திருமாலும் திருமகளும் வழிபட்ட ஆலயம்


திருமாலும் திருமகளும் வழிபட்ட  ஆலயம்
x
தினத்தந்தி 2 Feb 2018 1:30 AM GMT (Updated: 1 Feb 2018 9:07 AM GMT)

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிங்காரத்தோப்பு பகுதியில் பிரசன்னநாயகி சமேத திருக்களாஞ் செடியுடையார் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தை பிரம்மபுரீஸ்வரர் கோவில் என்றும் அழைப்பார்கள்.

‘களா’ என்பது புதர் வகைச் செடி. சிலர் இதைக் ‘கிளா’ என்றும் கூறுவர். தோற்றத்தில் காரைச்செடியை ஒத்திருக்கும் இச்செடி, மலைப்பிரதேசங்களில் 5 முதல் 6 அடி உயரத்திற்கு தன்னிச்சையாக வளரக்கூடியவை. வசிஷ்ட முனிவர், களா செடியின் கீழ் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால், இத்தல இறைவன் ‘திருக்களாஞ் செடியுடையார்’ என்று பெயர் பெற்றார்.

கவுடதேசத்து மன்னன் ஐந்தாம் மனுவின் மூத்த குமாரன் சிங்கவர்மன். இவன் தோல் நோயால் அவதிப்பட்ட£ன். அதனால் தன்னுடைய அரச பதவியை, தனது சகோதரர் களான வேதவர்மன், சுதமதி ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டு இறை தரிசனம் செய்ய புறப்பட்டான். தில்லை நடராஜரை வணங்க வேண்டும் என்று நினைத்த சிங்கவர்மன், தில்லை வனத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு மூலநாதரை வணங்கும் போது, வியாக்ரபாத முனிவரைக் கண்டான். அவரைப் பணிந்து பஞ்சாட்சர மந்திர உபதேசம் பெற்றான். பிறகு முனிவர் பணித்தபடி சிவகங்கையில் நீராட அவனது உடல் நோய் நீங்கியது. அவனது உடன் பொன்னிறமாக மின்னியது. இதனால் அவனுக்கு இரண்யவர்மன் என்ற பெயர் வந்தது.

இரணியவர்மன் குணம் பெற்றதும், அவன் தில்லை திருச் ஷேத்திரத்தில் தங்கி இருப்பதும் தூதுவர்கள் மூலம் மனுவிற்கு தெரியவந்தது. இதற்கிடையில் அரச பதவிக்காக மனுவின் மற்ற இரு மகன்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர். இதைக் கண்டு வெறுப்படைந்த அவர், தன்னுடைய மூத்த மகனை அழைத்து வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்ள செய்யும்படி குல குருவான வசிஷ்டரிடம் சொல்லிவிட்டு உயிர் நீத்தார்.

இதையடுத்து இரண்யவர்மனை அழைத்து வருவதற்காக, தில்லை வனம் புறப்பட்டார் வசிஷ்டர். தில்லையின் வட எல்லைக்குள் நுழைந்தவர், ஒரு சிவலிங்க திருமேனியை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

இந்த நிலையில் இரண்யவர்மனை அழைத்துச் செல்வதற்காக, வசிஷ்ட முனிவர் வந்திருப்பதை அறிந்த வியாக்ரபாதர், இரண்ய வர்மனை முன் சென்று வசிஷ்டரை சந்திக்கும்படி கூறினார்.

இரண்யவர்மனும் வசிஷ்டர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டுக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்றான். அங்கு வசிஷ்ட முனிவரைச் சந்தித்தவன், தன் தந்தை இறந்த செய்தியைக் கேட்டு துயருற்றான். சிறிது நேரத்தில் வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் அங்கு வந்தனர். வசிஷ்டர் அவர்கள் இருவரையும் வரவேற்று, திருகளாஞ் செடியின் கீழ் வீற்றிருந்த பெருமானை தரிசிக்கச் செய்தார். பின்னர் இரண்யவர்மனை அழைத்துக் கொண்டு வசிஷ்டர் கவுடதேசம் சென்றார். அவருக்குப் பின், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருக்களாஞ் செடியுடையாருக்கு, வியாக்ரபாதர் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தார்.

வசிஷ்டரால் ஸ்தாபனம் செய்யப்பட்டு, வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்ட அந்த சிவலிங்கத்தை வழிபடும் ஆவல் திருமாலுக்கு ஏற்பட்டது. அவர் தன்னுடைய ஆவலை திருமகளான லட்சுமிதேவியிடம் கூறினார். திருமகள் தானும் வருவதாக கூற, இருவருமாக பூலோகம் வந்து திருகளாஞ் செடியுடையாரை வழிபட்டனர்.

மேற்கண்ட வரலாறானது, கோவிலின் கருவறை தென் சுற்றில், தட்சிணாமூர்த்தி சன்னிதிக்கு அருகே அழகான சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது.

பிரம்ம ஞானம் பெறுவதற்காகவே வசிஷ்டர், இத்தல இறைவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இத்தல இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.  

கிழக்கு நோக்கியபடி அமைந்துள்ளது இந்த ஆலயம். நந்திதேவரின் மீது உமையம்மையுடன் ஈசன் அமர்ந்து அருள் பாலிக்கும் சிற்பம் தாங்கிய பிரதான வாசலைக் கடந்து உள்ளே செல்ல வேண்டும். அப்படி உள்நுழையும் போது இடது புறம் அரச மரத்தின் கீழ் ஒரு சிவலிங்கமும், வலது புறம் ஆலய கிணறும் இருப்பதைக் காணலாம். வாசலுக்கு நேர் எதிரில் திருகளாஞ் செடியுடையார் கருவறை, கருவறை அர்த்த மண்டபம், முன்மண்டபங்களுடன் அழகிய சிற்பங்கள் நிறைந்த கருங்கல் கற்றளி உள்ளது. சன்னிதி சுற்றில் எண்ணற்ற கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

துவார பாலகர்கள், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மற்றும் சிதம்பர புராண காட்சிகள் என காணும் சிற்பங்கள் யாவும் மிகுந்த கலை நேர்த்தியுடன் உருவாக்கப்பட்டு, காண்போரை கவர்ந்திழுக் கின்றது. குறிப்பாக கொற்றவையின் உருவம் அனைவரையும் கவருகின்றது. சன்னிதியின் உள்ளே திருக்களாஞ் செடியுடையார் சிவலிங்க ரூபத்தில் அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டபத்தில் பெருமானுக்கு இடதுபுறத்தில் கிழக்கு நோக்கியபடி அம்பாளின் சன்னிதி உள்ளது. அங்கு பாதுகாப்பு கருதி கொண்டு வந்து வைக்கப்பட்ட பிரம்மதேவர் வடதிசை நோக்கியவாறும், யோக குரு தென் திசை பார்த்தபடியும் அருள்பாலிக்கின்றனர். முற்காலத்தில் பல சிவாலயங்களில் அம்பாள் சன்னிதி ஏற்படுத்தப்படாமல் இருந்துள்ளது. அம்பாள் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டதும், பின்னர் அம்பாளுக்கு தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டதும் காலப்போக்கில் நிகழ்ந்தவைகள் என்று கூறுகிறார்கள். அதுபோல இவ்வாலயத்திலும் பிற்காலத்தில் அம்பாளுக்கு தனி சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.

பிரகாரச் சுற்றில் விநாயகர், வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், தென்முகம் நோக்கிய பிரசன்னநாயகி மற்றும் மடப்பள்ளி போன்றவை உள்ளன. மடப்பள்ளிக்கு அருகில் வடக்கு நோக்கிய சிங்கார வள்ளி சன்னிதி காணப்படுகின்றது.

இங்குள்ள சிங்கார வள்ளி என்பவர், இத்தல பெருமானை வழிபட வந்த பக்தை ஆவார். அவர் பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு இவ்வாலயத்தின் காவல் தெய்வமாக வீற்றிருக்கிறார் என்கிறார்கள் தல புராணம் அறிந்தவர்கள். ஆலயத்தின் வெளியில் மறைஞானசம்பந்தரின் அதிஷ்டானமும், அதனருகே அவர் வாழ்ந்த சிதலமடைந்த வீடும் காணக்கிடைக்கிறது. கோவிலின் வடகிழக்கு திசையில் ஆலய தீர்த்தமான பிரம்மதீர்த்தம் அமைந்துள்ளது. இது இந்த ஆலயத்துக்கு மட்டுமின்றி, தில்லை ஆடவல்லான் ஆலயத்தின் பத்து தீர்த்தங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு வருடம் பங்குனி அமாவாசைக்கு அடுத்த நாள் (தெலுங்கு வருடபிறப்பு), சிதம்பரம் நடராஜபெருமான் இந்தத் தீர்த்தத்திற்கு வந்து தீர்த்தவாரி கொடுப்பது என்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. தமிழுடன் தெலுங்கு மொழியையும் தாய்மொழியாகக் கொண்டிருந்த பல்லவ மன்னர்கள், புத்தாண்டு தினத்தன்று நடராஜரை தரிசிப்பதற்காக இந்த ஏற்பாட்டை செய்திருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

கடந்த 2006–ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட இந்த ஆலயம் பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலய இறைவனை தரிசிக்க உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த ஆலயத்தில் தினசரி ஒருகால பூஜை மட்டும் நடைபெறுகிறது. வசிஷ்டர், வியாக்கிரபாதர், பதஞ்சலி, திருமால், திருமகள், மறைஞானசம்பந்தர் ஆகியோர் வழிபட்ட இக்கோவில் இறைவனைப் பற்றி அதிவீரராம பாண்டியர் பாடியுள்ளார்.

நடராஜர் அரசாட்சி புரியும் சிதம்பரத்திற்கு வடமேற்கில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிங்காரத் தோப்பு திருத்தலம். இந்த ஆலயத்திற்குச் செல்ல சிதம்பரத்தின் அனைத்து பேருந்து நிறுத்தங்களில் இருந்தும் ஆட்டோ வசதி உள்ளது.

–நெய்வாசல் நெடுஞ்செழியன்.

Next Story