளாக குறிப்பிடப்படுகிறது.

வுர்ணமி நாள் என்றால் முழு நிலவு நாள் என்றும், அன்று கோவில்களில் சிறப்பான வழிபாடுகள் நடக்கும் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பவுர்ணமியில் கிட்டத்தட்ட 108 வகைகள் இருப்பதாகவும், அவற்றின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு வழிபாட்டு முறைகள் உண்டு என்றும் சித்தர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, பவுர்ணமி நாளானது பகலில் தொடங்கி இரவில் முடிவது, பாதி பகல்- பாதி இரவாக அமைவது, இரவில் தொடங்கி பகலில் முடிவது என்று பவுர்ணமியில் பல்வேறு வகைகள் இருக்கின்றன.

பவுர்ணமி என்பது விஸ்வரூப வடிவத்தில் உள்ள தெய்வ மூர்த்தங்களின் தரிசனம் பெற வேண்டிய நாளாக குறிப்பிடப்படுகிறது. அதாவது, பூமியிலிருந்து வானளாவ எழுந்து நின்ற தெய்வ வடிவங்களின் தரிசனத்தை பவுர்ணமி நாளன்று பெறுவதன் காரணமாக, ஒருவரது உள்ளுணர்வு ரீதியான ஆன்மிக தன்மைகள் மேம்படுத்தப்படும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக, வெட்டவெளியில் அமைக்கப்பட்டுள்ள காளியம்மன், ஆஞ்சநேயர், அய்யனார், சங்கிலி கருப்பன் போன்ற தேவதா மூர்த்திகள் 20 அடிகளுக்கும் மேலான உயரத்தில் பல்வேறு இடங்களில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும். அவற்றை பவுர்ணமி நாட்களில் தரிசனம் செய்வது ஆன்மிக முன்னேற்றத்துக்கு உகந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அத்தகைய தெய்வ ரூபங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீண்ட காலம் ஆகியிருக்கும் பட்சத்தில் அவற்றின் அருள் பொழியும் சக்தி நிலைகளில் பூரணத்தன்மை அதிகமாக இருக்கும் என்றும் ஆன்மிக சான்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், ஆலய கோபுரங்களின் உயரத்தில் பல்வேறு தெய்வ மூர்த்தங்களின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் கோபுரம் மூலமாகவும் விஸ்வரூப தரிசனத்தை பெறலாம் என்ற காரணத்தை வைத்து ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்ற வழக்கும் இருக்கிறது. மேலும், மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெய்வ விக்கிரகங்களுக்கு பிரபஞ்ச சக்திகளை கிரகித்து, அந்த ஆற்றலை தன்னை தரிசிப்பவர்களுக்கு பல மடங்குகளாக திருப்பித்தரும் தன்மை உண்டு என்றும் ஆன்றோர்கள் மறைபொருளாக தெரிவித்துள்ளார்கள்.

இத்தகைய விஸ்வ ரூப மூர்த்திகள் இல்லாத ஊர்களில் இருப்பவர்கள் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் ஆலமரம், அரசமரம், வேப்பமரம் போன்ற பழமையான விருட்சங்களை பிரதட்சிணம் செய்து வழிபட்டு வரலாம். மேலும், பவுர்ணமி நாளின் பகல் பொழுதில் செருப்பு அணியாமல் நடந்து சென்று ஆலய தரிசனம் செய்வது பல நன்மைகளை அளிப்பதாக குறிப்பிடப்படுகிறது. சம்பந்தப்பட்ட விஸ்வரூப மூர்த்தியின் நாமங்களை மானசீகமாக ஜபம் செய்வதும் நல்ல வழியே.

* அர்த்த பூர்ணிமம் என்பது பவுர்ணமி திதி, பகலிலும் இரவிலும் சரியாக அமைந்திருப்பதாகும்.

* பூர்வ பூர்ணிமம் என்பது பவுர்ணமி திதி இரவில் தொடங்கி இரவு முழுவதும் நிறைந்து பகலில் முடிவதாகும்.

* உத்தர பூர்ணிமம் என்பது பகலில் தொடங்கி இரவில் முடிவதாகும்.

* பாச பூர்ணிமம் என்பது பெரும்பாலான நேரம் பகல் பொழுதில் அமைந்து, இரவில் சிறிது நேரம் இருப்பதாகும். 

Next Story