கர்த்தருக்கு காத்திருங்கள், அற்புதங்களைக் காண்பீர்கள்


கர்த்தருக்கு காத்திருங்கள், அற்புதங்களைக் காண்பீர்கள்
x
தினத்தந்தி 14 Jun 2018 9:45 PM GMT (Updated: 14 Jun 2018 7:00 AM GMT)

‘கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன், அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்’ (சங்கீதம் 40:1).

நான் இனிக்கர்த்தருக்காகக் காத்திருக்க வேண்டியது என்ன? (II ராஜாக்கள் 6:33).

ஏதோ ஒரு அற்புதத்துக்காகவோ அல்லது ஆசீர்வாதத்துக்காகவோ நீண்ட காலமாய் காத்திருந்து, அது கிடைக்கவில்லையே, என்ற ஆதங்கத்தோடு மேற்கண்ட வசனத்தில் ராஜா குறிப்பிட்டது போல நீங்களும் சில நாட்களாகவே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கலாம். உங்கள் கேள்விகளுக்கு நிச்சயம் அருமை ஆண்டவர் பதில் கொடுப்பார்.

அவசரப்பட்டு தேவனுடைய சித்தத்திற்கு மாறாக செயல்பட ஒருபோதும் இடம் கொடுத்து விடாதீர்கள். அது பல வேதனைகளையும், இழப்புகளையும் கொண்டு வந்துவிடும். உதாரணமாக ‘நீ செய்ய வேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழு நாள் காத்திரு என்றான்’. (I சாமுவேல் 10:18)

அன்றைக்கு சவுலைப் பார்த்து இவ்விதமாய் கூறினார் சாமுவேல்.

ஆனால் அவசரப்பட்டு, சற்றும் காத்திருக்காமல் சாமுவேல் சொல்லாததை, தேவன் விரும்பாததை சவுல் செய்து விட்டான் என I சாமுவேல் 13:8-14 வரை உள்ள வார்த்தைகள் கூறுகிறது. இதனால் அவருடைய ராஜ்யபாரம் நிலைத்து நிற்காமல் போனது.

அநேக வேளைகளில் தேவன் அற்புதம் செய்யும் வரைக்கும் காத்திருக்க மனதில்லாமல் அவசரப்பட்டுச் செய்யும் காரியங்கள் நிமித்தம் பல வேதனைகளையும் கஷ்டங் களையும் சந்திக்கிறோம். ஏற்ற வேளையில் நிச்சயம் கர்த்தர் உங்களுக்கு அற்புதம் செய்வார் என்று மனதார விசுவாசியுங்கள்.

ரட்சிப்பு நிறைவேற காத்திருங்கள்

‘கர்த்தாவே, உம்முடைய ரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன்’. (ஆதியாகமம் 49:18)

மேற்கூறிய வார்த்தையை அன்றைக்கு யாக்கோபு கூறினார். இன்றைக்கு உலக மனிதர்கள் தங்கள் காரியங்களுக்காக காத்திருக்கத் தயங்குவதில்லை.

ஆனால் தேவ பிள்ளைகளோ கர்த்தருக்கடுத்த காரியத்தில் காத்திருக்க முடியாமல் ஆசீர்வாதத்தை இழக்கிறார்கள். நீங்கள் பெற்ற ரட்சிப்பு நிறை வேறக் காத்திருக்க வேண்டும். உங்களைச் சார்ந்தவர்கள் நீங்கள் எதிர்பார்த்தபடி ரட்சிப்புக்குள் அவர்கள் வராமல் இருந்தால் சோர்ந்து போகாதீர்கள். நிச்சயம் கர்த்தர் ஏற்ற நேரத்தில் அவர்களை ரட்சிப்பார்.

அதே வேளையில் வசனம் கூறுகிறது, ‘நாம் விசுவாசிகளானபோது ரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமா யிருக்கிறது’ (ரோமர் 13:11).

ஆம், நீங்கள் பெற்ற ரட்சிப்பு சமீபமாய் இருக்கிறது என்பதை மறந்து போகாதீர்கள். ஆகவே தான் முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே ரட்சிக்கப்படுவான் என விசுவாசிக்கிறோம். மட்டுமல்ல, ‘உங்கள் ரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுங்கள்’ என (பிலிப்பியர் 2:12) பவுல் கூறுகிறார்.

ரட்சிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் நீங்கள் அடைந்த சந்தோஷம் இன்று உங்களில் காணப்படுகிறதா? அவ்வாறு இல்லாவிட்டால் மீண்டும் ஆதி அன்புக்குத் திரும்புங்கள்.

ஏனென்றால் ரட்சிப்பு இலவசம் என்றாலும் அது ஒரு அவசரமாகும். ஒரு பக்கம் உங்கள் ரட்சிப்பு நிறைவேற அதிக பிரயாசப்படுங்கள், மறுபக்கம் உங்களைச் சார்ந்தவர் களுடைய ரட்சிப்புக்காக விசுவாசத்தோடு காத்திருங்கள்.

தேவன் நிச்சயம் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார்.

ஜெபத்துக்கு பதில் வரும் வரை காத்திருங்கள்

‘கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன், என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்’ (சங்கீதம் 38:15).

பொதுவாக காத்திருக்கிற நேரம் மிகவும் கடினமான நேரம் தான், என்றாலும் நம்முடைய ஆண்டவர் ஜெபத்தைக் கேட்கிறார். ‘ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்’ (சங்கீதம் 65:2) என தாவீது கூறுகிறார்.

‘நம்முடைய சகல தேவைகளை ஜெபத்தின் மூலம் தேவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும்’ என வேதம் கூறுகிறது. அதே வேளையில் ஏற்ற நேரத்தில் பதில் வராதபோது உடனே நாம் சோர்ந்து போய் விடுகிறோம். ‘கர்த்தாவே உமக்குக் காத்திருக்கிறேன். நீர் மறு உத்தரவு கொடுப்பீர்’ என்பது தான் தாவீதின் விசுவாசம்.

மேலும், ‘கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன், அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்’ (சங்கீதம் 40:1).

சாத்தான் அநேக வேளைகளில் நம்முடைய பொறுமையை இழக்க பலவிதமான அவிசுவாசம், எதிர்மறையான எண்ணங்கள், குழப்பங்களைக் கொண்டு வருவான். என்றாலும் நாம் மனம் தளராமல் என் ஜெபத்திற்கு பதில் வரும்வரை நான் காத்திருப்பேன் என அறிக்கைச் செய்து தேவனை மகிமைப்படுத்துங்கள். நிச்சயம் உங்களுக்கு பதில் வரும்.

‘இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தங்கள் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது’ (சங்கீதம் 123:2).

-சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன்,

‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54. 

Next Story