ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 1 Jan 2018 11:43 PM GMT (Updated: 1 Jan 2018 11:43 PM GMT)

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பூந்தமல்லி,

2017 முடிந்து 2018 ஆங்கில புத்தாண்டு நேற்று பிறந்தது. இதையடுத்து காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 12 மணிக்கு கோவிலின் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அலங்கரிக்கப்பட்ட முருகன், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணி முதல் நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. நள்ளிரவு முதலே பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்கி சாமி தரிசனம் செய்யத்தொடங்கினர்.

பக்தர்களுக்கு 10 ஆயிரம் லட்டுகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற வரதராஜபெருமாள் கோவில், காஞ்சி காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், அஷ்டபுஜம் பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், குமரகோட்டம் முருகன் கோவில், சங்கரமடம் எதிரில் உள்ள ஆஞ்ச நேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சீபுரம் தாமல்வார் தெருவில் உள்ள தூய இதய அன்னை ஆலயம், கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள புனித சூசையப்பர் ஆலயம், ரெயில்வே ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம் ஆகியவற்றில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் சுப்பிரமண்ய சாமி சிறப்பு அலங்காரத்திலும், உற்சவர் முத்தங்கி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள்கோவிலில உள்ள புகழ்பெற்ற பாடலிபுத்திர நரசிம்மபெருமாள்கோவிலில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு வேதாந்த தேசிகர் பெருமாள்கோவில், திருத்தேரி வரசித்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூரில் உள்ள பழமை வாய்ந்த வீரராகவ பெருமாள் கோவில், திரிபுராந்தகேஸ்வரர் கோவில், ஜலநாராயணேஸ்வரர் கோவில், புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் மற்றும் திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம், நரசிங்கபுரம், களாம்பாக்கம், இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, திருமழிசை, வெள்ளவேடு போன்ற சுற்று வட்டார கோவில்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்பந்தியூர் ஊராட்சியில் உள்ள பழமை வாய்ந்த விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் லட்சுமி குபேரருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஸ்ரீதேவி பூதேவி சமேத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் சார்பில் அன்னதானதிட்டம் தொடங்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட விஜயநகரில் பிரசித்திப்பெற்ற கருமாரியம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் கருமாரியம்மனுக்கு புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள், மலர்கள், பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

Next Story