ரம்ஜானை வரவேற்கும் ‘பிரமாண்ட லாந்தர் விளக்கு’..!


ரம்ஜானை வரவேற்கும் ‘பிரமாண்ட லாந்தர் விளக்கு’..!
x
தினத்தந்தி 28 April 2018 7:37 AM GMT (Updated: 28 April 2018 7:37 AM GMT)

உலகில் பிரமாண்டங்கள் என்றுமே மனிதர்களை ஆச்சரியப்பட வைக்கும். அதில் ஒன்றாக மிளிர்கிறது, சார்ஜாவின் மிகப்பெரிய லாந்தர் விளக்கு.

சார்ஜா பகுதியில் சூக் அல் ஜூபைல் வணிக வளாக பகுதியில் அமைந்திருக்கும் இந்த பிரமாண்ட லாந்தர் விளக்கு, கின்னஸ் சாதனை படைத்து 2018-ம் ஆண்டிற்கான கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற உள்ளது.

42 அடி உயரம், 16 அடி அகலம் என பிரமாண்ட மணி கூண்டை போன்று ஜொலிக்கும் லாந்தர் விளக்கை, ரம்ஜான் பண்டிகையின் அடையாளமாக கொண்டாடுகிறார்கள். லாந்தர் விளக்கிற்கும் ரம்ஜான் பண்டிகைக்கும் என்ன சம்பந்தம்?, அதை ஏன் பிரமாண்டமாக கட்டமைத்திருக்கிறார்கள்? போன்ற கேள்விகளுக்கு சார்ஜா பகுதி மக்களிடம் விடை தேடினோம். அவர்கள் பலவிதமான பதில்களை, வரலாற்று பின்னணியுடன் கொடுத்தனர்.

இது போன்ற சிறிய அளவிலான லாந்தர் விளக்குகள் எகிப்து நாட்டில்தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக ரம்ஜான் மாதத்தில், இந்த லாந்தர் விளக்குகள் அதிகமாக ஜொலிக்குமாம். ரம்ஜான் மாதத்தின் முதல் நாள் அன்று பொதுமக்களும், குழந்தைகளும் கையில் வண்ணமயமான லாந்தர் விளக்குகளை ஏந்திக்கொண்டு மக்களுக்கு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டதாக, அங்குள்ள வரலாற்று சின்னங்கள் சான்று படைக்கின்றன.

அதே போல இதே காலகட்டத்தில் எகிப்து நாட்டை ஆண்ட பாத்திமித் வம்ச மன்னர்கள் இரவு நேரங்களில் வீடுகளின் முன்புறம் இந்த விளக்குகளை தொங்கவிட வேண்டுமென பொதுமக்களுக்கு கட்டளையிட்டு இருந்தனர். அதன்பிறகுதான் படிப்படியாக இந்த லாந்தர் விளக்குகள் அரபு நாடுகளில் அறிமுகமாகியிருக்கிறது. இதை இரவு நேர வெளிச்சத்திற்காகவும், காவல் பணிகளுக்காகவும் அரபு மக்கள் பயன்படுத்தினார்கள். அதுவே பிற்காலத்தில் அழகிய வேலைபாடுகள் சேர்க்கப்பட்டு, தற்போது ரம்ஜான் மாதத்தின் அடையாளமாகிவிட்டது.

இத்தகைய சிறப்புமிக்க லாந்தர் விளக்குகளை பெருமைப்படுத்துவதற்காகவே சார்ஜாவில் பிரமாண்ட லாந்தர் விளக்கை கட்டியிருக்கிறார்கள். பொதுவாக லாந்தர் விளக்குகளை சாதாரணமாக கையில் ஏந்தி செல்லலாம். ஆனால் சார்ஜாவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான லாந்தர் விளக்கை பார்த்து ரசிக்க மட்டுமே முடியும்.

இது லாந்தர் விளக்கை போன்று காட்சியளிப்பதுடன், லாந்தர் விளக்கை போன்று ஒளிவீசக் கூடியது. ஏனெனில் கின்னஸ் சாதனை நிறுவனத்தின் விதிகளின் படி ஒரு பிரமாண்ட பொருளுக்கு சாதனை சான்றிதழ் பெற வேண்டும் என்றால் அதன் செயல்பாடுகளும் உண்மையானதாக இருக்க வேண்டும். அதனால் பிரமாண்ட லாந்தர் விளக்கை, தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு சின்ன லாந்தர் விளக்கு எப்படி இயங்குமோ, அதேபோல இரவில் வண்ணமயமான ஒளி வெள்ளத்தை பாய்ச்சுகிறது. அதனால் வணிக வளாகமும், அதை ஒட்டிய கடல் பகுதியும், பிரகாசமாக ஜொலிக்கிறது.

சிறிய பொருட்களை பெரியதாக பார்க்கும்போது ஏற்படும் பரவசத்தை இந்த லாந்தர் விளக்கு தருவதில் ஆச்சரியமில்லை.

-மர்யம்ஷா. 

Next Story