நோய்களைத் தீர்க்கும் சக்கர செப்புத் தகடு


நோய்களைத் தீர்க்கும் சக்கர செப்புத் தகடு
x
தினத்தந்தி 1 May 2018 6:11 AM GMT (Updated: 1 May 2018 6:11 AM GMT)

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், ஆன்மிக மக்களுக்காக தோன்றிய உன்னத பூமி.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், ஆன்மிக மக்களுக்காக தோன்றிய உன்னத பூமி. இந்த சங்கரன்கோவில் வட்டத்தில் தான் தென்மலை என்ற கிராமம் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் இருக்கிறது கரிவலம் வந்த நல்லூர். இங்கிருந்து மேற்கு பார்த்த சாலையில் 8 கிலோமீட்டர் தூரம் சென்றால் தென்மலையை அடையலாம்.

இந்த தென்மலையில் தான், பனையூர் ஆண்டவர் என்று அழைக்கப்படும் சங்கரநாராயண சுவாமிகள் தோன்றினார்.

தென்மலையில் வெண்ணைப் பெருமாள் பிள்ளை- பாடகவல்லி தம்பதியர் வாழ்ந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்களாகியும் குழந்தைப்பேறு கிடைக்கவில்லை. ஒரு முறை இந்தத் தம்பதியர், குழந்தை வரம் வேண்டி, சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணர் ஆலயத்திற்கு பாதயாத்திரையாகப் புறப்பட்டனர். அதன்பிறகு அவர்களின் பாதயாத்திரைப் பயணம் பவுர்ணமிதோறும் வாடிக்கையானது.

ஒவ்வொரு பவுர்ணமியிலும் இந்த தம்பதியர் சங்கரன் கோவிலுக்கு வந்துவிடுவார்கள். அங்கே இறைவனை வழிபட்டு, உண்ணா நோன்பும், மவுன விரதமும் இருப்பார்கள்.

ஒரு நாள் சங்கரன்கோவில் ஆலயத்தில் அமர்ந்திருந்த அந்த தம்பதியரின் அருகில் ஒரு சாது வந்தார். ‘கவலை வேண்டாம்.. தரணி போற்றும் பிள்ளையொன்று, இறைவன் அருளால் உங்களுக்குக் கிடைக்கும்' என்று கூறி திருநீறு கொடுத்தார்.

அந்த சாது சொன்னது போலவே சில நாட்களில் பாடக வல்லியம்மாள் கர்ப்பம் தரிசித்தார். அந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தைப் பிறந்தது. தங்களுக்குக் குழந்தை வரம் அளித்த சங்கரநாராயணரின் பெயரையே அந்தக் குழந் தைக்குச் சூட்டினர்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே சங்கரநாராயணன், வயதுக்கு மீறிய அறிவாற்றல் பெற்றுத் திகழ்ந்தார். பன்னிரண்டு வயது முடிவதற்குள் ‘பிறவாச் சுவடி'யை படித்து முடித்து விட்டார். அடுத்து மூதுரையும் பயிலத்தொடங்கினார்.

ஒருநாள் பள்ளியில் சங்கரநாராயணன் தன்னுடைய குருவிடம் பாடல் ஒன்று குறித்து சந்தேகம் கேட்டிக்கொண்டிருந்தார். அப்போது வெளியே இருந்து யாரோ தன் பெயரைச் சொல்லி அழைப்பதை உணர்ந்த சங்கரநாராயணன், வெளியே வந்து பார்த்தபோது அங்கே ஒருவர் சடாமுடியுடன் காவி உடை தரித்து நின்றுகொண்டிருந்தார்.

அவரைப் பார்த்த உடனேயே, சங்கரநாராயணனுக்கு இனம் புரியாத ஒரு உணர்வு ஏற்பட்டது. ‘பெருமானே!’ என்று அழைத்தபடி அவரது காலில் விழுந்தார்.

வந்தவர் ராமகிரிநாதர்.. இவர் சாட்சாத் அகத்தியப்பெருமானே...

தன் காலில் விழுந்தச் சிறுவனைத் தூக்கி விட்ட முனிவர், ‘சங்கரநாராயணா! உன்னுடைய நல்வினை பழுக்கும் நாள் வந்துவிட்டது. எனவே கல்லாத நெறியும், துன்பம் இல்லாத நிலையும் உணர்த்த வந்த என்னுடன் சற்று வருவாய்' என்று அழைத்தார்.

மறுபேச்சே பேசவில்லை. அவருடன் சென்றார் சங்கரநாராயணன்.

இருவரும் தென்மலைக்கு மேற்கிலுள்ள குளக்கரை விநாயகர் கோவிலை நோக்கி விரைந்தனர். அந்த ஆலயத்தில் அமரவைத்து, சங்கரநாராயணனுக்கு அனைத்து ஞானங்களையும் புகட்டினார் ராமகிரிநாதர். அந்த இளம் நெஞ்சில் ஞானவிளக்கேற்றி வைத்தார். சங்கர நாராயணனும், அவரை தன் குருவாக ஏற்று அனைத்தும் கற்றுணந்தார்.

குருவின் அருளாலும், திருவின் அருளாலும் ஞானப் பெருவெளியில் நடைபயிலத் தொடங்கினார். பசி மறந்து, ஏட்டைத் துறந்து, பற்றற்றுப் பாசமற்று விநாயகர் கோவிலையே இருப்பிடமாக்கிக் கொண்டு தனித்திருந்தார். வருடங்கள் பல ஓடிவிட்டன.

தன் மகனின் நிலையைக் கண்டு பெற்றோர் வருந்தினர். ‘பிள்ளைக்குத் திருமணம் செய்துவைத்தால் அவனுடைய போக்கு மாறலாம்’ என நினைத்தனர். எனவே வலுக்கட்டாயமாக, சங்கர நாராயணனுக்கு முத்தம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்துவைத்தனர்.

திருமணமானது முதல் மனைவியின் முகத்தைக்கூட சங்கரநாராயணன் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. மனைவியின் கரம், தெரியாமல் தன் மேல் பட்டு விட்டாலும் கூட, தன் அருள் வாழ்க்கைக்கு களங்கம் வந்துவிடுமோ என்று உடல் நடுங்கிப் போவார், சங்கரநாராயணன்.

சில வருடங்கள் இப்படியேப் போனது. தன்னுடைய குருவான ராமகிரிநாதர், விநாயகர் குளக்கரையில் வீற்றிருப்பதைக் கண்டு, அங்கு சென்று அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார், சங்கரநாராயணன்.

அவரைப் பார்த்ததுமே, ராமகிரிநாதருக்கு அனைத்தும் விளங்கிவிட்டது. ‘சங்கரநாராயணா! இல்லறம் என்பதும் நல்லறமே! அதனை ஏற்றபின் தட்டிக்கழிப்பது குற்றம். இல்லறநெறியில் இருந்துகொண்டு, மனைவியின் மேல் அன்புகாட்டாமல் இருப்பது பாவம். பெற்றோருக்கும், வாழ்க்கைத் துணைக்கும், வழிபடும் தெய்வத்துக்கும், விருந்தினருக்கும், உறவினருக்கும் பெருந்துணையாக இருப்பதே நல்ல இல்லறம்’ என்றார் ராமகிரிநாதர்.

அதைக் கேட்ட சங்கரநாராயணன், ‘பெருமானே! தங்கள் பேச்சால் என் மூச்சே நின்று விடும் போல் இருக்கிறது. குருவே! குடும்பம் நடத்தப் பொருள் வேண்டாமா?, பொருள் ஈட்ட ஏதாவது தொழில் வேண்டாமா?, எனக்கு என்னத் தொழில் தெரியும்? எதை வைத்து நான் குடும்பம் நடத்துவது?' என்று தன் இயலாமையால் கண்கலங்கினார்.

ராமகிரிநாதர் புன்னகையுடனே கூறலானார். ‘சங்கரநாராயணா! சஞ்சலப்படாதே. மானுடர்களுக்கு வினைவழி ஏற்படும் துயரங்களை, அருள் வழியில் நீக்கும் ஓர் அற்புதச் செப்புத்தகடை உனக்குத் தருகிறேன். அந்தத் தகடு மூலமாக பிணிகள், பீடைகள், துயரங்கள் அனைத்தையும் போக்கிவிட முடியும். நலமும், வளமும், இன்பமும் மக்களுக்கு சேர்க்க வல்ல திருவருள் சக்திகொண்டது, அந்த செப்புத் தகடு. அதனை உபயோகிக்கும் மந்திரத்தை உனக்குச் சொல்லித் தருகிறேன். உன்னைத் தேடி வரும் அன்பர்களை இந்தச் சக்கரம் மூலம் நல்வழிப்படுத்து. அவர்கள் மனமுவந்து தருகின்ற பொருளைக்கொண்டு இல்லற வாழ்வை நல்லறமாக நடத்து’ என்று கூறியவர், மந்திர தகடை உபயோகிக்கும் மந்திரத்தையும் உபதேசித்தார்.

பின்னர், ‘உனக்கு நான்கு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பெறும் பாக்கியமுண்டு. அவர்களில் நான்காவது ஆண் குழந்தை, மானுடரின் மனக்கவலை நீக்கவல்ல மகானாக விளங்குவான். உன் அருள் வாழ்க்கைக்கு, அவனே தக்க சீடனாகவும் திகழ்வான்’ என்று அருளினார்.

தனக்கு வழிகாட்டிய குருநாதரை, வீட்டிற்கு அழைத்து விருந்து படைத்தார் சங்கரநாராயணன். அன்று முதல்தான் தன் மனைவியிடமும் அவர் அக மகிழ்ந்து பேசத் தொடங்கினார்.

விருந்துண்டு மகிழ்ந்த ராமகிரிநாதர், சிதம்பர சக்கரம் அமைக்கும் நெறிமுறையை, சங்கரநாராயணனுக்கு உப தேசித்து விட்டு, பொதிகைமலைக்கு புறப்பட்டார்.

சிதம்பர சக்கர செப்புத் தகட்டின் மகிமை தென்மலைப் பகுதியில் பரவியது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நலிந்தோர், நோயால் மெலிந்தோர், கிரக தோஷங்களால் நல் வாழ்வை இழந்தோர் பலருக்கும் அந்த செப்புத் தகட்டால் நன்மைகளைச் செய்தார், சங்கர நாராயணன். எனவே தென்மலையை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாய் வரத் தொடங்கினர்.

இதனால் சங்கரநாராயணன் சுவாமிகள், வழிபாட்டிற்குரிய அருளாளராக மாறினார். அவரின் இல்லறத்தின் பயனாக, குருநாதர் கூறிய படியே குழந்தைகள் பிறந்து வளர்ந்தனர். நான்காவதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கு தட்சிணாமூர்த்தி என்று பெயரிட்டார். குரு கூறியபடியே அந்த மகனை, சீடனாக தம் அருகிலேயே வைத்துக்கொண்டார். மகனின் ஞானச் செறிவைக் கண்டு அக மகிழ்ந்தார்.

ஒரு நாள் குருநாதரைத் தரிசிக்க விருப்பம் கொண்ட சங்கரநாராயணன் சுவாமிகள், குளக்கரை விநாயகர் கோவிலுக்கு வந்தார். குருநாதர் வரவில்லை. ஆனால் ஒரு அசரீரி ஒலித்தது. ‘சங்கரநாராயணா! உன் புதல்வன் தட்சிணாமூர்த்தியுடன் தென்மலையை விட்டுப் புறப்பட்டுச் செல். பக்கத்திலுள்ள பனையூர் கிராமத்திற்கு சென்று குடில் அமைத்து மக்களின் குறை தீர்த்துச் செயல்படு. உங்கள் இருவரின் அருட்சக்தி மேலும் மேலும் பெருகி வளரும்' என்றது குருநாதரின் குரல்.

அதுபோலவே தந்தையும், மகனும் பனையூர் வந்தமர்ந்தனர். காலங்கள் கடந்தது. குருவின் எண்ணம் போலவே எல்லாம் ஈடேறியது.

தந்தையும் மகனும் ‘பனையூர் ஆண்டவர்கள்' என்று மக்களால் தொழுது போற்றப் பெற்றனர். சுவாமிகள் இருவரும் வழங்கும் சிதம்பரச் சக்கரத் தகடுகள், துயரக் கடல் கடக்கும் தோணிகளாயின. பனையூர் மருத்துவத் திருத்தலமாகவும், அற்புதத் தத்துவ அருட் தலமாகவும் ஒளிவீசியது.

வருடங்கள் பல ஓடியது. சங்கரநாராயணன் சுவாமிகள் சமாதி பெறும் நாளும் வந்தது. மகனிடமும், பக்தர்களிடமும் ‘நான் சமாதி நிலை அடையப்போகிறேன். என் சமாதியை இரவுக்குள் மூடிவிடுங்கள்’ என கூறிவிட்டு, 1835-ம் ஆண்டு கார்த்திகை மாதம் 24-ம் நாள் இரவு ஜீவசமாதி அடைந்தார்.

இதுகுறித்து சுற்றுப்பகுதியில் செய்தி பரவியதும், மக்கள் ஓடி வந்து சுவாமிகளைத் தரிசித்து நின்றனர். நாழிகை செல்லச் செல்ல பக்தர் கூட்டம் பெருகியது.

சங்கரநாராயணன் சுவாமிகளின் பொன்னுடலுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அது முடிந்ததும் சுவாமிகளின் பொன் உடலை விடியும் முன்பே பூமிக்குள் இறக்கி அருட்சமாதி வைக்கப்பட்டது.

ஆனால் அந்த அருட்சமாதிக்கு, அந்தப் பகுதி ஜமீன் சார்பில் ஒரு பெரும் பிரச்சினை வந்து நின்றது.

-சித்தர்களைத் தேடுவோம்.

சீடனுக்கு அருள்பாலிக்கும் குருநாதர்

ன்னுடைய குருவை காண வேண்டும் என்ற ஆவலில் சங்கரநாராயண சுவாமிகள் ஒவ்வொரு சித்திரை மாதம் 20-ந் தேதியும் குற்றாலத்துக்கு சென்றுவிடுவார். அங்கு மனாசீகமாக குருவை தரிசித்து விட்டுத் திரும்புவார். அவரது இந்த வழிபாட்டிற்கு ஒரு நாள் குருநாதரிடம் இருந்து பதில் கிடைத்தது.

‘என்னைத் தேடி, நீ எங்கும் அலைய வேண்டாம். சித்திரை 20-ந் தேதி உன்னைத் தேடி பனையூருக்கே வருவோம்’ என்று அசரீரியாக சொன்னார், ராமகிரி நாதர்.

சித்திரை 20-ம் நாள் குருநாதர் அருளியபடியே, நிட்சேப நதிக்குச் சென்று குருநாதர் அருளை எதிர்பார்த்து காத்திருந்தார் சங்கரநாராயண சுவாமிகள். வாக்களித்தபடியே நிட்சேப நதிக் கரையில் இருந்து குருநாதர் எழுந்தருளி பனையூருக்கு வந்தார். மங்கல வாத்தியங்கள் முழங்க, தந்தையும் மகனும் பாத பூஜை செய்து பனையூர் குடிலுக்கு ராமகிரி நாதரை அழைத்து வந்தனர். அந்த சிறப்புமிகுந்த நாளை ‘அன்னதான பெரு விழா’வாகக் கொண்டாடினர்.

தற்போதும் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. சித்திரை மாதம் 20-ந் தேதி சப்பரத்தில் சங்கரநாராயண சுவாமியின் படமும் வெள்ளிக் கும்பமும் வைத்து, நிட்சேப நதிக்கு பக்தர்கள் பலரும் செல்வார்கள். அங்கு அவரது குருநாதரை, கும்ப தீர்த்தமாக அழைத்து வருகிறார்கள். மதியம் பனையூரில் சிறப்பு வழிபாடும் அன்னதானமும் நடைபெறும். அன்று பக்தர்களின் நோய் போக்க யந்திரம் கட்டுதல் நிகழ்ச்சி நடை பெறுகிறது. ஆண்களும் பெண்களும் வரிசையாக நின்று, சிதம்பரச் சக்கரம் பெறுவர்.

பின்னர் இரவு புஷ்ப விமானத்தில் சுவாமிகள் எழுந்தருளுவார். மறுநாள் காலையில் குருநாதரை நிட்சேப நதிக்கு வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி ஐதீகமாக நடைபெறுகிறது.

Next Story