ஜோதிடத்தில் மருத்துவம் : ஜாதகத்தில் உயிராக போற்றப்படும் லக்னம்


ஜோதிடத்தில்  மருத்துவம் : ஜாதகத்தில் உயிராக போற்றப்படும் லக்னம்
x
தினத்தந்தி 1 March 2018 10:00 PM GMT (Updated: 1 March 2018 10:19 AM GMT)

நாம் மிகப்பெரிய சுபகாரியங்கள் செய்யும் போது, நல்ல சுபமுகூர்த்த நாளை பார்ப்பது உண்டு.

நாம் தேர்வு செய்யும் முகூர்த்த நாளை, அன்றைய தினம் நேத்திரம், ஜீவன் உள்ளதா? என்று கவனித்து தான் பஞ்சாங்கத்தில் குறிப்பிடுவார்கள். சுபகாரியங்கள் செய்யும் பொழுது சுபங்கள் யாவும் விருத்தியாகி வருவதற்கு அது சக்தி மிகுந்த நாளாக இருக்க வேண்டும். மனிதனுக்கோ அல்லது விலங்கிற்கோ உடலும், உயிரும் எவ்வளவு முக்கியமோ, அது போல ஒரு நாளுக்கு சக்தியாக இருப்பது நேத்திரமும், ஜீவனும் தான். ஆம்.. நேத்திரம் – ஜீவன் என்பது ஒரு நல்ல நாளுக்கு உயிரும், உடலும் போல.

நேத்திரம்– ஜீவன் இல்லாத நாளை முகூர்த்த நாளாக தேர்வு செய்ய மாட்டார்கள். நேத்திரம் என்பது உடல். ஜீவன் என்பது உயிர். சரி இந்த நேத்திரம்– ஜீவன் என்பது எதைக் குறிக் கிறது?

ஒரு மனிதனுக்கு அடையாளம் என்பது உயிரும், உடலும் தான். உயிர் இல்லாத உடலை ‘பிணம்’ என்றும், உடல் இல்லாத ஜீவனை ‘ஆவி என்றும், ‘ஆன்மா’, ‘ஆத்மா’ என்றும் கூறுவார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் உயிரை ‘லக்னம்’ என்றும், உடலை ‘சந்திரன்’ என்று குறிப்பிடுகிறார்கள். ஜோதிடத்தில் லக்னம், சந்திரன் இவற்றைக் கொண்டே அனைத்து பலன்களும் கணிக்கப்படுகிறது. இந்த உலகில் தோன்றிய எல்லா உயிர்களும் ஏதோ ஒரு லக்னத்தில், ஏதோ ஒரு நட்சத்திரத்தில் பிறந்து இருக்க வேண்டும். லக்னம், சந்திரன் இன்றி எந்த விதமான ஜாதகமும் கணிக்கப்படுவதில்லை.

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் எடுத்துக் கொள் கிறது. ஒரு லக்னத்திற்கு 2 மணி நேரம் வீதம் 12 ராசிகளுக்கு 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. ‘எண் சாண் உடலுக்கு தலையே பிரதானம்’ என்பார்கள். அதுபோல தான் 12 லக்ன பாவங்களுக்கு,  லக்னமே பிரதானமாக உள்ளது. இந்த லக்னத்தைக் கொண்டு ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அனுபவிக்கும் இன்பம், துன்பம், நோய்கள், வாழ்வின் உயர்வு– தாழ்வு என சகலவிதமான பலன்களை பற்றியும் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு மனிதனும் என்ன நோக்கத்திற்காக இந்த பூமியில் பிறந்தான் என்பதைக் கூட இந்த லக்னத்தைக் கொண்டே கணிக்கிறோம்.

லக்னத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நிறையக் கூறலாம். ஆனால் நமக்குத் தேவையானதை மட்டும் இங்கே பார்க்கலாம்.

    ஒருவரது எண்ணங்களில் எழும் அலைகள் நல்லதாக இருந்தால். அதுவே நல்ல ஆரோக்கியமான உடலைத் தரும். கெட்ட எண்ணங்கள் தோன்றி விட்டால், அதுவே பல நோய்களுக்கு வாசல் கதவை திறந்து விட்டு விடும். இதைத் தான் ‘எண்ணம் போல் வாழ்வு’ என் கிறார்கள்.

    ஒரு மனிதன் தோற்றம், பிறந்த இடம், அந்த இடத்தின் சூழல், எந்த மாதிரியான உருவம் எடுத்து இருக்கிறார்கள் என்பதைப் பற்றி லக்னமே கூறுகிறது.

    ஒரு மனிதனுக்கு அறிவும், சமயோசித புத்தியும் கொடுப்பது இந்த லக்னம் தான். சிறிய காயம் ஏற்படும்போதே மருந்து சாப்பிட்டு விட வேண்டும், காய்ச்சல் லேசாக இருக்கும் போதே மருத்துவரை சந்தித்து விட வேண்டும் என்ற புத்தியைத் தருவது லக்னமே.

    ஒருவரது உடலில் எவ்விதமான நோய்களும் இருக்காது. ஆனால் தனக்கு ஏதோ ஒரு நோய் இருப்பது போல நினைக்க வைத்துக் கொண்டே இருப்பதற்கும் இந்த லக்னமே காரணம்.

    எந்த நேரமும் சதா சிந்தனையில் மூழ்கி இருப்பதும், நிறைவேறாத கனவுகள் பற்றி நினைத்து உடலை வருத்திக் கொண்டும், கால நேரம் தவறி உணவு உட்கொண்டு பல நோய்களை வரவழைக்கும் தன்மைக்கும் முக்கிய காரணம் இந்த லக்னம் தான்.

    ஒருவரது லக்னத்தை கொண்டே பிறந்த இடம், பிறந்த சூழல் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்பது போலவே, ஒருவரது மரணத்தின் அந்த கடைசி நிமிடங்கள், மரணம் அடையும் இடம், அதன் சூழல் பற்றியும் கூட இந்த லக்னத்தைக் கொண்டு கணித்துவிட முடியும்.

மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தும் எதனை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது என்றால், ஜோதிட சாஸ்திரத்தில் லக்னம் நின்ற நட்சத்திர அதிபதியும், லக்னம் நின்ற ராசி அதிபதி அதாவது லக்னாதிபதியும் கொண்டே இவை தீர்மானிக்கப்படுகிறது.

இவற்றில் முக்கியமாக காண வேண்டியவை:–

    லக்னம் நின்ற நட்சத்திர அதிபதியும், லக்னாதிபதியும் நட்பு கிரகமாக அமைந்து விட்டால் அந்த ஜாதகரின் எண்ணங்கள் ஈடேறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அடிக்கடி நோய்கள் வராது. உடல் பொலிவு உண்டாகும்.

    லக்னம் நின்ற நட்சத்திர அதிபதியும் லக்னாதிபதியும் பகை, நீச்சம் பெற்ற கிரகமாக அமைந்து விட்டால், அந்த ஜாதகருக்கு நோய்களுக்கு குறை இருக்காது. சதா சர்வ காலமும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டே இருப்பார்.

    லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி சந்திரன், குரு, புதன், சுக்ரன் ஆகிய கிரகங்களின் நட்சத்திரத்தில் நின்று, இந்த கிரகங்களில் ஒருவர் லக்னாதிபதியாக அமைந்து விட்டால் அந்த ஜாதகர் நோய்களின்றி இருப்பார். முதுமை காலத்தில் மட்டுமே நோய்கள் வரக்கூடும்.

    லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி சூரியன் – செவ்வாய் கிரகங்களின் நட்சத்திரத்தில் நின்று, இவற்றில் எதாவது லக்னாதிபதியாக அமைந்தால், அந்த ஜாதகர்கள் கர்வம், ஆணவம், திமிர் கொண்ட போக்கால் நோய்களைத் தாங்களே தேடி கொள்வார்கள். பிடிவாதம், முரட்டு குணம் போன்றவற்றால், ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றவற்றுக்கு ஆளாவார்கள்.

    லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் நட்சத்திரத்தில் நின்று சனியே லக்னாதிபதியாக அமைந்து விட்டால், அந்த ஜாதகருக்கு என்னவென்றே கண்டுபிடிக்க முடியாத நோய்கள் கூட வரலாம். அந்தந்த காலகட்டத்தில் தோன்றி வரக்கூடிய புதிய நோய்கள் இவர்களைத் தாக்கும்.

ஜாதகத்தில் உயிராக போற்றப்படும் லக்னத்தால் வரக்கூடிய நோய்களைப் பற்றி  பார்த்தோம். இனி நேத்திரம் என்னும் உடல்காரகனான சந்திரனைப் பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

–ஆர்.சூரியநாராயணமூர்த்தி.

லக்னாதிபதியாக..

லக்னாதிபதி சுபகிரகங்களான சந்திரன் குரு, புதன், சுக்ரன் என்று இருந்தால், அந்த ஜாதகருக்கு காய்ச்சல், சளி, தசை வீக்கம், கெட்ட கொழுப்பு, நரம்பு தளர்ச்சி, முன்னோர் களின் நோய்கள் வரக்கூடும். என்றாலும் இவர்களுக்கு நாற்பது வயதுக்கு மேல்தான் பல நோய்கள் வரும்.

லக்னாதிபதி சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களாக அமைந்து விட்டால், உடல் உஷ்ணம், கண் பார்வை குறைவு, ரத்த சோகை, ஒற்றை தலைவலி, சிறுநீரகக் கல், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் தென்படும்.

லக்னாதிபதி சனியாக அமைந்து விட்டால், மன சோர்வு, உடல் சோர்வு என ஏதாவது ஒரு நோய் இருந்து கொண்டே இருக்கும். பித்த நீர் உடல் கட்டிகள், கெட்ட கொழுப்புகள் உடலை வாட்டி எடுக்கும்.

லக்னத்தில் நின்ற கிரகங்களால்..

*    லக்னத்தில் சுபகிரகங்களான சந்திரன், குரு, புதன், சுக்ரன் இருந்தால், அந்த ஜாதகருக்கு உடல் கவர்ச்சி, திடமான உடல் அழகு, காந்த ஈர்ப்பு, பொலிவான உடல் வனப்பு இருக்கும். ஆனாலும் சிறுசிறு நோய் தொல்லைகளும் உண்டாகும்.

*    லக்னத்தில் சூரியன், செவ்வாய் இருந்தால், அந்த ஜாதகர் ஒருவிதமான பதற்றம் நிறைந்த மனநிலையில் காணப்படுவார். அவசரப்புத்தி, தற்கொலை எண்ணங்கள் தோன்றும். ரத்த அழுத்தம், உடல் வலிகள், உடல் கட்டிகள், சூட்டு கொப்பளங்கள், தோல் வியாதிகள் வரக்கூடும்.

*    லக்னத்தில் சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருந்தால் கடின உழைப்பால் வரக்கூடிய உடல் சோர்வு, மன சோர்வு தோன்றும். மேலும் மந்த புத்தி, பித்தம், மனக்கவலை, தோல் அரிப்பு, வி‌ஷப்பூச்சி மூலம் நோய்கள் வருவது, வளர்ப்பு நாய், பூனை மூலம் நோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

Next Story