ரமலான் ஏற்படுத்திய தாக்கத்தை தக்க வைப்போம்


ரமலான் ஏற்படுத்திய தாக்கத்தை தக்க வைப்போம்
x
தினத்தந்தி 14 Jun 2018 9:30 PM GMT (Updated: 14 Jun 2018 6:57 AM GMT)

முஸ்லிம்களை கவர்ந்திழுத்து, நற்பண்புகளை போதித்து, நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்த ஒரு பாடசாலையாக ரமலான் திகழ்கிறது.

ந்த வருடத்தின் ரமலான் மாதம் அனைத்து விதங்களிலும் சிறப்பாக களைகட்டி இருந்தது. இந்த மாதத்தில் நோன்பு நோற்று, ஐங்காலத் தொழுகைகளை பேணுதலாகத் தொழக்கூடியவர்களின் முகங்களும் களைகட்டியது.

புனித ரமலானில் முஸ்லிம்களிடம் வெளிப்பட்ட ஈகைத்தன்மையால் ஏழை, எளியோர், வழிப்போக்கர், நலிவுற்றோர், யாசிப்போர் ஆகியோரின் முகங்களிலும் களைகட்டிக் கொண்டிருக்கிறது.

உறவினர்களை நலம் விசாரித்ததில் உறவினர்களின் முகங்கள் களைகட்டிக் கொண்டிருக்கிறது. நட்பு வட்டாரத்தை நேரடியாகவோ, அலைபேசியிலோ தொடர்பு கொண்டு நட்பு பாராட்டும்போதும் நண்பர்களின் முகங்களும் களைகட்டிக் கொண்டிருக்கிறது.

பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதினால் அவர்களின் முகங்களும் களைகட்டியது. சிறியவர்களுக்கு இரக்கம் காட்டு வதினால் அவர்களின் முகங்களும் களைகட்டியது. பெற்றோருக்கு பணிவிடை செய்வதினால் அவர்களின் முகங்களும் களைகட்டியது.

சாதி, மத பேதமின்றி சமூக நல்லுறவை புனித ரமலானில் பேணுவதால் நாடே களை கட்டியது. வயிற்றைப் பேணி, கண்களைப் பேணி, காதுகளைப் பேணி, மூக்கைப் பேணி, நாவைப் பேணி, கை, கால்களைப் பேணி, மறைவிடத்தைப் பேணி ஐம்புலன்களை அடக்கி ஆளுவது ரமலானில் நடந்தது.

மனிதகுலம் வளர, மானுட வசந்தம் தளைக்க, மனித ஒழுக்கம் மேம்பட, நற்குணம் பெற, ஈகை அளித்திட, ஆன்மிகம் உயர, சமநீதி, சமதர்மம், சமஉரிமை, சமூக நல்லிணக்கம், வளமான வாழ்வு, வளமான தேசம், ஆரோக்கியமான சமுதாயம், உலக அமைதி பெற்றிட நோன்பு உறுதுணையாக உடன் இருந்தது.

அந்த வகையில் முஸ்லிம்களை கவர்ந்திழுத்து, நற்பண்புகளை போதித்து, நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்த ஒரு பாடசாலையாக ரமலான் திகழ்கிறது.

இந்த ரமலான் கற்றுத்தந்த மற்றொரு பாடம் ஐந்து நேர ஜமாஅத் தொழுகைகளில் தவறாது கலந்து கொண்டோம். இரவு நேரத் தொழுகையிலும், நடுநிசித் தொழுகையிலும் பாவமன்னிப்புக் கோருவதிலும், பிரார்த்தனை புரிவதிலும் இன் முகத்துடன் கலந்து கொண்டோம்.

ஐங்காலத் தொழுகைகளில் முஸ்லிம்கள் இறையில்லங்களை நோக்கி சாரை சாரையாக, அணி அணியாக ரமலானில் படையெடுத்துவந்த காட்சி ஒரு அபூர்வ காட்சியாகும். இறையில்லங்களை இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டுமோ என்று நினைக்கும் அளவுக்கு பள்ளிவாசல்களில் மக்கள் நெருக்கம் ஏற்பட்டு, நிரம்பி வழிந்தது.

இவை யாவும் ரமலான் எனும் பள்ளிக்கூடம் கற்றுத்தந்த ஒரு அற்புதமான பாடம். புனித ரமலானின் நோன்பு தந்த இறையச்சத்தின், மனப்பக்குவத்தின் தாக்கம். ரமலான் ஏற்படுத்திய இந்த தாக்கம் பிறை பார்த்தது முதல் பெருநாள் வரை மட்டுமே இருந்து ரமலானுடன் மட்டும் மறைந்து போவது வேதனையிலும் வேதனை.

ரமலானில் கண்காணித்துக் கொண்டிருந்த அதே இறைவன் ஆயுள்வரைக்கும் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான். முஸ்லிம்களுக்கு ரமலான் ஏற்படுத்திய தாக்கம் ரமலானுடன் மட்டும் முடிந்துவிடக்கூடாது.

ரமலான் ஏற்படுத்திய தாக்கத்தை ஆயுள்வரை காப்போம். ரமலானில் கடைப்பிடித்த நல்லறங்களை ஆயுள்வரை நீட்டிப்போம். ரமலானில் கைவிட்ட பாவங்களை ஆயுள்வரை விட்டொழிப்போம். குறிப்பாக கடமையான தொழுகை விஷயத்தில் கவனம் செலுத்தி, இடைவிடாது தொழுது வருவோம். இது குறித்து இறைவன் கூறுவதைப்பார்ப்போம்:

‘உண்மையாகவே குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் இறைநம்பிக்கையாளர்கள் மீது தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது.’ (திருக்குர்ஆன் 4:103)

‘யார் தொழுகையை மறந்து விடுவாரோ, அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’ (நூல் : முஸ்லிம்)

‘நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்’ (திருக்குர்ஆன் 23:9)

‘தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக் கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும்’. (திருக்குர்ஆன் 29:45)

‘பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவீராக’ (திருக்குர்ஆன் 11:114)

எந்த ஒரு வணக்கத்தையும் வாரம் வாரம் இல்லாமல், ஆண்டுக்கு ஒருமுறை இல்லாமல் நிரந்தரமாகச் செய்வதுதான் இறைவனிடம் மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்படும்.

‘உறுதியானது (மரணம்) வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக’ (திருக்குர்ஆன் 15:99).

“ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்குப் பிறகு வேறு எவரிடமும் கேட்க முடியாத இஸ்லாமியக் கடமை ஒன்றை எனக்கு ஏவுங்கள்’ என வேண்டினார். அதற்கு நபியவர்கள் ‘நான் அல்லாஹ்வை நம்பிவிட்டேன் என்று கூறிய பிறகு அதிலேயே நீர் நிலைத்து நிற்பீராக!’ என இவ்வாறு கூறினார்கள்.” (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் சுப்யான் ஸகபீ (ரலி), நூல் : அஹ்மது)

‘நிலைத்து நிற்பது என்றால், கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுவது’ என அலி (ரலி) கூறுகிறார்கள்.

‘தொழுகை என்பது முஸ்லிமான ஆண்களும், பெண்களும் பருவ வயதை அடைந்ததிலிருந்து மரணம் ஏற்படும் வரைக்கும் நிறைவேற்ற வேண்டிய கடமை. இது ரமலானில் மட்டும் நிறைவேற்றும் கடமை அல்ல.

ஒரு செயலுக்கு இறைவனிடம் சிறந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டுமானால் அதை ஒழுங்காகவும், நிரந்தரமாகவும் செய்ய வேண்டும்.

‘குறைவாக செய்தாலும் நிரந்தரமாக செய்யும் காரியமே இறைவனிடம் பிரியமானதாக உள்ளது’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), புகாரி)

தொழுகையிலும், ரமலான் கற்றுத்தந்த இதர காரியங்களிலும் நாம் நீடித்து ஆயுள்வரை செய்வோம்! பேணிக் காப்போம்! ரமலான் ஏற்படுத்திய தாக்கத்தை உயிர் உள்ளவரை தக்க வைப்போம்!!

-மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி,

பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன். 

Next Story