பஞ்ச அரங்க தலங்கள்


பஞ்ச அரங்க தலங்கள்
x
தினத்தந்தி 26 Dec 2017 7:41 AM GMT (Updated: 26 Dec 2017 7:41 AM GMT)

காவிரி நதி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் ஆலயங்கள் அமைந்த ஐந்து மேடான பகுதிகள் என்பது இதன் பொருள்.

ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ஆதிரங்கம், ஸ்ரீரங்கத்தில் உள்ள மத்தியரங்கம், திருப்பேர்நகர் என்னும் கோவிலடியில் உள்ள அப்பாலரங்கம், கும்பகோணத்தில் உள்ள சதுர்த்தரங்கம், திருஇந்தளூரில் உள்ள பஞ்சரங்கம் ஆகிய ஐந்தும் ‘பஞ்ச அரங்கத் தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. காவிரி நதி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் (திருமால்) ஆலயங்கள் அமைந்த ஐந்து மேடான பகுதிகள் என்பது இதன் பொருள்.

ஆதிரங்கம் (கர்நாடகம்)

கர்நாடக மாநிலம், ஸ்ரீரங்கப்பட்டனத்தில் காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருகிறது. இங்குள்ள அரங்கநாத சுவாமி ஆலயமே, ‘ஆதிரங்கம்’ எனப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான கவுதமர், இங்கு வந்து பெரு மாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். இதையடுத்து பெருமாள், அவருக்கு புஜங்க சயன திருக்கோலத்தில் காட்சி தந்தார். பெருமாளிடம் அதே கோலத்தில் இங்கு எழுந்தருளும்படி முனிவர் வேண்டிக் கொண்டதன் பேரில், இறைவன் எழுந்தருளிய தலம் இது.

மத்தியரங்கம்

தமிழ்நாட்டில் காவிரி நதி இரண்டாகப் பிரிந்து, மீண்டும் ஒன்று சேருமிடம் ஸ்ரீரங்கம் ஆகும். இது ‘மத்தியரங்கம்’ என்று பெயர் பெறுகிறது. சிலர் இதை ‘அனந்தரங்கம்’ என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். முதல் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம், 21 கோபுரங்களும், 7 சுற்று பிரகாரங்களும் அமையப்பெற்ற ஒரு சுயம்புத் தலம். இங்கு பெருமாள் தங்கத்தால் வேயப்பட்ட விமானத்தின் கீழே புஜங்க சயனத் திருக் கோலத்தில் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார். மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் இதுவாகும்.

அப்பாலரங்கம்

108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், பஞ்ச அரங்க தலங்களில் ‘அப்பாலரங்கம்’ என்றும் போற்றப்படுகிறது, திருப்பேர்நகர் என்ற கோவிலடி அப்பால ரங்கநாதர் கோவில். இந்த ஆலயம் கொள்ளிடம் இரண்டாகப் பிரியும் இடத்தில் இந்திரகிரி என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. திருச்சி அருகே உள்ள லால்குடியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.

உபமன்யுவிடம் இருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால், இத்தல இறைவனுக்கு அப்பக்குடத்தான் (அப்பால ரங்கநாதர்) என்று பெயர். இங்கு பெருமாள் மேற்கு நோக்கிய கோலத்தில், புஜங்க சயனத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாள், இந்திரனுக்குக் கர்வம் போக்கியும், மார்க்கண்டேய முனிவருக்கு எம பயம் நீக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம் மற்றும் பாவம் போக்கியும் அருளிய தலம்.

சதுர்த்தரங்கம்

கும்பகோணம் சாரங்கபாணி ஆலயம் தான் ‘சதுர்த்தரங்கம்’ என்று போற்றப்படுகிறது. காவிரி நதி - காவிரி, அரசலாறு என்று இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் இடமான கும்ப கோணத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த திவ்யதேசத்தில் பெருமாள் சன்னிதி ஒரு தேர் போன்ற அமைப்பில் இருக்கிறது. தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தட்சிணாயன வாசல்கள் உள்ளன. பெருமாள் வைதிக விமானத்தின் கீழ் சங்கு, சக்கரம் மற்றும் சாரங்கம் என்னும் வில் ஏந்தியவாறு, கிழக்கு நோக்கி உத்தான சயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார். எனவே இவர் ‘சாரங்கபாணி’ என்று பெயர் பெற்றுள்ளார். இத்தலத்தில் பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்துள்ளனர்.

பஞ்சரங்கம்

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம், பெருமாளின் 108 திருப்பதி களுள் ஒன்று. பஞ்ச அரங்க தலங்களில் ‘பஞ்சரங்கம்’ மற்றும் ‘அந்தரங்கம்’ என்று சொல்லப்படுகிறது. இத்தலத்தில் அருளும் பரிமள ரங்கநாதர், வேதசக்ர விமானத்தின் கீழ் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். பெருமாள் சன்னிதியின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது சிறப்புக்குரியதாகும். பரிமளரங்கநாதர் திருவடிகளில் எமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடி, தன் சாபம் நீங்கப் பெற்றமையால் இவ்வூர் ‘திருஇந்தளூர்’ எனப்பெயர் பெற்றது. 

Next Story