சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் இறங்கும் விழா


சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் இறங்கும் விழா
x
தினத்தந்தி 3 April 2018 10:34 PM GMT (Updated: 3 April 2018 10:40 PM GMT)

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் இறங்கும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து வழிபட்டனர்.

கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருப்பது பண்ணாரி மாரியம்மன் கோவில். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி வனப்பகுதியில் அமைந்து உள்ள இந்த கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாகும். இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 20-ந் தேதி நித்தியபடி பூஜை நடந்தது. 21-ந் தேதி அம்பிகை திருவீதி உலா தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினந்தோறும் கோவிலில் பூஜைகள் நடந்து வந்தன. நிலக்கம்பம் ஏற்றுதல், கம்பத்தை சுற்றி மலைவாழ் மக்கள் பீனாட்சி இசையுடன் நாட்டியம் ஆடுதல் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. வேறு எந்த கோவிலிலும் இல்லாதவகையில் அம்மனே பக்தர்களை சந்திக்க கிராமம் கிராமமாக செல்லும் திருவீதி உலா இங்கு நடைபெறுவது வழக்கம். அதன்படி சத்தியமங்கலத்தை சுற்றி உள்ள 100 கிராமங்களுக்கு பண்ணாரி அம்மன், சருகு மாரியம்மன் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டன. கிராம மக்கள் பக்தி பரவசத்துடன் வரவேற்று வழிபட்டனர்.

பண்ணாரி மாரியம்மன் கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கோவிலின் முன்பக்கம் குண்டம் அமைக்கும் பகுதியில் பக்தர்கள் காணிக்கையாக கொண்டு வந்த ஊஞ்சல் மர விறகுகள் (எரிகரும்பு) குவிக்கப்பட்டன. நேற்று முன்தினம் மாலை குண்டத்துக்காக விறகுகள் அடுக்கப்பட்டன. ஆள் உயரத்துக்கு அடுக்கப்பட்டு இருந்த எரிகரும்புக்கு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து குண்டம் பற்றவைக்கப்பட்டது. நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் அனைத்து விறகுகளும் முழுமையாக எரிந்தன. நள்ளிரவில் குண்டம் தீக்கனல்கள் நிறைந்து காணப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாலை 2 மணி அளவில் பணியாளர்கள் குண்டம் தயார் செய்யும் பணியை தொடங்கினார்கள். 12 அடி நீளம், 6 அடி அகலத்தில் குண்டம் தயார் செய்யப்பட்டது. மூங்கில் கட்டைகளால் தீக்கனல்கள் அடித்து உடைக்கப்பட்டு பக்தர்கள் தீமிதிக்கும் மேடையாக மாற்றப்பட்டது. கொதிக்கும் வெப்பத்திலும் பணியாளர்கள் தீக்குண்டத்தை தயார் செய்தனர். இதற்கிடையே அதிகாலை 3 மணிக்கு அம்மை அழைத்தல் பூஜை தொடங்கியது. கோவிலில் இருந்து பூசாரிகள் மேள தாளங்கள் முழங்க தெப்பக்குளம் பகுதிக்கு புறப்பட்டனர்.

தெப்பக்குளம் சருகு மாரியம்மன் கோவிலில் அம்மன் அழைத்தல் பூஜை நடந்தது. அங்கிருந்து அம்மன் அருள் கிடைத்ததும் படைக்கல ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வர, தலைமை பூசாரி ராஜேந்திரன் படைக்கலத்தை சுமந்து வந்தார். மற்ற பூசாரிகள் பூஜை பொருட்களுடனும் ஊர்வலமாக வந்தனர். 3.50 மணிக்கு குண்டத்தின் முன்பு படைக்கல பொருட்களுடன் பூசாரிகள் வந்தனர். பின்னர் குண்டத்தை சுற்றி கற்பூரம் ஏற்றப்பட்டு பூஜை செய்யப்பட்டது. பூசாரி ஒருவர் தீபாராதனை காட்டினார். படைக்கலம் மற்றும் சப்பரத்தில் இருந்த உற்சவ அம்மனுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. காலை 4 மணிக்கு தீபாராதனை முடிந்தது. தீபாராதனை செய்த பூசாரி குண்டத்தில் இறங்கி முன்னால் நடந்து செல்ல, அவரைத்தொடர்ந்து தலைமை பூசாரி ராஜேந்திரன் குண்டத்தில் இறங்கினார். தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர், பூசாரிகள் மற்றும் பக்தர்கள் குண்டம் இறங்க தொடங்கினார்கள். ஏற்கனவே 5 நாட்களுக்கும் மேலாக குண்டம் இறங்க காத்திருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இறங்கி தீமிதித்து பண்ணாரி மாரியம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். குண்டத்தில் இறங்கி ஓடிய பக்தர்கள் “ஓம் சக்தி“ என்று பக்தி கோஷம் எழுப்பியபடி சென்றனர்.

விழாவில் ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் அவருடைய குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டார். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவரது மனைவி ஸ்ரீவித்யா சிவக்குமார் குண்டம் இறங்கி வேண்டுதல் நிறைவேற்றினார். பவானிசாகர் எம்.எல்.ஏ. ஈஸ்வரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் (கோவை) க.ராஜமாணிக்கம், உதவி ஆணையாளர்கள் ப.முருகையா, ராமு, பழனிக்குமார், கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ், சத்தியமங்கலம் தாசில்தார் கிருஷ்ணன், சக்தி மசாலா நிறுவனங்களின் இயக்குனர் சாந்தி துரைசாமி, தொழில் அதிபர்கள் பாலு (பி.வி.லாட்ஜ்), காந்தி, கோபு உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

குழந்தை வரம் வேண்டி பண்ணாரி அம்மனை வழிபட்டவர்கள் அந்த குழந்தைகளை கைகளில் சுமந்து கொண்டு குண்டத்தில் இறங்கி பக்தி பரவசத்துடன் நடந்து வந்தனர். சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளும் குண்டத்தில் இறங்கினார்கள். போலீசார், ஊர்க்காவல்படையினர், தீயணைப்பு படையினர், சிறப்பு இலக்கு படையினரும் பக்தர்களுடன் வரிசையில் நின்று குண்டத்தில் இறங்கி வழிபட்டனர்.

பக்தர்கள் குண்டம் இறங்குவதை ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுபோல் போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உள்பட போலீஸ் அதிகாரிகள் குண்டம் இறங்கும் பகுதியில் இருந்தனர்.

குண்டத்தில் இறங்குபவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து காவல் துறை சார்பில் தொடர்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. பலர் செல்போன்களை சட்டை மேல் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு குண்டத்தில் ஓடியபோது அவை குண்டத்தில் தவறி விழுந்தன.

தீயணைப்பு வீரர்களும் குண்டத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒருசிலர் குண்டத்தில் தடுமாறியபோது தீயணைப்பு படை வீரர்கள் அவர்களை காப்பாற்றி மீட்டனர். கோவில் வளாகத்தில் முதலுதவி மையம் அமைக்கப்பட்டு இருந்தது.

குண்டம் விழாவையொட்டி கடந்த 5 நாட்களுக்கு முன்பே பக்தர்கள் கோவிலில் வந்து குவியத்தொடங்கினார்கள். தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளாவில் இருந்தும் பல ஆயிரக்கணக்கானவர்கள் வந்து குவிந்து இருந்தனர். நேற்று முன்னதினம் நள்ளிரவில் இருந்தே பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருந்தது. சத்தியமங்கலம் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாகவே கோவிலுக்கு வந்தனர். வழக்கத்தைவிட நேற்று கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையாக நிற்க வேண்டிய தடுப்பு வேலி பகுதியை தாண்டியும் ராஜன் நகர் ரோட்டில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது. ஒரு கட்டத்தில் மைசூர் ரோட்டிலும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் நிரம்பியது. இதனால் அந்த பகுதியை வாகனங்கள் கடந்து செல்ல சுமார் ஒரு மணி நேரம் ஆனது.

குண்டம் இறங்கும் பக்தர்களுக்காக பலரும் உணவு பொருட்களை கொண்டு வந்து அந்தந்த பகுதிகளிலேயே வழங்கினார்கள். பவானிசாகர் ரோட்டில் நண்பர்கள் அன்னதான குழு சார்பில் நேற்று முன்தினம் மதியம் முதல் நேற்று மாலை வரை அன்னதானம் போடப்பட்டது.

லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலை சுற்றிலும் குவிந்து இருந்தனர். குண்டம் இறங்குபவர்கள் தவிர அவர்களுடன் வந்த உறவினர்களும் ஏராளமானவர்கள் இருந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் நெரிசலாகவே காணப்பட்டது. காலை 6 மணிக்கு வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வந்து குண்டம் இறங்கும் பகுதியில் நீண்ட வரிசையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதற்கு அப்பாலும் பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர்.

எனவே 2 வரிசையாக பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகே கூட்டம் குறைய தொடங்கியது. நண்பகல் 1 மணியை கடந்தும் பக்தர்கள் குண்டம் இறங்கிக் கொண்டே இருந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த குண்டம் விழாவில் தீமிதித்து பண்ணாரி மாரியம்மனை வழிபட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். பக்தர்களை தொடர்ந்து விவசாயிகளின் கால்நடைகள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. நூற்றுக்கணக்கான காளை மாடுகள் குண்டத்தில் இறக்கப்பட்டன.

கோவிலை சுற்றிலும் எங்கும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எனவே அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடாமல் இருக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் தலைமையில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலாஜி சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனிச்சாமி, செல்வம், சிவக்குமார் மற்றும் ஈரோடு, சேலம், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இவர்களுடன் சுமார் 300 ஊர்க்காவல் படையினர், போலீஸ் நண்பர்களும் பாதுகாப்பு பணியில் உதவி செய்தனர். பக்தர்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் போலீசார் ஒலிபெருக்கியில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர். திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க குற்றப்பிரிவு போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து வந்தனர்.

இன்று (புதன்கிழமை) நண்பகல் 12 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது. இரவு 10 மணிக்கு புஷ்ப ரதம் மற்றும் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா பூஜை மற்றும் அன்னதானம் நடக்கிறது. 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடக்கிறது. 9-ந் தேதி மறுபூஜையுடன் பண்ணாரி அம்மன் பங்குனி குண்டம் திருவிழா நிறைவடைகிறது.

தினத்தந்தி சிறப்பு மலர்

ஈரோடு தினத்தந்தி சார்பில் ஆண்டுதோறும் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி, அம்மனின் வரலாற்றையும், அருள் வளங்களையும் எடுத்துக்கூறும் ஆன்மிக மலர் இலவசமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றும் 4 பக்க இலவச சிறப்பு மலர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதுபோல் பக்தர்களின் தாகம் தீர்க்கும் நீர் மோரும் ‘தினத்தந்தி’ சார்பில் பண்ணாரி மாரியம்மன் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

உணவு-நீர் மோர்

பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு மற்றும் நீர்மோர் வழங்க ஏராளமான தனியார் நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஏராளமானவர்கள் பக்தர்களுக்கு உணவுகள் வழங்கினார்கள். வெயிலில் கொடுமையை போக்க நீர் மோர், தண்ணீரும் வழங்கப்பட்டன.

சுகாதாரம்

பண்ணாரி மாரியம்மன் கோவில் திருவிழா என்றால் லட்சக்கணக்கானவர்கள் கூடுவது வழக்கம். இப்படி வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளில் ஒன்று கழிப்பிட வசதி. ஆனால் சரியான கழிப்பிட வசதி இல்லாததால் பக்தர்கள் காலைக்கடன்கள் கழிக்க மிகவும் சிரமப்பட்டனர். திறந்த வெளியிலேயே பலரும் சென்றது முகம் சுழிக்க வைத்தது.

இதுபோல் பக்தர்களின் பசியை போக்க தனிநபர்கள், தனியார் நிறுவனத்தினர் உணவுகள் கொடுக்கும்போது அனைவரும் அதனை பெற்றுக்கொள்கிறார்கள். உணவு வழங்குபவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு தீர்ந்தால் போதும் என்று தட்டுகளில் அள்ளி வைத்து கொடுப்பதாலும், தேவைக்கும் அதிகமாக பலரும் வாங்கி வைத்திருப்பதாலும் சாப்பிட முடியாமல் உணவை அப்படியே தரையில் கொட்டி வீணாக்குவதை பார்க்க முடிந்தது. தேவையான அளவு குப்பை தொட்டிகள் இல்லாததால் பாக்கு மட்டை தட்டுகள் ஆங்காங்கே மலைபோல் குவிக்கப்பட்டு கிடந்தன. அதன் அருகிலேயே பக்தர்கள் தரையில் படுத்து இருந்ததும் கவலைக்கு உரியதாக இருந்தது. இதுபற்றி பக்தர் ஒருவர் கூறும்போது, தற்காலிக கழிப்பறைகள், குப்பை தொட்டிகள் அதிகம் வைக்கவும், குப்பைகள் அதிகம் சேராமல் தன்னார்வலர்கள் மூலம் சுத்தம் செய்யவும் கோவில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து சுகாதாரத்தை பேண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா

குண்டம் திருவிழாவை முன்னிட்டு நேற்று பண்ணாரி அம்மன் கோவிலில் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு பாடுவதற்காக இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா வந்திருந்தார். அவர் பல்வேறு பாடல்களை பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். பின்னர் காலை 4.45 மணி அளவில் அவர் கோவிலுக்கு வந்தார். அம்மனை தரிசித்த அவர் கோவில் வளாகத்தில் உள்ள பண்ணாரி அம்மன் புனித பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பொருட்கள் வாங்கினார்.

Next Story