கோடி அவதாரம் எடுத்த கோடியம்மன்


கோடி அவதாரம் எடுத்த கோடியம்மன்
x
தினத்தந்தி 15 Dec 2017 8:10 AM GMT (Updated: 15 Dec 2017 8:10 AM GMT)

தஞ்சன், தாரகன் என்ற இரு கொடிய அரக்கர்களை அழிப்பதற்காக அம்மன், கோடி அவதாரம் எடுத்தார். இதனால் அந்த அம்மனுக்கு ‘கோடியம்மன்’ என்ற பெயர் ஏற்பட்டது.

ர்மம் தலை சாய்ந்து அதர்மம் தலை தூக்கும் போது, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவதாரம் எடுப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி.. தஞ்சன், தாரகன் என்ற இரு கொடிய அரக்கர்களை அழிப்பதற்காக அம்மன், கோடி அவதாரம் எடுத்தார். இதனால் அந்த அம்மனுக்கு ‘கோடியம்மன்’ என்ற பெயர் ஏற்பட்டது.

தஞ்சை நகரின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோடியம்மன் திருக்கோவில், தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் தஞ்சையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் கருத்தட்டான்குடியை அடுத்த வெண்ணாற்றாங்கரையில் அமைந்துள்ளது.

தலவரலாறு

தஞ்சன், தாரகன் என்ற 2 அரக்கர்கள் கடும் தவம் இருந்து, சிவன், மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோரிடம் இருந்து எவராலும் அழிக்க முடியாத வரத்தைப் பெற்றனர். வரம் பெற்ற மமதையில் அரக்கர்கள் இருவரும், தவ முனிவர்கள், தேவர்களுக்கு துன்பம் கொடுத்தனர். தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.

அரக்கர்கள் கொடுமையை முடிவுக்கு கொண்டு வர நினைத்த சிவன், ஆனந்தவல்லி அம்மனை சாந்த வடிவாக படைத்தார். அந்த அம்மனுக்கும், அரக்கர் களுக்கும் கடும் யுத்தம் நடந்தது. அம்பாளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அரக்கர்கள் தங்கள் உருவத்தை மாற்றி புதிய அவதாரம் எடுத்தனர். இவ்வாறு அவர்கள் கோடி முறை அவதாரம் எடுத்தனர். அம்பாளும், கோடி அவதாரம் எடுத்து காளிமேடு என்ற இடத்தில் அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள்.

மரணம் அடையும் தருவாயில் அரக்கர்கள் இருவரும் அம்பாளிடம், ‘தாயே! உங்களால் சாகப்போகும் நாங்கள் மிகவும் புண்ணியம் பெற்றோம். எங்கள் நினைவாக இவ்வூர் எங்கள் பெயராலேயே அழைக்கப்பட வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டனர். அம்மனும் அவர்கள் கேட்ட வரத்தை வழங்கினார். இதனால் அழகாபுரி என்ற இவ்வூர் அரக்கன் தஞ்சன் பெயரால் தஞ்சை புரி என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் மருவி தஞ்சாவூர் என்றானது.

கடந்த 1,400 ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராஜராஜ சோழனுடைய தாத்தா விஜயாலய சோழன், தஞ்சைக்கு வருகை தந்த போது இவ்வூரின் அழகை கண்டு இங்கேயே இருந்து ஆட்சி செய்ய முடிவு செய்தார். அதன்படி ஊரின் எல்லைகளை எட்டு திக்காக பிரித்து எட்டு திக்கிலும் எட்டு காளிகளை பிரதிஷ்டை செய்தார். அவ்வாறு பிரதிஷ்டை செய்த போது வடக்கு எல்லையை முதலாவதாக கொண்டு ஸ்ரீகோடியம்மனுக்கு கோவில் கட்டினார்.

கோடியம்மன் சிவனை தஞ்சமாக கொண்டுள்ளதால், கோடியம்மன் ஆலயத்தில் நந்தியுடன் கூடிய பலிபீடம் இருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.

-செந்தூர் திருமாலன். 

Next Story