ஆன்மிகம்

முருகப்பெருமான் அருளும் தலங்கள் + "||" + Places of grace at lord Murugan

முருகப்பெருமான் அருளும் தலங்கள்

முருகப்பெருமான் அருளும் தலங்கள்
* முருகப்பெருமான் வடக்கு திசை நோக்கி தண்டாயுதபாணியாக அருள்பாலிக்கும் தலம் கல்லணையில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவிழாவில் 5-ம் நாள் தீமிதி விழா நடைபெறும்.
* திருச்சியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது மேலகல்கந்தார் கோட்டை. இங்கு பாலமுருகன் ஆலயம் இருக்கிறது. ஆலய கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் இருக்க, அவருக்கு முன்பாக அன்னை மாரியம்மன் அமர்ந்த கோலத்தில் பாலமுருகனுக்கு பாதுகாவலாய் இருக்கிறாள். இவர்கள் இருவரையும் வணங்குவதால், குழந்தைப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

* லால்குடியிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது மணக்கால் சுப்பிரமணியசுவாமி கோவில். ஆவணி மாதம் நடைபெறும் இந்த ஆலயத் திருவிழாவின் போது, அருகில் உள்ள வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் இருந்து பெருமாள் பூதேவி-ஸ்ரீதேவி சமேதராக வருகை தந்து அருள்பாலிக்கிறார்.

* சீர்காழிக்கு மேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் கொண்டல் என்ற கிராமம் இருக்கிறது. இங்கு குமார சுப்பிரமணிய சுவாமி அருள்கிறார். இவர் திருமண வரம் தரும் தெய்வமாக இருக்கிறார். இவரை வணங்குபவர்களுக்கு விரைவிலேயே திருமணம் கைகூடுகிறது.

* திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 44 கிலோமீட்டரில் செட்டிகுளம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள தண்டாயுதபாணி ஆலயத்தில் குழந்தைப்பேறு வேண்டி இந்த முருகனைப் பிரார்த்திக்கும் தம்பதியர், வேண்டுதல் நிறைவேறியதும் தங்களின் குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து வந்து, பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.

* கோவை காந்திபுரத்தில் இருந்து 8 கிலோமீட்டரில் உள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம். கிரகப் பெயர்ச்சி நாட்களில் இந்த ஆலயத்தில் பலவகை மூலிகைகளைக் கொண்டு, விசேஷ யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் கலந்து கொள்வதால், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்கள் அகலுமாம்.

* திருப்பூர்-நம்பியூர் பாதையில் 15 கி.மீ. தூரத்தில் உள்ள உதயகிரியில் முத்து வேலாயுத சுவாமி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள பாறை ஒன்றில் ஐந்து தலை நாகமொன்று புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து நாகதோஷ நிவர்த்தி செய்துகொள்கின்றனர். இவ்வாலயத்திலுள்ள கால பைரவருக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. அதுபோலவே சகஸ்ரலிங்கம், பஞ்சலிங்கங்களுக்கும் தனித் தனி விமானங்களுடன் கூடிய சன்னிதிகள் அமைந்துள்ளன. ஆலயத்தின் மதிற் சுவர்களில் மீன் இலட்சணைகள் சிற்பங்களாக உள்ளதால் இக்கோவில் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் அமையப் பெற்றதோ எனத் தோன்றுகிறது. ஆலயத்தின் வட புறம் அழகிய சரவணப் பொய்கையுள்ளது.