சங்கீத ஞானம் அருளும் மகான்


சங்கீத ஞானம் அருளும் மகான்
x
தினத்தந்தி 26 Dec 2017 8:01 AM GMT (Updated: 26 Dec 2017 8:01 AM GMT)

நெரூரில் உள்ள அவரது ஜீவசமாதி கிட்டத்தட்ட 220 ஆண்டுகளாக அமைதியான முறையில் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் அளித்து வருகிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று விதங்களிலும் சிறப்பு பெற்ற தலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி ஆகும். காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள கோவில்களில் மும்மூர்த்தி தலமாக இருப்பதோடு, அங்குள்ள காவிரி தீர்த்தம் பிரபலமானது. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் நதியின் மத்தியில் அமைந்துள்ள அகத்தியம்பாறை என்னும் இடத்தில் ஒரு மகான் தவம் செய்து கொண்டு இருந்தார். அப்போது காவிரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் அவரை இழுத்து சென்று விட்டது. வெள்ளப்பெருக்கு அடங்கியதும் மகானை அவரது சீடர்களும், பொது மக்களும் தேடியபோது, அவர் தென்படவில்லை. பல காலம் கழித்து கட்டிடம் கட்ட ஆற்று மணல் எடுக்கப்படும்போது, மண்ணில் புதைந்திருந்த அந்த மகானின் தலைப்பகுதியில் மண்வெட்டி பட்டு, ஏற்பட்ட காயம் காரணமாக ரத்தம் வந்தது. மணல் எடுக்க வந்தவர்கள் பயந்துபோய், ஊர் பெரியவர்களைகூட்டி வந்து அந்த மகானை சுற்றிலும் உள்ள மணலை அகற்றி, அவரது உடலை சுத்தம் செய்தவுடன், யாரிடமும் எதுவும் பேசாமல் அந்த மகான் அமைதியாக நடந்து சென்று விட்டார்.

அந்த மகான் சதாசிவ பிரம்மம் ஆவார். கரூர் மாவட்ட தலைநகர் கரூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் காவிரிக்கரை அருகே உள்ள நெரூர் என்னும் ஊரில் அவரது அதிஸ்டானம் எனப்படும் ஜீவசமாதி அமைந்துள்ளது. அவரது குருவான பரமசிவேந்திராள் என்பவர், சிவராமகிருஷ்ணன் என்ற அவரது இயற்பெயரை மாற்றி சதாசிவம் என்னும் பெயரை சூட்டி, சந்நியாசம் கொடுத்து அனுப்பினார். குருவின் உபதேசம் காரணமாக யாரிடமும் அவர் அதிகம் பேசாமல் இருந்தார். அவர் நெரூரில் நீண்ட காலம் வாழ்ந்து வந்துள்ளார்.

ஒரு முறை புதுக்கோட்டை பகுதியில் சதாசிவ பிரம்மம் அறுவடை முடிந்த நெல் வயல்களுக்கிடையே நடந்து சென்று கொண்டு இருந்தார். வயலில் ஆட்கள் வைக்கோல் போரை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தனர். அந்த வைக்கோல் குவியல்களுக்கு இடையில் அவர் விழுந்ததை கவனிக்காமல் வைக்கோல் போரை அவர் மீதே பெரிதாக அடுக்கி விட்டனர். கிட்டத்தட்ட, ஒரு வருடம் கழித்து பசுக் களுக்கு தீவனமாக வைக்க எடுக்கப்பட்ட வைக்கோல் போரில் இருந்து சதாசிவ பிரம்மம் சாதாரணமாக எழுந்து நடந்து செல்ல, மக்கள் அவரை ஆச்சரியமாக பார்த்தனர்.

இந்த விஷயம் அப்போதைய ராஜாங்க மந்திரியிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் மூலம், மன்னர் விஜய ரகுநாத தொண்டைமானிடம் சென்றது. அவர் சதாசிவ பிரம்மம் இருக்குமிடம் வந்து அவருடன் பேச முயன்றார். ஆனால், அவரது முயற்சி பலிக்கவில்லை. அவர் தொடர்ந்து பேச முயன்று கொண்டே இருந்தார். கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழிந்த பின்னர், மன்னரின் பொறுமையை அறிந்த சதாசிவ பிரம்மம் அவருக்கு உரிய மந்திரத்தை மணலிலே எழுதி காட்டினார். அதை மனப்பாடம் செய்த மன்னர், அந்த மணலை தன் அங்க வஸ்திரத்தில் எடுத்துச்சென்று அரண்மனையில் வைத்து பூஜை செய்தார். அந்த பூஜை இன்றும் புதுக்கோட்டை அரண்மனையில் செய்யப்படுவதாக தகவல் உண்டு.

கரூரில் உள்ள தான்தோன்றிமலை கோவிலில் உள்ள சுயம்பு மூர்த்தமான கல்யாண வெங்கடரமண சுவாமி சன்னிதிக்குள், ஜன வசிய எந்திரத்தை சதாசிவ பிரம்மம் தனது கைகளால் வரைந்து, பூஜை செய்து அங்கு அமைத்து வைத்தார். திருப்பதி செல்ல ஆசைப்பட்டும், பொருளாதார சிக்கல்கள் காரணமாக செல்ல இயலாத பக்தர்கள், கரூர் தான்தோன்றி மலையப்பரை வணங்கினால், திருப்பதி சென்று வந்ததற்கு சமமான பலன்கள் கிடைப்பதாக ஐதீகம்.

ஜீவசமாதி அடையும் காலத்தை உணர்ந்த சதாசிவ பிரம்மம், தனது சீடர்களான தஞ்சாவூர், புதுக்கோட்டை, மைசூர் மகாராஜாக்களை அழைத்தார். இப்போது அவர் ஜீவ சமாதி இருக்கும் இடத்தில், குகை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி, ஜீவசமாதி குகை அமைக்கப்பட்டது. சீடர்களை அழைத்து, குகைக்குள் அவர் இறங்கிய பின்னர் விபூதி, உப்பு, மஞ்சள், செங்கற்பொடி ஆகிய வற்றை போட்டு குகையை மூடிவிடச்சொன்னார். அவ்வாறு மூடிய பின்னர் 7 நாட்கள் கழிந்த பிறகு, அங்கே ஒரு வில்வ மரம் முளைக்கும் என்றும், 11 நாட்கள் கழித்து காசியில் இருந்து வரக்கூடிய வெண்மையான சிவலிங்கத்தை, ஜீவசமாதிக்கு முன்புறமாக 12 அடிகள் தள்ளி கிழக்கு பக்கத்தில் கோவில் அமைத்து விடவும் தெரிவித்து விட்டு, குகைக்குள் சென்று அமர்ந்து ஜீவ சமாதி அடைந்து விட்டார்.

அதன்படி 8-ம் நாளில் வில்வம் துளிர்விட, 12-ம் நாள் காசியிலிருந்து சாது ஒருவர் மூலம் சிவலிங்கம் வந்து சேர்ந்தது. சதாசிவ பிரம்மம் ஜீவசமாதி அடைந்த அதே நாளில் மானா மதுரையில் வைகை ஆற்றங்கரையில் உள்ள சிவன் கோவில் பின்புறம் சூட்சும உடல் வடிவத்திலும், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் காரண உடல் வடிவத்திலும் ஐக்கியமானதாக வரலாறு. நெரூரில் உள்ள அவரது ஜீவசமாதி கிட்டத்தட்ட 220 ஆண்டுகளாக அமைதியான முறையில் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் அளித்து வருகிறது.

மிகச்சிறந்த சங்கீத ஞானம் கொண்ட அவர் இயற்றிய பல கீர்த்தனங்கள் தற்போது சங்கீத உலகில் பிரபலமாக உள்ளன. ‘மானச சஞ்சரரே’, ‘பிபரே ராமரசம்’, ‘பஜரே ரகு வீரம்’ என்ற கீர்த்தனைகள் பலருக்கும் அறிமுகமானவை என்பதோடு, சங்கீத ஞானம் பெற விரும்புபவர்கள் அவரது ஜீவ சமாதியை நாடி செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-ஸ்ரீஜானகிராம். 

Next Story