பாஸ்கா பண்டிகை


பாஸ்கா பண்டிகை
x
தினத்தந்தி 21 Feb 2018 8:24 AM GMT (Updated: 21 Feb 2018 8:24 AM GMT)

சாவின் தூதன் ‘கடந்து சென்ற’ அந்த விழா தான் ‘பாஸ்கா’ என யூதர்களால் ஆண்டு தோறும் கொண்டாடப் படுகிறது.

விவிலிய விழாக்கள்

விழாக்கள் அர்த்தம் பொதிந்தவை. வரலாற்றை அறிந்து கொள்ளவும், அவை சொல்லும் ஆன்மிக ஆழங்களை தலைமுறை தோறும் சுமந்து செல்லவும் விழாக்கள் பயன்படுகின்றன. விவிலிய விழாக்கள் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்தும் நிகழ்வுகளாகவே அமைந்திருக்கின்றன.

அவற்றில் மிக முக்கியமான ஒன்று பாஸ்கா பண்டிகை. ஆங்கிலத்தில் ‘பாஸோவர்’ என்றும், தமிழில் ‘பஸ்கா’ என்றும் அழைக்கப்படுகின்ற இந்த விழா ‘பெஷாக்’ எனும் எபிரேய வார்த்தையிலிருந்து உருவானது. ‘கடந்து செல்லல்’ என இதற்குப் பொருள் கொள்ளலாம்.

இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டில் பஞ்சம் பிழைக்க வந்து சேர்கின்றனர். ஒரு சின்ன குழுவாக இருக்கும் அவர்கள் அங்கே வாழ்ந்து, பலுகிப் பெருகி மிகப்பெரிய இனமாக உருவாகின்றனர். இப்போது எகிப்திய மன்னனுக்கு இந்த வேற்று தேச வாசிகளை சொந்த மக்களாய் நடத்த மனம் இல்லாமல் போகிறது. அவர்களை அடிமைகளாக மாற்றுகிறார்.

சுகமாய், சுதந்திரமாய் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள், எகிப்து நாட்டுக்குள் அடிமைகளாக அவதிப்பட ஆரம்பித்தனர். நானூறு ஆண்டுகள் அவர்களுடைய நிம்மதியை ஒட்டு மொத்தமாகச் சிதைத்து விட்டது. அவர்கள் கடவுளை நோக்கி மன்றாடினார்கள். கடவுள் ஒரு விடுதலை வீரரை களமிறக்கினார். அவர் தான் மோசே.

மோசே, அவரது சகோதரன் ஆரோன் இருவரும் கடவுளின் துணையோடு எகிப்திய மன்னனிடம் சென்று இஸ்ரயேல் மக்களை விடுவிக்க கோரிக்கை விடுத்தனர். மன்னன் மசியவில்லை.

கடவுள் மன்னனுக்கும் அவன் மக்களுக்கும் எதிராக போர் தொடுக்க ஆரம்பித்தார். தவளைகள், பூச்சிகள், உடலில் கொப்பளங்கள் என பல்வேறு எச்சரிக்கைகளை அனுப்பினார். இது எகிப்து மக்களை மட்டுமே பாதித்தது, இஸ்ரயேல் மக்களை பாதிக்கவில்லை. எனினும் எகிப்திய மன்னன் மனம் இளகவில்லை.

கடைசியாக இறைவன் தலைப்பேறு களைக் கொன்றுவிட முடிவெடுத்தார். இஸ்ரயேல் மக்களின் தலைப்பேறுகள் இதிலிருந்து தப்ப வேண்டுமெனில் நிசான் மாதத்தின் 14-ம் நாளன்று, வயது ஒன்று நிரம்பிய ஆடு ஒன்றை பலியிட்டு, அதன் ரத்தத்தை வீட்டுக் கதவின் நிலைகளின் மேல் பாகத்திலும், இரண்டு பக்கங்களிலும் பூசவேண்டும்.

இரவில் கடவுளின் தூதர் அந்த நாடு வழியாக பயணிப்பார். ரத்தம் பூசப்பட்ட வீடுகள் தப்பும். மற்ற வீடுகளிலுள்ள தலைச்சன் பிள்ளைகள் இறக்கும்.

இஸ்ரயேல் மக்கள் அப்படியே செய்தனர், தப்பித்தனர்.

எகிப்தியர் வீடுகள் அனைத்திலும் தலைப்பேறுகள் இறந்தன. மன்னனின் மகனும் மரணமடைந்தான். ஒற்றை நாளில் எகிப்து தேசம், கண்ணீர் கடலானது. மன்னன் வெலவெலத்தான். அடிமை மக்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி கொடுத்தான்.

சாவின் தூதன் ‘கடந்து சென்ற’ அந்த விழா தான் ‘பாஸ்கா’ என யூதர்களால் ஆண்டு தோறும் கொண்டாடப் படுகிறது. சுமார் 3300 ஆண்டுகள் பழமையான இந்த விழா, புதிய ஏற்பாட்டில் புதிய பரிமாணம் பெறுகிறது.

புதிய ஏற்பாட்டை நிஜம் என்றும், அதன் நிழல் தான் பழைய ஏற்பாடு என்றும் விவிலிய ஆய்வாளர்கள் தெளிவுபடுத்துகின்றனர். இந்த விழா இயேசுவின் மரணத்தின் நிழல்.

பாஸ்கா விழாவுக்கு ஒரு ஆடு கொல்லப்பட வேண்டும். புதிய ஏற்பாடு இயேசுவை ஆட்டுக்குட்டியுடன் ஒப்பிடுகிறது.

பாஸ்காவில் கொல்லப்படும் ஆட்டின் வயது ஒன்று, அது மனித வயதோடு ஒப்பிடுகையில் 30 என்கின்றனர் ஆய்வாளர்கள். இயேசுவின் வயது 33.

பாஸ்காவில் ஆடு கொல்லப்பட வேண்டிய நேரம் மதியம் சுமார் மூன்று மணி. இயேசு கொல்லப்பட்ட நேரம் மதியம் மூன்று மணி.

இஸ்ரயேல் மக்கள் எகிப்தை விட்டு வெளியேறியபின் மன்னன் மீண்டும் பின்தொடர்ந்து சென்று அவர்களைப் பழிவாங்க முயல்கிறார். இஸ்ரயேல் மக்களுக்காக கடவுள் செங்கடலை இரண்டாய் பிரிக்க, மக்கள் அதன் வழியே நடந்து மறுகரைக்குச் செல்கின்றனர். துரத்தி வந்த எகிப்திய படை நீரில் மூழ்கி அழிகிறது. இப்போது முழுமையான விடுதலை. இஸ்ரயேல் மக்கள் எகிப்தை விட்டு வெளியேறிய மூன்றாவது நாள் இது நிகழ்கிறது. இயேசு மரணத்தை வென்று உயிர்த்தது மூன்றாவது நாள்.

இப்படி இயேசுவின் மீட்பின் வாழ்க்கை இஸ்ரயேல் மக்களின் விடுதலை வாழ்க்கையோடு நெருக்கமாய் இணைந்து விடுகிறது.

‘நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்’ (1 கொரி 5:7) எனும் விவிலியம் இயேசுவின் மரணத்தையும் உயிர்ப்பையும் ‘புதிய பாஸ்கா’ வாகக் கொண்டாடுகிறது.

பாவம் எனும் இருள் கொண்டு வருகின்ற சாவை, இயேசுவின் ரத்தம் எனும் பலி மீட்கிறது. அதை நினைவுகூர்ந்து பாவவாழ்க்கையை விட்டு வெளியேற வேண்டும் எனும் சிந்தனையை இந்த விழா நமக்கு விளக்குகிறது. 

Next Story